For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக-காங் குழு சென்னை திரும்பியது: விமான நிலையத்தில் கருணாநிதி வரவேற்பு!

Google Oneindia Tamil News

கொழும்பு: கடந்த 4 நாட்களாக இலங்கையின் பல்வேறு முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்திய திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் குழு தங்கள் 5 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை சென்னை திரும்பியது.

அவர்களை முதல்வர் கருணாநிதி சென்னை விமான நிலையம் சென்று வரவேற்றார்.

இலங்கையில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களின் நிலை குறித்து ஆராய திமுக தலைமையிலான கூட்டணிக் குழு எம்.பிக்கள் அங்கு சென்றிருந்தனர்.

டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற இக்குழுவில் மொத்தம் பத்து எம்.பிக்கள் இடம் பெற்றிருந்தனர்.இவர்களில் 9 பேர் திமுக மற்றும் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள். 10வது நபர் தொல். திருமாவளவன் ஆவார்.

இந்தக் குழு யாழ்ப்பாணம், வன்னி முகாம்கள் ஆகியவற்றுக்குச் சென்றது. மலையகத் தமிழர்களையும் ஹட்டன் நகருக்குச் சென்று சந்தித்தனர். பின்னர் கொழும்பு திரும்பி அதிபர் ராஜபக்சே, அவரது தம்பி கோத்தபயா ராஜபக்சே, வெளியுறவுத்துறை செயலாளர் ரோஹித பொகல்லகாமா உள்ளிட்டோரையும் சந்தித்தனர்.

தங்களது இலங்கை பயணத்தை முடித்துக் கொண்டு இன்று மாலை திமுக கூட்டணிக் குழு சென்னை திரும்பியது.

மாலை 4 மணியளவில் சென்னை திரும்பிய இக்குழுவை முதல்வர் கருணாநிதி விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

தாங்கள் முகாம்களில் கண்டதையும், அங்குள்ள தமிழர்கள் கூறிய குறைகளையும், ராஜபக்சேவுடனான சந்திப்பின் போது நடந்த பேச்சு வார்த்தையின் விவரங்களையும் அறிக்கையாக தயாரித்து முதல்வர் கருணாநிதியிடம் இந்த குழுவினர் வழங்கவுள்ளனர்.

அகதிகள் முகாம்கள் குறித்து இந்தக் குழு அதிபர் ராஜபக்சேவிடம் திருப்தி தெரிவி்த்ததாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக கூட்டணிக் குழு கொடுக்கப் போகும் அறிக்கை எப்படி இருக்கும் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கருணாவை சந்திக்க மறுப்பு...

முன்னதாக, தமிழகத்திலிருந்து சென்றுள்ள திமுக கூட்டணிக் குழு, யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட பயணத்துக்கான ஏற்பாடுகளை விடுதலைப் புலிகளின் பரம வைரிகளில் ஒருவரான டக்ளஸ் தேவானந்தா செய்து கொடுத்தார்.

அதேபோல கிழக்கு மாகாணத்துக்கான பயண ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு கருணாவிடம் தரப்பட்டிருந்ததாம்.

ஆனால் கருணாவுடன் எந்தத் தொடர்பையும் வைத்துக் கொள்ள திமுக கூட்டணிக் குழு விரும்பவில்லையாம். அவரை சந்திப்பது, அவரது ஏற்பாட்டின்படி செல்வது போன்றவை தமிழகத்தில் பெரும் சிக்கலை தங்களுக்கு ஏற்படுத்தும் என்று திமுக கூட்டணிக் குழு சார்பாக இலங்கை அரசுக்குத் தெரிவிக்கப்பட்டதாம்.

இதனால் இலங்கை அரசு அதிருப்தி அடைந்ததாம். கருணா வேண்டாம் என்றால் கருணாவின் பிரதேசத்துக்கும் (கிழக்குக்கும்) அவர்கள் போகத் தேவையில்லை என்று கூறி திமுக கூட்டணிக் குழுவினரின் கிழக்கு மாகாண பயணத் திட்டத்தையே இலங்கை அரசு ரத்து செய்து விட்டதாம்.

நேற்று ராஜபக்சேவை திமுக கூட்டணிக் குழு சந்தித்தபோது கூட அங்கு கருணா இருக்கவில்லை.

பிள்ளையான் சந்தித்தார்...

கருணாவை சந்திக்க திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழு எம்.பிக்கள் மறுத்து விட்டபோதிலும், கருணாவின் முன்னாள் தோழரும், தற்போதைய கிழக்கு மாகாண முதல்வருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்பப்படும் பிள்ளையான், திமுக காங்கிரஸ் கூட்டணிக் குழு உறுப்பினர்களை கொழும்பில் சந்தித்துப் பேசினார்.

கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் வந்து திமுக - காங்கிரஸ் கூட்டணிக் குழுவினரை பிள்ளையான் சந்தித்தார்.

அப்போது, கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலவரம், அங்குள்ள மக்களின் மறு குடியமர்த்தல் விவகாரங்கள், மாகாண சபை உருவாக்கப்பட்டதன் பின்னர் மக்களின் வாழ்வாதார முன்னேற்றங்கள் குறித்து தூதுக் குழுவினரிடம் எடுத்துரைக்கபப்ட்டது.

திருமாவளவன் தொலைந்திருப்பார்-ராஜபக்சே:

இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கொழும்பில் திமுக - காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் எம்.பிக்கள் ராஜபக்சேவை போய்ச் சந்தித்தனர். பொன்னாடை போர்த்தினர். முகம் முழுக்க சிரிப்புடன் அவருடன் உரையாடினர். அவர்களுடன் திருமாவளவனும் இருந்தார்.

அப்போது திருமாவளவனைக் காட்டி, கனிமொழியிடம் ராஜபக்சே கூறுகையில், இவர் (திருமாவளவன்) பிரபாகரனின் நெருங்கிய நண்பர். ஆதரவாளர். நல்லநேரம் பிரபாகரனின் கடைசிக் காலத்தில் இவர் தமது நண்பருடன் இருக்கவில்லை. அதனால் தப்பி விட்டார்.

பிரபாகரனுடன் இருந்திருப்பாரேயானால் இவரும் தொலைந்திருப்பார் பலத்த சிரிப்புடன் ராஜபக்சே கூற, அதை சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தாராம் திருமாவளவன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X