For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2020ம் ஆண்டுக்குள் 25 சதவீத புகை மாசைக் குறைக்க இந்தியா முடிவு

By Staff
Google Oneindia Tamil News

Carbon Emissions
டெல்லி: 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவின் புகை மாசு அளவை 25 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டிசம்பர் 7ம் தேதி டென்மார்க் நாட்டின் கோபன்ஹேகன் நகரில் ஐ.நா.வின் புவிவெப்ப மாநாடு தொடங்குகிறது. இதில் இந்தியா தனது நிலையை அறிவிக்க வேண்டியுள்ளது. உலகிலேயே கார்பன் மாசுவை அதிக அளவில் வெளிப்படுத்தும் நாடுகள் வரிசையில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாட்டில் தடுமாற்றம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. காங்கிரஸ் கட்சியும் கூட இந்தியாவின் நிலையில் மாற்றம் இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளது.

ஆனால் அமெரிக்கா மற்றும் சீனாவின் கடும் நெருக்குதல் காரணமாக புகை மாசைக் கட்டுப்படுவதில் இந்தியாவும் இறங்கி வந்தாக வேண்டிய நிலை. அமெரிக்கா தனது புகை மாசின் அளவை 17 சதவீதமாக குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளது. சீனா 40 முதல் 45 சதவீத அளவுக்கு குறைக்க முன்வந்துள்ளது. எனவே இந்தியாவும் இந்த அளவுக்கு வந்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்தியா தனது புகை மாசின் அளவை 2020ம் ஆண்டுக்குள் 25 சதவீத அளவு குறைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இன்று மத்திய சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.

பேச்சு தோற்க வேண்டும்-விஞ்ஞானி விருப்பம்!

இதற்கிடையே, கோபன்ஹேகன் நகரில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகள் தோற்க வேண்டும். காரணம், அதில், உள்ள பல அம்சங்கள் தவறானவை. எனவே பேச்சுவார்த்தை தோல்வியுறுவது நல்லது என்று கூறியுள்ளார் முன்னணி புவிவெப்ப மாற்ற விஞ்ஞானியான டாக்டர் ஜேம்ஸ் ஹன்சன்.

யார் இந்த ஹன்சன்?, ஏன் இப்படி ஒரு விருப்பம் அவருக்கு? புவி வெப்பமாதல் அபாயம், அதன் கடும் விளைவுகள் குறித்து உலகை எச்சரித்த முதல் விஞ்ஞானிகளி்ல் ஒருவர்தான் இந்த ஹன்சன். இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பே எச்சரித்தவர் ஹன்சன்.

நாசாவின் கோடார்ட் விண்வெளி கழகத்தின் தலைவராக இருக்கிறார். ஆனால், இப்போது ஐ.நா. முன்வைத்துள்ள அம்சங்களின் அடிப்படையில், கோபன்ஹேகனில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் புவிபெப்ப மாற்றம் குறித்து உடன்பாடு ஏற்பட்டால், அது உலகுக்கு மிகப் பெரிய அபாயங்களை ஏற்படுத்தி விடும் என எச்சரிக்கிறார் ஹன்சன்.

அதற்குப் பதில் இந்த உடன்பாடு ஏற்படாமல் உலக நாடுகளின் தலைவர்கள் கடுமையாக முயற்சித்து, இதைத் தவிர நல்லதொரு தீர்வுக்கு முயல வேண்டும் எனவும் அவர் பரிந்துரைக்கிறார்.

இதுகுறித்து ஹன்சன் கூறுகையில், இந்த மாநாட்டின் அடிப்படையே தவறாக உள்ளது. எனவே மறு ஆய்வு செய்வதே நல்லது.

கார்பன் மாசைக் குறைப்பது தொடர்பாக வளர்ந்த நாடுகள் சொல்லும் திட்டங்கள் எந்த வகையிலும் உதவாது. கார்பன் மாசை வெளியிடுவதை ஏதோ கரன்சியை கட்டுப்படுத்துவது போல கட்டுப்படுத்த முயல்கிறார்கள்.

கார்பனை ஏதோ சந்தை போல பாவித்து அதை அதிகம் வெளியிட்டும் நாடுகள் மீது பொருளாதார தடை, அந் நாட்டின் பொருட்களை இறக்குமதி செய்யத் தடை என்று பேசுகிறார்கள்.

இதன்மூலம் புவிவெப்ப மாற்ற அபாயங்களைக் குறைத்து விடலாம் என அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. ஆனால் அப்படி எதுவும் நடக்காது.

கியோட்டோ உடன்பாட்டைப் போல இது மாறிவிடக் கூடாது. அந்த உடன்பாடு என்னவென்பதே பல நாடுகளின் மக்களுக்கும் தெரியாது.

இதனால் கோபன்ஹேகன் உடன்பாட்டில் வளரும் நாடுகள் மீது வளர்ந்த நாடுகள் போடும் நெருக்கடிகளை
அந் நாட்டுத் தலைவர்கள் உறுதியுடன் எதிர்க்க வேண்டும்.

கோபன்ஹேகன் மாநாட்டின் முடிவுகள் எதிர்கால சந்ததியினரை பெரும் இருளில் மூழ்கடித்து விடும்.

புவிவெப்ப மாற்றம் தொடர்பாக பாரக் ஒபாமாவும் சரி, புவி வெப்ப மாற்ற முயற்சிகளுக்காக நோபல் பரிசு வென்ற அல் கோரும் சரி துணிச்சலாக செயல்படத் தவறி விட்டனர். பூமிக்கு என்ன தேவையோ, மக்களுக்கு என்ன தேவையோ அதை செய்ய இவர்கள் தவறி விட்டனர். இவர்கள் என்றில்லை ஒட்டுமொத்த உலக அரசியல் தலைவர்களுமே நம் முன் உள்ள தார்மீக சவால்களை சந்தித்து சரி செய்யும் தகுதியில் இல்லை என்கிறார் ஹன்சன்.

உலக அளவில் கார்பன் மாசை அதிக அளவில் வெளியிட்டு வரும் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன், இந்தியா ஆகியவை புகை மாசைக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.

குறிப்பாக இந்தியா இந்த விஷயத்தில் பல படி இறங்கி வந்துள்ளது. இதனால் கோபன்ஹேகன் மாநாடு வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில்தான் இந்த மாநாட்டால் பிரச்சினை தீருவதற்குப் பதில் பெரும் பிரளயமாக மாறி விடும் என எச்சரித்துள்ளார் ஹன்சன்.

கடந்த 1988ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஹன்சன் உரை நிகழ்த்தினார். அப்போது வானிலை மாற்றத்தால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து எச்சரித்தார். மேலும், இதை சரி செய்ய அவசரமான, உறுதியான நடவடிக்கைளை எடுக்க
வேண்டும் என அவர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இருப்பினும் கோபன்ஹேகன் மாநாட்டின் வெற்றி என்பதை அதை கடைப்பிடிக்கும் பணக்கார நாடுகளின் போக்கைப் பொறுத்தே அமையும். அவர்கள் முறையாக நடந்து கொண்டால்தான் ஏழை நாடுகளும் அவர்களைப் பின்பற்றுவார்கள். இதன் மூலம் பூமியின் வெப்ப நிலையை குறைக்க முடியும் எனக் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X