For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தல் திருவிழா: பெங்களூருக்கு குடிபெயர்ந்த பென்னாகரம் வாசிகளுக்கு திடீர் 'கிராக்கி'!

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்: சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் வெளியூர்களுக்கு பிழைப்பு தேடிப்போன மக்களை இப்போது ஓட்டுக்காக கும்பிடு போட்டும், பணம் கொடுத்தும் அழைக்கின்றன அரசியல் கட்சிகள்.

தர்மபுரி அருகே சுமார் 2 லட்சம் மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஒன்றியம் பென்னாகரம்.

35 ஊராட்சிகள் அடங்கியுள்ள இந்த ஒன்றியத்தில் அஞ்செட்டி காடுகளில் இருந்து மூங்கில்களை எடுத்துவந்து சேமித்து வைக்கப்படுவதைத் தவிர வேறு குறிப்பிட்டுச் சொல்லும் படியான தொழில்கள் இல்லை.

வானம் பார்த்த பூமியான இங்கு இயற்கை கை கொடுத்தால் தான் விவசாயம் விளங்கும்.

எனவே பெரும்பாலான மக்கள் அருகில் உள்ள ஒசூர், பெங்களூர் மற்றும் திருப்பூர் ஆகிய தொழில் நகரங்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

ஓட்டு கணக்குப்படி, இங்குள்ள சுமார் 1.75 லட்சம் வாக்காளர்களில் 30,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வெளியூர்களில் வசிக்கின்றனர்.

வாக்காளர்களை கவர விதவிதமான வித்தைகளை எல்லாம் கையாண்டு வரும் அரசியல் கட்சிகள், வெற்றியை தீர்மானிக்கு இந்த ஓட்டு வங்கியை களத்தில் இறக்க வேண்டியது தலையாய கடமை என கருதுகின்றன.

ஊரில் இருப்பவர்களுக்கு 'கொட்டிக் கொடுத்து' ஓட்டு வாங்குவது ஒருபுறம் இருக்க, இந்த '30 ஆயிரம் ஓட்டு'க்களை ஒட்டுமொத்தமாக அள்ளுவதற்கு கட்சிகள் ஆளாய் பறக்கின்றன.

இதில் முதலில் முந்திக்கொண்டது பாமகவினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக ராமதாஸின் புதல்வரும், முன்னாள் அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் பெங்களூரில் உள்ள குடிசைப் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்தார்.

வராது வந்த நாயகனின் நோக்கம் என்னவோ என பலரும் ஆச்சரியமாக பார்த்தார்கள். அப்புறம் தான் தெரிந்தது, அந்த குடிசைப் பகுதிகளில் உள்ள பென்னாகரம் வாசிகளை (ஓட்டுகளை) கும்பிடு போட்டு கூப்பிடுவதற்காக அவர் வந்தார் என்று.

அங்குள்ள மக்களை சந்தித்த அன்புமணி, பென்னாகரம் இடைத்தேர்தல் நடைபெறுவதால், அங்கு வாக்காளர் பட்டியலில் பெயர் கொண்டவர்கள் தவறாமல் வந்திருந்து பாமகவுக்கு ஆதரவாக ஓட்டை பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தினக்கூலிகளாக உள்ள இந்த மக்கள், ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒருநாள் சம்பளத்தை இழக்க தயாராக இருக்கிறார்களோ என்று நினைத்து அங்குள்ளவர்களிடம் விளக்கம் கேட்டபோது,

'பணம் தர்றதா சொல்றாங்க. போக்குவரத்து செலவு அவங்களுடையது. சாப்பாடும் அவங்க செலவு தான். ஓட்டுக்கு எவ்வளவுன்னெல்லாம் தெரியாது' என்று கூறி சிரிப்பு சிரிக்கிறார் ஒரு பென்னாகரவாசி.

பெங்களூரில் அவர்களுக்கு கிடைக்கும் ஒரு நாள் சம்பளத்தையும், கட்சிக்காரர்கள் தரும் காசையும் ஒப்பிட்டுப் பார்த்து, சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்யப்போகிறார்களாம் இவர்கள்.

பாமகவைப் போல, திமுகவில் இந்த 'அஸைன்மென்ட்' முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் இத்திட்டத்தை பக்காவாக முடிக்க வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

பெங்களூர், ஒசூர், திருப்பூர் மற்றும் பல்வேறு நகரங்களில் உள்ள பென்னாகரம் ஓட்டுக்களை வளைத்துக் கொண்டு வர தனிப்படையே அமைத்துள்ளதாக இவர் வெளிப்படையாகவே நிருபர்களிடம் கூறியுள்ளார்.

மற்ற கட்சிகளும் தங்கள் 'சக்திக்கு ஏற்ப' இதுபோன்ற 'ஜனநாயக கடமைகளை' ஆற்றி வருகின்றன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X