For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலக தமிழ் செம்மொழி மாநாடு-அதிமுக, மதிமுக புறக்கணிப்பு

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: கோவையில் நடக்கும் உலக தமிழ் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

2010ம் ஆண்டு ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை, தான் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கருணாநிதி அறிவித்திருக்கிறார். சரியாக ஒரு மாதத்திற்கு முன் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாநாட்டில், 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் கோவையில் 9வது உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்று கருணாநிதி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளிவந்தவுடன், உலகத் தமிழ் மாநாடுகள் அனைத்தும் சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் சார்பில் தான் நடத்தப்படுகின்றன என்பதை நான் சுட்டிக்காட்டினேன். உலகத் தமிழ் மாநாட்டை அறிவிக்க வேண்டியது சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம்தான்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த கருணாநிதிக்கோ அல்லது திமுக அரசுக்கோ எந்த அதிகாரமோ, உரிமையோ இல்லை. ஏற்கெனவே நான் தெரிவித்தவாறு, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் ஆதரவில்லாமல், அனுமதியில்லாமல், தன்னிச்சையாக 2010ம் ஆண்டு மாநாடு நடத்தப்படுமானால், அது 9வது உலகத் தமிழ் மாநாடு என்ற தகுதியை பெற முடியாது என்பதை ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தேன்.

மேலும் உலகத்தில் உள்ள தமிழர்கள் அனைவரும் துன்பத்தில், துயரத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதையும் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

1966ம் ஆண்டு முதல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்திய மலேசிய தமிழர்கள் இன்று அந்த நாட்டின் இரண்டாம் தர குடிமக்களாக தரம் தாழ்த்தப்பட்டிருப்பதை உணர்ந்து சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு, தங்களுடைய உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், மலேசியத் தமிழர்கள் தெருக்களுக்கு வந்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்த போது, அந்தநாட்டு அரசாங்கத்தால் கொடூரமான முறையில் நசுக்கப்பட்டனர்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் 80,000க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இலங்கையிலிருந்து தப்பியோடி அயல் நாடுகளில் தஞ்சம் அடைந்து அற்ப சம்பளத்தில் ஆபத்தான நிலையில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு லட்சம் இலங்கைத் தமிழர்கள் அகதிகளாக இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில், குடும்ப உறுப்பினர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், தங்கள் சொந்த மண்ணிலிருந்து வெளியேற்றப்பட்டு, உள்ளுரிலேயே இடம் பெயர்ந்த மக்கள் என்ற பெயரில் கம்பிகளால் ஆனவேலி போடப்பட்ட இலங்கை முகாம்களில் சுகாதாரமின்றி, மனிதர்கள் வாழவே முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த மக்கள்தான் 1974ம் ஆண்டு யாழ்பாணத்தில் நான்காவது உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்கள். இந்தக் காரணங்களினால், தற்போது ஒரு உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலை நிலவவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருந்தேன்.

சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் அனுமதியை பெறுவதற்காக அதன் தலைவரும், ஜப்பானிய கல்வியாளரும், தமிழ் மொழியில் மேதையுமான பேராசிரியர் நோபோரு கராஷிமா அவர்களை தொடர்பு கொண்டிருப்பதாக கருணாநிதி பதில் அளித்தார்.

ஆனால், பேராசிரியர் கராஷிமாவின் பதில் என்ன என்று சொல்லவில்லையே?.

நான் குறிப்பிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் அனுமதியை தமிழ் மொழி மற்றும் தமிழ் மக்கள் மீது உண்மையான பற்றுள்ள ஜப்பானிய பேராசிரியர் மிகத் தெளிவாக மறுத்திருப்பார் என்றே தெரிகிறது.

ஆனால், கருணாநிதி இதை ஏற்றுக் கொள்ளவில்லை. மாநாட்டில் அளிக்கவிருக்கும் ஆராய்ச்சி அறிக்கைகளை தயார் செய்வதற்குகால அவகாசம் தேவை என்று உலகத்தில் உள்ள தமிழ் அறிஞர்கள் கேட்டுக்கொண்டதன் காரணமாக, அதற்கு மதிப்பளித்து மாநாடு ஒத்தி வைக்கப்பட்டதாக கருணாநிதி அறிவித்தார்.

தமிழ் அறிஞர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றும் பொருட்டு மாநாடு 2010ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது என்று அறிவித்துள்ளார்.

தற்போது நடந்திருப்பது என்னவென்றால், 9வது உலகத் தமிழ் மாநாடு கைவிடப்பட்டுவிட்டது. சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் ஓரம் கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.

