For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும் என்னையே அர்ப்பணித்து விட்டேன் - கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கோடியென வந்த சம்பளத்தையும் - குடியிருந்த வீட்டையும் - தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் - உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் - தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான் என்று முதல்வர் கருணாநிதி தனது 87வது பிறந்த நாள் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தனது பிறந்த நாளையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள செய்தி:

பூகோள படத்தில் சுட்டிக்காட்ட முடியாத அளவுக்கு ஒரு புள்ளியாகக் கூடத் தோன்றாத ஒரு குக்கிராமத்திலிருந்து 87 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த "குவா குவா'' எனும் ஒலி வந்த திசையிலிருந்து முத்துவேலர் தோளிலும் -அஞ்சுகத்தம்மையின் மடியிலும் தவழ்ந்த மழலை இன்று பிறந்த நாள் கொண்டாடி மகிழ்வதோடு; அது கடந்து வந்த பாதையையும் திரும்பிப் பார்த்து; திராவிட இயக்கமெனும் தொட்டிலில் கேட்ட தன்மானத் தாலாட்டை; இந்த வயதிலும் திரும்பத் திரும்பப் பாடிக்கொண்டு தேசமெங்கும் திரிந்திடுவதைத் தேனினுமினிய இசையெனக் கொண்டு எங்கெல்லாம் தமிழ் மக்கள் இருக்கிறார்களோ; எங்கெல்லாம் அந்த மக்களின் பழைய வரலாறு பதிந்த கல்லோவியங்கள் உண்டோ; அங்கெல்லாம் "வாழ்க தமிழ்!'' "வெல்க தமிழர்!'' என முழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆம்; 87 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட அந்த எழுச்சி முழக்கம்; இன்றைக்கும் சோர்வு தட்டாமல் இந்தப் பார் மகிழ ஒலித்துக் கொண்டிருக்கிறது! தேரூரும் திருவாரூரிலிருந்து கிளம்பி, திருக்குவளையின் வேரார்ந்த அந்த கீதம்; இன்றைக்கும் அதற்கு வேதம்!

ஆனால், வேதங்கள், இதிகாச புராணங்களை விரித்துரைத்து மாந்தரிடையே பேதங்களை வளர்த்திடும் போக்கு; பாலப்பருவத்திலேயே அந்த இளைஞனுக்கு பகையான ஒன்று! அதனால்தான் அந்த ஊர் சலவைத் தொழிலாளி பட்டு என்பவரின் பாராட்டும், சீராட்டும் பெற்று வளர்ந்தான் - பாசமுடன் பழகி நட்போடு தொடர்ந்தவர்களோ; பழங்குடி இனத்தினரான ஆதி திராவிட மக்கள்தான்! சிங்கப்பூர் சவுராளி ராமச்சந்திரனின் "பார்பர் ஷாப்'' தான் அவனுக்கு பகுத்தறிவுப் பாசறை!

அவனது பொது வாழ்க்கையின் அதிகாலைப் பருவத்தில் அவன் ஏற்றிய கொடிகளில் பெரும் பாலானவை - அடித்தட்டு மக்கள் வாழ்ந்த தெருக்களில் அல்லது அவர்கள் வீட்டு முகப்புகளிலேதான்!

அந்த மக்கள் என்றால்தானே நோய் நொடிகளுக்குக் கூட இளக்காரம் -அவர்களை வாட்டும் குறைகளில் ஒன்று; வறுமையை விடக் கொடியது - பார்வையில் ஏற்படும் பழுது; என்பது அவன் மனத்தைப் பாடாய்ப்படுத்தியது.

காலிழந்த நொண்டியெனில், மற்றவர் தோளில் ஏறிக்கொண்டு நகர முடியும் - பேச இயலாதவர் எனில் எழுதிக்காட்ட முடியும்- காது கேளாதோர்க்கும் அதுவே பொருந்தும், இல்லாவிட்டால் கையால் "ஜாடை'' காட்டிட இயலும் - ஆனால் கண் பார்வையற்றோர்; ஒரு காட்சியைப் பிறர் வர்ணிக்கக் கேட்கும்போது கூட; அய்யோ; தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கத்தின் தாக்கத்தில் தானே ஆழ்வர்.

அதனால்தான் இயலாதோர்க்கு - ஏழையெளியோர்க்கு - உதவிட வேண்டுமெனில் - வந்துற்ற வாய்ப்பைக் கொண்டு அவர்கட்கு கண்ணில் ஒளி வழங்கிடும் கடமையையே கடவுள் தொண்டெனக் கருதி;

கண்ணொளி வழங்கும் திட்டத்தைப்

பரவலாக வகுத்தான்.

