For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியின் 87வது பிறந்தநாள்-திமுகவினர் உற்சாகக் கொண்டாட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு இன்று 86 வயது முடிந்து 87 வயது பிறந்தது. இதை திமுகவினர் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.

முதல்வர் கருணாநிதிக்கு இன்று 87வது பிறந்தநாளாகும். இதையொட்டி இன்று காலை தனது தாய், தந்தை படங்களை வணங்கிய கருணாநிதி, மரக் கன்றை நட்டு வைத்தார். அப்போது துணைவியார் ராஜாத்தி அம்மாள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் தனது வீட்டில் கேக் வெட்டினார். அப்போது அவரது குடும்பத்தினர் அனைவரும் உடன் இருந்தனர். மனைவி தயாளு அம்மாள், மகன்கள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு, மு.க. ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் கருணாநிதியின் காலைத் தொட்டு கும்பிட்டு வாழ்த்து பெற்றனர்.

அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், பொன்முடி, வீரபாண்டி ஆறுமுகம், நேரு, வேலு, பரிதி இளம்வழுதி, பூங்கோதை, மத்திய அமைச்சர்கள் ராசா, தயாநிதிமாறன், ஜெகத்ரட்சகன், நெப்போலியன், முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, சற்குண பாண்டியன், புலவர் இந்திரகுமாரி, மேயர் மா. சுப்பிரமணியன், தி.மு.க. செயலாளர்கள் ஜெ. அன்பழகன், வி.எஸ். பாபு, நடிகை குஷ்பு உள்பட ஏராளமானோர் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தனர்.

தலைமை செயலாளர் ஸ்ரீபதி, டி.ஜி.பி. லத்திகா சரண், போலீஸ் கமிஷனர்கள் ராஜேந்திரன், ஜாங்கிட், ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு உள்பட ஏராளமான அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

காலை 7.30 மணி அளவில் அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். வெண் புறாக்களையும் பறக்கவிட்டார். அப்போது மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரி, அமைச்சர்கள் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

8 மணி அளவில் பெரியார் நினைவிடம் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது கருணாநிதி 1987-ல் அங்கு நட்ட மாமரத்தில் பழுத்த மாம்பழத்தை அவருக்கு வீரமணி கொடுத்தார். பெரியமேடு இளைஞர் அணி செயலாளர் சுதாகரின் ஆண் குழந்தைக்கு வீரமணி என்று கருணாநிதி பெயர் சூட்டினார்.

பெரியார் நினைவிடத்திற்கு முதல்வர் சென்றபோது நடிகை குஷ்பு உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

பின்னர் அண்ணா அறிவாலயம் சென்றார் கருணாநிதி. அங்கு திமுகவினர் நீண்டவரிசையில் நின்று முதல்வருக்கு வாழ்த்துக்களையும், பல்வேறு பரிசுகளையும் வழங்கினர். பல்துறைப் பிரமுகர்களும் முதல்வருக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

கலைஞர் அரங்கத்தில் தொண்டர்களை சந்தித்த கருணாநிதியை, குமரி அனந்தன், சுதர்சனம், இல. கணேசன், ஆர்.எம். வீரப்பன், திருமாவளவன் உள்பட பலர் வாழ்த்தினார்கள்.

பிரதீபா, மன்மோகன், சோனியா வாழ்த்து:

முதல்வரின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தொலைபேசி மூலம் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத், நடிகர்கள் ரஜினிகாந்த், மம்முட்டி உள்பட பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக கவர்னர் பர்னாலா முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முதல்வர் பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி கதையில் உருவாகியுள்ள பெண் சிங்கம் படம் இன்று திரைக்கு வருகிறது.

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி இன்று அறிவிக்கிறது.

சென்னை திருவான்மியூரில் பிரமாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடிகை குஷ்பு உள்ளிட்டோர் பேசுகிறார்கள். கருணாநிதி ஏற்புரை வழங்குகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X