For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திரையுலகினர் முகத்தில் புன்னகை: என் கடமை-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi at AIFEC Award Funtion
சென்னை: சினிமா கலைஞர்கள் முகத்தில் புன்னகையை வரவழைப்பதே தனது கடமை என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் நடந்த அகில இந்திய திரைப்பட தொழிலாளர் மாநாட்டில் கருணாநிதிக்கு "உலக கலை படைப்பாளி" என்ற விருது வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக் கொண்ட கருணாநிதி பேசுகையில்,

இங்கு ரஜினிகாந்த் பேசும்போது கடந்த கால ஆட்சியில் வழங்கப்பட்ட நிலத்தை அவர்கள் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். நான் அந்த நிலத்தை பற்றி எதுவும் குறிப்பிட விரும்பவில்லை.

பயன்படுத்தக் கூடிய சந்தர்ப்பம் எப்போது வரும் என்று என்னால் ஆரூடம் கணிக்க முடியாது. ஆனால் கடந்த சில நாட்களாக குகநாதனும், மற்ற நண்பர்களும் என்னை சந்தித்து, இந்த நிகழ்ச்சிக்கு முன்பே திரைப்பட தொழிலாளர்களுக்கு வாழ வீடு, வசிக்க குடில் தேவை என்பதை வற்புறுத்தி சொல்லியிருக்கின்றார்கள்.

அது என்னுடைய இதயத்தில் சிறிதளவும் மாறாமல், மறக்க முடியாமல் பதிந்திருக்கிறது. அதை நிறைவேற்றி அவர்களுடைய முகத்தில் எல்லாம் புன்னகையை வரவழைப்பதுதான் என்னுடைய கடமை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.

இதைப்பற்றி சொல்ல வேண்டுமேயானால், ஆந்திரத்திலே திரைப்படத் தொழிலாளர்களுக்காக சித்திரபுரி என்ற ஒரு பகுதியை 'ஆந்திர பிரதேஷ் சினி ஒர்க்கர்ஸ் கோ ஆப்பரேட்டிவ் சொசைட்டி லிமிடெட்' என்ற நிறுவனத்தின் மூலமாக மிக அழகான வீடுகளை கட்டி பலரும் வாழ்வதற்கு ஏற்ப வசதிகள் செய்து ஹைதராபாத் மணிகொண்டா என்ற இடத்தில் பிரபாகர் ரெட்டி சித்திரபுரி அமைக்கப்பட்டு அதனுடைய மாடலை சிலர் நேற்று என்னிடத்தில் காட்டினார்கள்.

இதைப் பார்த்தவுடன் நான் அவர்களிடத்திலே சொன்னது இதைப் போல நம் திரைப்படத் தொழிலாளர்களுக்கும் தமிழ்நாட்டில் கட்டித் தரலாமே என்று சொன்னேன்.

இதில் எனக்கு அவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கு உதாரணம், சொன்னதோடு நிற்காமல் இதை இங்கே கொண்டு வந்து, குகநாதனிடமும் மற்றும் திரைப்படத் தொழிலாளர்களின் தலைவர்களிடத்திலும், திரைப்படக் கலைஞர்களிடத்திலும் காட்ட வேண்டுமென்பதற்காகவே வீடுகள் அடங்கிய அந்தப் புகைப்பட அட்டையை எடுத்துக் கொண்டு வந்தேன்.

இதை நான் உங்களிடம் இப்போது காட்டியிருக்கிறேன். அடுத்து சில மாதங்களுக்குப் பிறகுசில காலத்திற்குப் பிறகு இன்னொரு தேர்தல் வருவதற்கு முன்பே"சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம்" என்ற அந்த என்னுடைய முழக்கத்தைமெய்ப்பித்துக் காட்டிஅந்த இல்லங்களின் திறப்பு விழா இன்றைக்கு இந்த மேடையிலே வீற்றிருக்கின்ற அத்தனை பேரையும் கொண்டுஇவர்களையெல்லாம் அழைத்துஇதே இடத்தில் நடைபெறும் என்பதையும்அந்தத் திறப்பு விழாவிற்கு நீங்கள் எல்லாம் வர வேண்டும் என்பதையும் இப்போதே அழைப்பாக நான் விடுக்க விரும்புகிறேன். வெகு விரைவில் இந்த கட்டிடங்கள் அமைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

ஓவிய உலகமாக...

'சித்திரபுரி' என்ற பெயருடன் இங்கும் அமையுமா என்று கேட்பீர்களேயானால், 'சித்திரம்' வடமொழி என்பதால், அதற்குப் பதிலாக 'ஓவியம்' போன்றதொரு சொல்லைப் பயன்படுத்திஓவிய உலகமாக அதனை அமைத்து அதிலே என்னுடைய அருமைத் தொழிலாளர்களை அமரவைத்து அழகு பார்க்கின்ற காலம் விரைவில் வந்தே தீரும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கு நீங்கள் எதுவும் கட்டணம் செலுத்த வேண்டுமா அல்லது நன்கொடை வழங்க வேண்டுமா என்றெல்லாம் கேள்வி கேட்கத் தேவையில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரையில் இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற "மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை" நீங்கள் அறிவீர்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம்ஒரு இன்சூரன்ஸ் திட்டம். இன்சூரன்ஸ் திட்டத்திற்கு 'பிரிமியம்' கட்ட வேண்டும். யார் இன்சூரன்ஸ் செய்து கொள்கிறார்களோ, அவர்கள் அந்த பிரிமியத்தைக் கட்ட வேண்டும்.

