For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் சுருதி குறைகிறது-ஜெயலலிதா

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடப்பதால் மதுரையில் நடக்கவிருந்த கண்டனப் பொதுக் கூட்டத்தை ரத்து செய்துவிட்டதாகக் கூறும் கருணாநிதி, சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு அதே உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்தபோது அதற்காக 'பந்த்" நடத்தியது எப்படி கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு பிரச்சனையில் திமுக அரசின் நிலைப்பாடு நாளுக்கு நாள் பலவீனம் அடைந்து வருவதையும்,

இப்பிரச்சினையில் கருணாநிதியின் சுருதி நாளுக்கு நாள் இறங்கிக் கொண்டே வருவதையும் பார்க்கும்போது, தமிழக மக்களின் உரிமைகள் மற்றும் தேவைகள் குறித்து இந்த அரசுக்கு அடியோடு அக்கறை இல்லை என்பது தெளிவாகிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தன் கட்சியினுடைய நிலையை வெளிப்படுத்தும் வகையில் மதுரையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தப் போவதாக 21.10.2009 அன்று உரத்த குரலில் கூறிய கருணாநிதி முல்லைப் பெரியாறு பகுதியில் கேரளாவின் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய புதிய அணையை கட்டுவதற்கு முன் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுப் பணியை நடத்த கேரள அரசுக்கு அனுமதி கொடுத்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை இணையமைச்சர் ஜெயராம் ரமேஷை கண்டிக்கும் வகையில் நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்தில், தானே கலந்து கொள்ளப் போவதாக வீரதீரமான அறிவிப்பை வெளியிட்டார்.

மறுநாளே, மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ராசாவின் கட்டுப்பாட்டிற்குள் வரும் தொலைத் தொடர்புத்துறை அலுவலகங்களில் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் வேண்டுகோளுக்கிணங்க, சிபிஐ சோதனை நடத்துகிற செய்திகள் வெளிவந்தன.

இதையடுத்து ஒரே நாளில் கருணாநிதி தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டுவிட்டார். மதுரையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டம் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேசையோ அல்லது மத்திய அரசையோ கண்டிக்கும் நிகழ்ச்சி அல்ல என்று மெல்லிய குரலில் தெரிவித்தார்.

இதற்குப் பதிலாக, புதிய அணை கட்ட ஏற்பாடு செய்யும் கேரள அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஒரு கண்டனப் பொதுக் கூட்டம்தான் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், “கேரளாவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதி கொடுத்ததற்காக ஜெயராம் ரமேஷை எதிர்த்து திமுக கண்டனப் பொதுக்கூட்டம் நடத்தும்போது, ஸ்பெக்ட்ரம் ஊழலை எதிர்த்து காங்கிரஸ் கட்சி ஏன் கண்டனப் பொதுக் கூட்டம் நடத்தக்கூடாது?" என்று ஒரு மூத்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் (ஈவிகேஎஸ் இளங்கோவன்) வினவினார்.

அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த கேரள முதல்வர் அச்சுதானந்தன், “நீண்ட நாட்களுக்கு முன்பே புதிய அணை கட்டுவதற்கான ஆய்விற்கு தன்னுடைய ஒப்புதலை அளித்துவிட்டார் கருணாநிதி. தற்போது தேவையற்ற குழப்பங்களை, வீணான பரபரப்புகளை ஏன் உருவாக்கிக் கொண்டிருக்கிறார் என்று தெரியவில்லை" என்று கூறியிருக்கிறார்.

28.10.2009 அன்று இரவுதான் முல்லைப் பெரியாறு வழக்கு உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருப்பதை தனக்கு வசதியாக நினைவுபடுத்திக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.

முல்லைப் பெரியாறு வழக்கு நீண்ட நாட்களாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கிறது என்ற காரணத்தைக் காட்டி, மதுரையில் நடக்கவிருந்த கண்டனப் பொதுக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.

அதே சமயத்தில், சேது சமுத்திர திட்டம் குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்தபோதே அதை எதிர்த்து 'பந்த்" நடத்தியதை கருணாநிதி வசதியாக மறந்துவிட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X