For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராகுல் காந்தி கூட்டம்- 35 வயதுக்கு மேற்பட்டோர் பங்கேற்க தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: இன்று சென்னைக்கு வரும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை 35 வயதுக்கு மேற்பட்டோர் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி தனது 3 நாள் சுற்றுப்பயணத்தை நேற்று நாகர்கோவிலிலிருந்து தொடங்கினார்.

நாகர்கோவில், நெல்லை, விருதுநகர், மதுரை ஆகிய ஊர்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு தரப்பினரை அவர் சந்தித்தார். அவர் சந்தித்த அனைவருமே 35 வயதுக்குட்பட்டோர்தான். இளைஞர்கள், மாணவர்கள், மீனவர்கள், தலித் சமுதாயத்தினர் ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்தார்.

இன்று காலை ராகுல் காந்தி தஞ்சையில் இளைஞர்களையும், இளம் விவசாயிகளையும் சந்தித்து பேசுகிறார். பின்னர் காலை 10.30 மணிக்கு விழுப்புரத்திலும், மதியம் 12 மணிக்கு வேலூர் சி.எம்.சி. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களையும், மதியம் 1 மணிக்கு இளைஞர்களையும் சந்தித்து பேசுகிறார்.

சென்னை வருகிறார்...

இதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி அரக்கோணம் வந்து அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் ராகுல் காந்தியை வரவேற்கிறார்கள். பின்னர் அங்கிருந்து கார் மூலம் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வருகிறார்.

அங்குள்ள விவேகானந்தர் கலையரங்கில் 3 மணியளவில் அண்ணா பல்கலைக்கழக மாணவ-மாணவிகளை சந்தித்து பேசுகிறார்.

விழாவில் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மன்னர் ஜவஹர் வரவேற்கிறார். அங்கு ராகுல்காந்தி சில நிமிடம் அறிமுக உரையாற்றிவிட்டு பின்னர் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து கார் மூலம் மாலை 4 மணிக்கு சத்தியமூர்த்தி பவன் வந்தடைகிறார். சத்தியமூர்த்தி பவன் தியாகிகள் அரங்கில் நடைபெறும் தமிழ்நாடு காங்கிரஸ் சிறப்பு செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, மத்திய மந்திரி ஜி.கே.வாசன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் மட்டும் மேடையில் ராகுல் காந்தியுடன் அனுமதிக்கப்படுவார்கள்.

இந்த கூட்டம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் இளைஞர் காங்கிரசார் சந்திப்பு நிகழ்ச்சியில், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசுகிறார்.

இந்த கூட்டத்தில் சுமார் 1600 பேர் கலந்து கொள்கிறார்கள். இதில் கலந்து கொள்வதற்காக இளைஞர் காங்கிரஸ் பதவிகளுக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களில் இருந்து அந்த 1600 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு தகுதியான வேட்பாளர்கள் என்ற பெயரில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் 35 வயதுக்குள் இருக்கிறார்களா? என்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இந்த அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது.

35 வயதுக்கு மேற்பட்டவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதில் அவர்களின் புகைப்படம், செல்போன் நம்பர், இ மெயில் முகவரி போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல, 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவும் அனுமதி இல்லை. காமராஜர் அரங்கில் ராகுல்காந்தியுடன் ஜிதேந்திரசிங் எம்.பி., அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசோக் தன்வர் ஆகியோர் மட்டும் மேடையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

மேடையில் சில நிமிடம் பேசிய பின்னர், பல இளைஞர்களிடம் ராகுல்காந்தி நேரடியாக கலந்துரையாடுகிறார். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ராகுல்காந்தி பதில் அளிக்க இருக்கிறார்.

மாலை 6.30 மணிக்கு தாஜ் கன்னிமரா ஓட்டலில் சென்னை பத்திரிகை நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்களை ராகுல்காந்தி சந்தித்து கலந்துரையாடுகிறார். பின்னர் இரவில் ராஜ்பவனில் அவர் தங்குகிறார்.

இளைஞர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் இளைஞர்கள் தவிர மற்ற தலைவர்களுக்கு அழைப்பு இல்லை.

சென்னையில் நடைபெறும் பத்திரிகையாளர்கள் பேட்டியைத் தவிர ராகுல்காந்தி கலந்து கொள்ளும் வேறு எந்த நிகழ்ச்சிக்கும் பத்திரிகை, டெலிவிஷன் நிருபர்கள், போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர்கள் ஆகியோருக்கு அனுமதி இல்லை.

சென்னையில் ராகுல் காந்தி பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் அனைத்தும் நேற்று மாலையே போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அந்த இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுலின் இன்றைய நிகழ்ச்சிகள்..

8 மணி- தஞ்சையில் இளைஞர்களுடன் சந்திப்பு

9.30 - இளம் விவசாயிகளுடன் சந்திப்பு

10.30 - விழுப்புரம் இளைஞர்களுடன் சந்திப்பு

பிற்பகல் 12 மணி - வேலூர் சி.எம்.சி. கல்லூரி மாணவர்கள் மற்றும் இளம் மருத்துவர்களுடன் சந்திப்பு

1 - வேலூர் இளைஞர்களுடன் சந்திப்பு

3 - சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு

மாலை 4 மணி - சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் சிறப்பு செயற்குழு கூட்டம்

5 - சென்னை காமராஜர் அரங்கில் இளைஞர்களுடன் சந்திப்பு

6.30 - சென்னை தாஜ் கன்னிமரா ஓட்டலில் பத்திரிகை நிறுவனர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் சந்திப்பு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X