தமிழர் நலன் குறித்து இந்தியா உறுதியான அக்கறையுடன் உள்ளது - மன்மோகன்
சென்னை: இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் மீள் குடியேற்றம் தொடர்பாக இந்தியா அக்கறையுடனும், உறுதியுடனும் உள்ளது. இதற்காக ரூ. 500 கோடியில் உதவித் திட்டங்களை செயல்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
முகாம் தமிழர்கள் நிலை குறித்து சமீபத்தில் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்குப் பதிலளித்து பிரதமர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் பிரதமர் கூறியிருப்பதாவது:
மீனவர்கள் காணாமல் போனது தொடர்பாகவும், இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நிலை தொடர்பாகவும் கடந்த ஆகஸ்ட் 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் தாங்கள் எழுதிய கடிதங்கள் கிடைத்தன.
மீனவர்கள் பிரச்சினையை பொருத்தவரை, வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தினர், அங்கு இந்திய மீனவர்கள் மூவர், வங்கதேச போலீசார் வசம் பாதுகாப்பாக உள்ளதை உறுதி செய்துள்ளார்கள். அவர்களை விரைவில் தாயகம் அனுப்பி வைக்குமாறு அந்நாட்டு அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். மீதமுள்ள 5 இந்திய மீனவர்களை தேடிக் கண்டுபிடித்து தரும்படியும், அது தொடர்பாக தகவல் கிடைத்தால் சொல்லும்படியும் வங்கதேச அரசிடம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
இலங்கை தமிழர்களை பொருத்தவரை, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தமிழர்களின் நலன் தொடர்பாக தங்களுக்கு உள்ள வருத்தத்தை நாங்களும் பகிர்ந்து கொள்கிறோம். இலங்கை தமிழர்களை மீண்டும் அவர்களது சொந்த இடத்தில் குடி அமர்த்துவது தொடர்பாக எங்கள் கவலையை இலங்கை அரசிடம் பலமுறை தெரிவித்து, அதனை விரைந்து செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி வருகிறோம்.
தமிழர்களின் சட்டரீதியான பிரச்சினைகளை, ஒன்றுபட்ட இலங்கையின் சட்ட திட்டத்துக்குட்பட்டு, தீர்த்து வைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறோம்.
வடஇலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் முக்கியத்துவம் அளித்து பணியாற்றி வருகிறோம். இந்தியா போதுமான அளவுக்கு மனிதாபிமான முறையிலான உதவிகளை அவர்களுக்கு அளித்து வருகிறது. அங்கு நம்மால் அமைக்கப்பட்ட கள மருத்துவமனை மூலம் 38 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழர்கள் மீண்டும் குடி அமர்த்தப்படுவதற்கு வசதியாக, கண்ணிவெடிகளை அகற்றும் நமது குழுக்கள் அங்கு பணியாற்றி வருகிறார்கள். மீண்டும் குடி அமர்த்தப்படுவதற்கு தேவையான பொருள்களை நாம் அனுப்பி வைத்துள்ளோம். இலங்கை தமிழர்களுக்காக நிவாரண பொருள்களை அனுப்பியதில் தமிழக அரசின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. இது இலங்கை தமிழர்களுக்கு மிகவும் ஆறுதல் அளிப்பதாக இருந்தது.
இலங்கையில் தமிழர்கள் தங்கள் வசிப்பிடங்கள் மீண்டும் குடி அமர்த்தப்படுவதற்கு தேவையான வாழ்வாதார வசதிகள், ரெயில் பாதை அமைப்பது போன்ற கட்டமைப்பு வசதிகள், விவசாயத்துக்கு புத்துணர்ச்சி அளிப்பதற்கான வசதிகள், வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை அளிப்பது போன்றவற்றுக்காக ரூ.500 கோடியிலான திட்டங்கள், செயல்படுத்தப்படுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்களுக்காக, வெளிநாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்கள் அனுப்பிய நிவாரண பொருள்கள், தமிழர்களுக்கு அளிக்கப்பட்டதா? என்று தாங்கள் கடிதத்தில் கேட்டிருந்தீர்கள். இந்திய ரெட் கிராஸ் சங்கத்தின் மூலம், அந்த நிவாரணப் பொருள்கள் இலங்கை ரெட் கிராஸ் சங்கத்திடம் வழங்கப்பட்டுவிட்டது. அதனை இலங்கை அரசு சரிபார்த்து, விரைவில் இலங்கை தமிழர்களுக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.