சட்டமன்றத் தேர்தல்கள் வரும் சமயத்தில், தானும் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் மாநாட்டை நடத்தினேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகவே இது போன்றதொரு மாநாட்டை கருணாநிதி அடுத்த ஆண்டு நடத்துகிறார்.

இதற்கு முன், 1968ம் ஆண்டு அண்ணா ஆட்சி புரிந்த காலத்திலும், 1981ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிப் புரிந்த காலத்திலும், 1995ம் ஆண்டு நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் தமிழ்நாட்டில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றன.

ஐந்து முறை முதல்வராகப் பொறுப்பேற்று, 15 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வர் பதவியை வகித்துக் கொண்டு, தமிழ் மொழியின் பாதுகாவலர் என்று கூறும் கருணாநிதிக்கு ஒரு உலகத் தமிழ் மாநாட்டைநடத்த வேண்டும் என்ற நினைப்பே இதற்கு முன் வரவில்லை.

கடைசி முயற்சியாக இந்த மாநாட்டை நடத்துகிறார் கருணாநிதி. கருணாநிதியின் வழிக்கு சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கம் வரவில்லை என்பதால், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற புதிய பெயரை வைக்க கருணாநிதி தற்போது முடிவு செய்திருக்கிறார்.

நான் எழுப்பிய பிரச்சினைகளுக்கு எல்லாம் கருணாநிதி முதலில் பதில் சொல்லியாக வேண்டும். இதை மனதில் வைத்துத்தான், இலங்கையில் உள்ள நிலைமைகளை கண்டறிய ஆளும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு அங்கு அனுப்பப்பட்டது.

இந்தக் குழு அங்கிருந்து வந்தவுடன், இலங்கைக்கு உள்ளேயே இடம் பெயர்ந்த 58,000 தமிழர்கள் முகாம்களிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தது.

ஆனால், இது போன்ற விடுவிப்புகள் எதுவும் நடைபெறவில்லை என்று இலங்கையிலிருந்து வரும் சுயேட்சையான அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குழு என்ன சாதித்தது?. கருணாநிதியின் மகள் கனிமொழி, தன் கையில் ராஜபக்சே கிடைத்தால் அவரை கொன்று விடுவேன் என்று கூறிய தொல்.திருமாவளவன் ஆகியோர் இலங்கை அதிபரிடம் இருந்து பரிசுப் பொருட்களை பெற்றது தான் மிச்சம்.

இலங்கைத் தமிழர்களின் மறுகுடியமைப்பிற்கும், மறுவாழ்விற்கும் இந்திய அரசாங்கம் மேலும் 500 கோடி ரூபாயை இலங்கைக்கு அளிக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை வைத்து அறிவிக்கச் செய்திருக்கிறார் கருணாநிதி.

ஏற்கெனவே இலங்கை அரசுக்கு அனுப்பிய தொகை என்னவாயிற்று?. எத்தனை இலங்கைத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது?. இது போன்ற வஞ்சகச் செயலின் மூலம் உலகத்தில் உள்ள அனைத்துத் தமிழர்களையும் கருணாநிதி ஏமாற்ற நினைக்கிறாரா?.

'டமாரம்' அடித்து பேசப்பட்ட 9வது உலகத்தமிழ் மாநாடு என்பது, தற்போது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடாகிவிட்டது. நாளைக்கு இது கருணாநிதியின் தமிழ் மாநாடாகக்கூட மாறலாம்.

அதனை ஏற்புடையதாக ஆக்குவதற்கும், மாநாட்டுக்கென அமைக்கப்பட்டுள்ள பல்வேறு குழுக்களில் நானோ அல்லது என் சார்பில் சில பிரதிநிதிகளோ இடம்பெற வேண்டுமென்று கருணாநிதி கேட்டுக் கொண்டிருக்கிறார். இது போன்ற நேர்மையற்ற, திட்டத்தில் நான் என்னை இணைத்துக் கொண்டு, என்னுடைய மதிப்பை அந்த அளவிற்கு நானே குறைத்துக் கொள்வேன் என்று கருணாநிதி உண்மையாகவே நம்புகிறாரா?.

கருணாநிதியால் நடத்தப்பெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்பது, சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் உலகத்தமிழ் மாநாடு வரிசையில் இடம் பெறாததால், இந்த மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எனவே திமுக அரசால் நடத்தப்படும் இந்த உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அதிமுக புறக்கணிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

மதிமுகவும் பங்கேற்காது- வைகோ:

அதே போல உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் மதிமுகவும் பங்கேற்காது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் வைகோ இதைத் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X