For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தொடங்கிய கோபன்ஹேகன் புவிவெப்ப மாநாடு

By Staff
Google Oneindia Tamil News

Copenhagen
கோபன்ஹேகன்: உலக நாடுகளின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் புவிவெப்ப மாற்ற மாநாடு இன்று தொடங்கியது.

ஐ.நா.வின் ஏற்பாட்டின் பேரில் 11 நாள் புவிவெப்ப மாற்ற மாநாடு இன்று கோபன்ஹேகனில் தொடங்கியது.

மாநாட்டின் முதல் நாளான இன்று புவிவெப்ப மாற்றத்தால் குழந்தைகள் சந்திக்கும் சவால்கள், ஆபத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

விவாதத்தின் தொடக்கமாக ஒரு வீடியோ படம் ஒளிபரப்பப்பட்டது. அதில், புவிவெப்ப மாற்றம் ஒரு இளம் சிறுமியின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் பாதிப்புகளை விளக்கும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

தான் அடிப்பாடி விளையாடிய ஆசையான விளையாட்டு மைதானம், வறண்டு உலர்ந்த பாலைவனம் போல மாறுவதையும், மறுபக்கம் கடும் வெள்ளத்தால் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாவதையும் கண்டு அந்த சிறுமி கதறி அழுவதாக காட்சிகள் இருந்தன.

இந்த வீடியோ படத்தை உலகெங்கிலுமிருந்து வந்துள்ள பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளும், ஆயிரக்கணக்கான பத்திரிக்கையாளர்களும் பார்த்தனர்.

முன்னதாக டென்மார்க் நாட்டு இளம் சிறுமியரின் கோரஸ் பாடல் இடம் பெற்றது.

மாநாட்டின் தொடக்கத்தில் பேசிய ஐ.நா. புவிவெப்ப மாற்றக் கமிட்டியின் தலைவரான ராஜேந்திர குமார் பச்சோரி கூறுகையில், உலகின் இயற்கையை, தட்பவெப்பத்தை மனிதர்கள் பாதிக்கிறார்கள். பதிலுக்கு அது நம்மை பாதிக்கப் போகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

புவிவெப்ப மாற்றத்தால் என்ன ஆகும் என்பது குறித்த அறிவியல் வாதங்களை நாம் நிறையப் பார்த்து விட்டோம். இப்போது நாம் நடவடிக்கையில் இறங்கியாக வேண்டும். அதற்கான நேரம் இது. இந்த மாநாடு அந்த நடவடிக்கைளுக்கு வழி கோலட்டும் என்றார்.

டென்மார்க் பிரதமர் ரால்ஸ் லோக்கே ரஸ்முஸன் பேசுகையில், புவிவெப்ப மாற்றம், குழந்தைகள், முதியவர்கள் என பாரபட்சம் பார்க்காமல் அனைவரையும் பாதிக்கும்.

புவிவெப்ப மாற்றத்திற்கு எல்லைகள் இல்லை. அது யாரையும் பார்க்காது. அனைவரையும் அழித்து விடும். இதை நாம் மாற்ற வேண்டும், நம்மால் மாற்ற முடியும், மாற்றியே தீர வேண்டும்.

இங்கு நடைபெறப் போகும் விவாதங்கள் மிகக் கடுமையானவையாக இருக்கும். உலகத் தலைவர்கள் கடுமையாக வாதிடப் போகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து உண்டு. நிச்சயம் இது இங்கு சூட்டைக் கிளப்பும் என்பதில் ஐயம் இல்லை. அதேசமயம், ஒருமித்த தீர்ப்பை இந்த மாநாடு தரும் என்று நம்புகிறேன்.

உடன்பாட்டை நாம் எட்டும் தூரத்திற்கு வந்து விட்டோம். நிச்சயம் அதை நாம் சந்திப்போம் என்றார்.

மாநாட்டில் 192 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டுள்ளனர். அனைவரும் கூடி விவாதித்து ஒரு உடன்பாட்டை ஏற்படுத்தப் போகின்றனர். இந்த மாநாட்டின் இறுதியில் அந்த உடன்பாட்டை ஐ.நா. பிரகடனம் செய்யும். அதன்படி உலக நாடுகள் புவிவெப்ப மாற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரூட் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மாநாட்டில் 3500 பத்திரிக்கையாளர்கள் உள்பட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்புமணி - செளம்யா பங்கேற்பு...

தமிழகத்திலிருந்து முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ், அவரது மனைவி செளம்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X