இப்படி கட்டினால், அவர்களுக்கு தீராத நோய் அல்லது உயிர் கொல்கின்ற நோய் வரும் போதுஅதற்குரிய செலவினை இந்த இன்சூரன்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொண்டுஅந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பிரிமியத் தொகையை அரசாங்கமே ஏற்றுக் கொண்டு அவர்களை காப்பாற்றுகின்ற திட்டத்திற்குப் பெயர் தான் கலைஞர் காப்பீட்டு திட்டம்.

இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இதுவரை 4000 அல்லது 5000 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் எல்லாம் நடைபெற்று அவர்கள் எல்லாம் நலமோடு இருக்கிறார்கள் என்ற செய்தியை உங்களுக்கு நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரீமியத்தையும் அரசு கட்டும்...

அந்த திட்டம் ஆந்திராவிலே இருப்பதாக இங்கே பேசிய நம்முடைய தாசரி என்னிடத்திலே சொன்னார்கள். அந்த திட்டத்திற்கு பிரீமியம்ஒவ்வொரு பயனாளியும் கட்ட வேண்டும். ஆனால் இந்த திட்டத்திலேதமிழகத்திலே அந்த பிரீமியம் தொகையை அரசே கட்டிவிடும் என்று திட்டம் வகுத்து அது இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆண்டு ஒன்றுக்கு 572 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் அந்த திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தொழிலாளர்களின் உயிர் காத்தால் மட்டும் போதாது, உயிர் காக்க அவர்களுடைய உடைமைகளையும் காக்க வேண்டும், அவர்களுடைய உடைமைகளைக் காக்க அவர்களுடைய உறையுளும் காக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட உறையுள் அமைய நிச்சயமாக என்னுடைய தலைமையிலே உள்ள திமுக அரசு பாடுபடும் என்ற வாக்குறுதியை இவ்வளவு பேர் மத்தியிலே பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் மத்தியிலே என்று மாத்திரம் சொல்ல மாட்டேன்இந்திய மக்கள் மத்தியிலே இன்றைக்கு நான் சொல்லியிருக்கின்றேன்.

கட்சி வளரும் வேகத்தைப் பார்த்தால்...

நான் கடந்த சில நாட்களாக மதுரையில், கோவையில், திருச்சியில் பேசும்போதுஎங்கள் கட்சி இப்போது வளருகின்ற வேகத்தைப் பார்த்தால் விரைவில் இது தேசிய இயக்கமாக மாறும் என்று சொன்னேன்.

தேசியத்தின் இனிமை...

இந்த தேசியத்தில் எவ்வளவு இனிமை இருக்கிறது. இந்த தேசியத்தில் எவ்வளவு கலை உணர்வு இருக்கிறது, நான் ராஜேஷ் கன்னாவின் பல படங்களைப் பார்த்திருக்கிறேன். எனக்கு அவரிடம் ஒரு தனி அபிமானம் உண்டு. இன்றைக்கு அவருடைய பேச்சைக் கேட்கும் போது அவரா இவர் என்று பாரதிராஜாவைக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.

காரணம் அந்த அளவிற்கு வயது முதிர்ந்திருந்தாலும், முதுமை அவரைத் தாக்கியிருந்தாலுங்கூட, அந்த குரல் இன்றைக்கும் என்னுடைய நண்பர் சிவாஜியின் குரலாகவே இருப்பதைப் பார்த்தேன். அத்தகைய ராஜேஷ் கன்னாக்களை இன்று மலையாளத்திலே பிரபல நட்சத்திரமாக விளங்குகின்ற மம்முட்டியை இங்கே சந்திக்கும் இந்த நேரத்தில்நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.

விருது ஒரு கேடா...

அழைத்தீர்கள்; வந்தேன். விருது வழங்கினீர்கள். இந்த விருதினை வழங்கும்போது குகநாதன், 'உனக்கு என்ன, விருது கேடா' என்று யார் யாரோ கேட்டதாக சொன்னார். நான் அப்போதே பாரதிராஜாவிடம் சொன்னேன்வேண்டாம் என்று சொன்னவர்களைப் பற்றியெல்லாம் இங்கே சொல்ல வேண்டாமே? என்றேன். இருந்தாலும் அவர் பேசிவிட்டார்.

நான் எப்போதும் இது போன்ற விமர்சனங்களை பற்றி விமர்சிப்பது எனக்கு வழக்கம் இல்லை. அப்படி விமர்சிப்பது எனக்கு பிடிக்காது. ஏனென்றால், பெரியார் படாத பாடா? காமராஜர் படாத பாடா? அண்ணா படாத பாடா? இவர்களை எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்து, இன்னும் பாக்கியிருக்கின்றது நமக்கு படவேண்டிய பாடுகள் என்று எண்ணிக்கொள்வேனே தவிர அதற்காக நான் வருத்தப்படமாட்டேன்.

அப்படியே எனக்கு வருத்தம் இருந்தாலும், நீங்கள் தருகின்ற இந்த மகிழ்ச்சி- நீங்கள் வழங்குகின்ற இந்த விருதுகள் எல்லாம்- அந்த வருத்தத்தைப் போக்க வல்லவை. போக்கக்கூடிய மருந்துகள் என்பதை நான் மிக மிக நன்றாக அறிவேன். இந்த மருந்தை எனக்களித்து என்னுடைய பயணத்திலே களைப்பு ஏற்படாமல் என்னை நடக்கச் செய்கின்ற உங்களுக்கெல்லாம் என்னுடைய நன்றியை-ஆயிரமாயிரம் நன்றியை உங்கள் காலடியிலே குவித்து விடைபெறுகிறேன் என்றார் முதல்வர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X