அதனைத் தொடர்ந்து இரவலர்

எவரும் இருத்தலாகாது என

உரைத்து அவர்கட்கு மறு வாழ்வு

இல்லங்கள் அமைத்தான்.

ஏழையின் சிரிப்பில்

இறைவனைக் காண அண்ணன்

காட்டிய வழியில் எத்தனையோ

திட்டங்கள் வடித்தான்.

மாற்றுத் திறனாளிகள்,

மலம் எடுப்போர்,

கை ரிக்ஷா இழுப்போர்,

அரவாணிகள் -

என அனைவர்க்கும் மனித உரிமை தந்திட; அவன் தயங்கியதில்லை.

சமூக நீதிக்காக அணிவகுத்த தந்தை பெரியார் படையில் அவன் ஒரு தளகர்த்தன்!

ஐந்து முறை மாநிலம் ஆளுகின்ற முதல்-அமைச்சராகவும் - பதினோரு பொதுத் தேர்தல்களில் வென்று தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராகவும் - 50 ஆண்டுகள் சட்டப்பேரவையில் வாழ்வில் ஒரு பகுதியை வழங்கி; தன்னை வளர்த்த அந்த பேரவைக்கு என எழில் மாடத்தை நிறுவி - தமிழ் மக்களுக் கென்றே தன்னை ஒப்படைத்துக் கொண்டவன்-

தமிழ் மொழி எங்கும், எதிலும் ஏற்றம் பெறவும் - தமிழர் எத்துறையிலும் வல்லவர், நல்லவர், மிகுந்த அறிவும், மேன்மைசால் ஆற்றலும் உள்ளவர் என எந்நாளும், எந்நாட்டவராலும் போற்றப்படவும்;

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்''

"யாதும் ஊரே யாவரும் கேளிர்''

என; தமிழ் அய்யன்மார் படைத்த நெறிகள் பாரெங்கும் பரவிச் செல்லவும், வெல்லவும் -அந்த வெற்றிச் செய்தியை எல்லோரும் சொல்லி; காதாரக் கேட்டுக் களித்திடவும் -இத்திங்கள் இறுதியில் கோவை மாநகரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டினை நடத்துகிறான்! உலகத்தமிழர் அனைவரும் உவகையோடு அதில் கலந்துகொண்டு உணர்ச்சியும், எழுச்சியும் பெற வேண்டுமென்று நாட்டம்கொள்கிறான்.

இதோ 87-ல் அடியெடுத்து வைக்கும்போது -அவன் சென்னையில் தாய், தந்தையோடும், தமக்கைகளோடும், மகன்கள், மருமகன்களோடும், பேரன், பேத்திகளோடும் - எத்தனையோ வரலாற்று ஏடுகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நூலகம் போன்ற இல்லத்தையும் - நடமாடும் கோவில்களின் திருப்பணிக்காக; ஆம்; மாந்தர்தம் நோய் நொடி தீர்க்கும் திருப்பணிக்காக - இதோ பொதுவில் அறக்கட்டளைக்கு ஒப்படைக்கின்றான்.

அந்த அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சி.கே.ரெங்கநாதன், இயக்குநர் ராமநாராயணன், கவிப்பேரரசு வைரமுத்து, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன் ஆகியோரை நியமித்து இந்த அறக்கட்டளையைத் திறம்பட நடத்திடுவர் என்ற உறுதியோடு இருக்கிறான்.

கோடியென வந்த சம்பளத்தையும் - குடியிருந்த வீட்டையும் - தமிழுக்காகவும், ஏழையெளியோருக்காகவும் மனமுவந்து ஈந்தவன் - தன் அறிவையும், ஆற்றலையும் அன்னைத் தமிழுக்கும், தமிழர் நல்வாழ்வுக்கும், தமிழ்நாட்டின் மேன்மைக்கும் அர்ப்பணித்தவன் - உற்சாகம் சிறிதும் குன்றிடாமல் - தொடர்ந்து தொண்டறம் செய்திட தமிழ் மக்களின் வாழ்த்துகள் கிட்டிடும் என்ற நம்பிக்கையோடு நடந்து கொண்டிருக்கிறான்!

வாழ்க தமிழ்!

வளர்க திராவிட இன உணர்வு!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X