ஹெலிகாப்டரில் சென்ற ஆந்திர முதல்வர் மாயம் - கடத்தப்பட்டாரா?

Subscribe to Oneindia Tamil
Rajasekhara Reddy
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பயணம் செய்த ஹெலிகாப்டரைக் காணவில்லை. ரெட்டியுடனான தகவல் தொடர்பும் துண்டித்துப் போயுள்ளது. இதனால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவ ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கர்னூலிலிருந்து கிளம்பினார்...

ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இன்று காலை சுமார் 8.45 மணிக்கு கர்னூலில் இருந்து சித்தூருக்கு ஹெலிகாப்டரில் கிளம்பினார். அவருடன் ரெட்டியின் செயலாளர் மற்றும் மாநில தலைமைச் செயலாளர் பயணித்தனர். அவர் காலை 10.45 மணிக்கு சித்தூர் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.

ஆனால், 9.25க்கு அவரது ஹெலிகாப்டருடனான ரேடியோ தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. நக்சலைட்டுகள் நிறைந்த நல்லமல்லா காட்டுப் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்து கொண்டிருந்தபோது ராடாரிலிருந்தும் மாயமானது.

அப்போது, கடுமையான சூறைக்காற்றுடன் மழை பெய்து கொண்டிருந்ததால் அந்த ஹெலிகாப்டரைக் கண்டு பிடிப்பது கடினமாகிவிட்டது.

இதனால் பரபரப்படைந்த காவல் துறையினர் ராணுவத்தின் உதவியோடு ஹெலிகாப்டரைத் தேடினர்.

கடைசியில் அந்த காட்டையொட்டிய மிகச் சிறிய கிராமத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் முழு தகவல்களும் கிடைக்கவில்லை. அதேநேரம் முதல்வர் என்ன ஆனார்... என்பதை போலீஸார் உறுதிப்படுத்தவில்லை.

பைலட்டுகள் என்ன ஆனார்கள் என்றும் தெரியவில்லை.

ராணுவம் மற்றும் மாநில போலீசார் தேடுதல் பணியை தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.

இந்தியாவில் இதுவரை இப்படியொரு பகீர் சம்பவம் இந்தியாவில் நடந்ததில்லை. நாடு முழுவதும் இதனால் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.

ரெட்டி பத்திரம் - முதல்வர் அலுவலகம்..

இதற்கிடையே, முதல்வர் ராஜசேகர ரெட்டி இருக்குமிடம் தெரிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முதல்வர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆனால் எங்கிருக்கிறார் என்ற விவரம் மட்டும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக, மோசமான வானிலை காரணமாக ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் கர்னூல் மாவட்டம் பமுலபாடு என்ற இடத்தில் பிற்பகல்வாக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது.

ஆனால் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் வி்மான நிலையம் ஹெலிகாப்டருடனான தொடர்பு 10.13 மணிக்கே இழந்து விட்டது. இதனால் ஹெலிகாப்டர் தரையிறங்கியது உறுதி செய்யப்படவில்லை.

இதுகுறித்து கர்னூல் எஸ்.பி. கூறுகையில், முதல்வர் குறித்து இதுவரை தகவல் இல்லை. பமுலபாடு, பனகரசெர்லா, கரிவனா உள்ளிட்ட பகுதிகளில் தேடி விட்டோம். ஆனால் முதல்வர் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

அதம்கூர் தாலுகா முழுவதும் தீவிரமாக தேடி வருகிறோம். ஹெலிகாப்டர் இறங்கியதாக கூறப்படும் இடத்திற்கு அதிகாரிகள் விரைந்துள்ளனர்.

ராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைப்பு...

ரெட்டி சென்ற ஹெலிகாப்டரைக் கண்டுபிடிக்க முடியாததால், உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டன. பெங்களூரிலிருந்து இரண்டும், ஹைதராபாத்திலிருந்து ஒன்றுமாக மூன்று ஹெலிகாப்டர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

கடத்தப்பட்டாரா...?

முதல்வரின் ஹெலிகாப்டர் மாயமான பகுதி நக்சலைட் ஆதிக்கம் இல்லாத பகுதி என்றாலும் கூட முதல்வருடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதால் அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

முதல்வரை நக்சலைட்டுகள் கடத்தியிருக்கக் கூடுமோ என்ற கோணத்திலும் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, ரெட்டி கர்னூலில் இருக்கிறார். அவர் இருக்கும் பகுதியில் மொபைல் போன் சேவை இல்லை. அவர் பத்திரமாக இருப்பதாகவும், யாரும் கவலைப்பட தேவையில்லை என ஒரு தகவல் வெளியாகியது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற