For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையிலிருந்து கோவைக்கு கூடுதல் பேருந்துகள்! - கே என் நேரு

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு ஸ்பெஷலாக, சென்னையிலிருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் கேஎன் நேரு அறிவித்துள்ளார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் ஜூன் 23-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கோவைக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதுபோல் சென்னையிலிருந்தும் கூடுதல் பஸ்களை இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு கூறியதாவது:

"சென்னையிலிருந்து மாநாட்டுக்குச் செல்வோரின் எண்ணிக்கையைப் பொருத்து பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளோம். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 2,500 மாற்று பஸ்கள் உள்ளன. தேவைப்பட்டால் இவை அனைத்தையும் இயக்கும் வகையில் பஸ்களை தயார் நிலையில் வைத்துள்ளோம்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் ஆன்-லைன் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதில் முன்பதிவு செய்பவர்களின் எண்ணிக்கையைப் பொருத்தும், அவ்வப்போது வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவும் கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்," என்றார்.

சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள்

வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து கோவை மாநாட்டுக்குச் செல்வதற்காக சென்னை வரும் முக்கிய விருந்தினர்களுக்கு உதவுவதற்காக சிறப்பு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தலைமைச் செயலகம் மற்றும் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் போக்குவரத்து இணை ஆணையர்கள் தலைமையில் இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடு மற்றும் வெளி மாநில சிறப்பு விருந்தினர்கள் கோவை செல்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை இந்தக் கட்டுப்பாட்டு அறைகள் செய்து தரும்.

ஹெல்ப் லைன் எண்கள்

இந்தக் கட்டுப்பாட்டு அறைகளை 28582478, 28528030 என்ற ஹெல்ப் லைன் தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு சிறப்பு விருந்தினர்கள் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். இந்த எண்கள் அனைத்தும் இ-மெயில் மூலம் முக்கிய விருந்தினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

'இன்முகத்துடன்...' டிரைவர்களுக்கு சிறப்புப் பயிற்சி

கோவை வரும் சிறப்பு விருந்தினர்கள், கட்டுரையாளர்களை ரயில்நிலையம், பஸ்நிலையம் என பல்வேறு பகுதிகளிலிருந்து மாநாடு நடைபெறும் கொடிசியா அரங்குக்கு அழைத்துச் செல்வதற்காக, ஏ.சி. பஸ்கள், கார்கள், வேன்கள் என 1,042 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களை இயக்கும் டிரைவர்களுக்கு சென்னையில் போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து போக்குவரத்துத் துறை ஆணையர் ராஜாராம் கூறுகையில், "மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவை வரும் சிறப்பு விருந்தினர்களிடம், டிரைவர்கள் இன்முகத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையில் அவர்களுக்கு போக்குவரத்து துறை சார்பில் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பணியை சேவையாக கருத வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விருந்தினர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்போம் என பயிற்சியின் முடிவில் டிரைவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுள்ளனர். அதை கடைப்பிடிப்பார்கள் என நம்புகிறோம்," என்றார் ராஜாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X