For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்து நமது ஆட்சிதான் என்று கூறி அனைவரையும் ஏமாற்றுகிறார் ஜெ.-கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை : அடுத்து அமையப் போவது எனது ஆட்சிதான் என்று கூறி மக்களை மட்டுமல்லாமல் தனது கட்சிக்காரர்களையே ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் பாணி அறிக்கை:

கேள்வி: தமிழக மீனவர் செல்லப்பன், இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கொலையுண்ட பிரச்சினை குறித்து ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசுக்கு தி.மு.க. அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருக்கிறாரே?.

பதில்: இந்தப் பிரச்சினை குறித்து எனக்கு செய்தி தெரிந்ததும் உடனடியாக; நான்தான் முதலில் கண்டன அறிக்கை விடுத்ததோடு, அந்தக் குடும்பத்திற்கு 3 லட்ச ரூபாய்க்கான நிதியினையும் அரசின் சார்பில் வழங்கிடக் கூறியதோடு, பிரதமருக்கும், மத்திய மந்திரிகளுக்கும் அன்றைய தினமே கடிதங்களையும் எழுதினேன்.

8.7.2010 அன்று மாலையில் நான் எழுதிய கடிதத்திற்கு, 9.7.2010 அன்று மதியத்திற்குள் மத்திய அரசின் சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இப்பிரச்சினை குறித்து பிரதமரோடு பேசியதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை எனக்கு கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தி.மு.க.வின் மீனவர் அணியின் சார்பில் இதற்காகவே ஒரு ஆர்ப்பாட்டமே நடத்தப்பட்டுள்ளது. இதெல்லாம் முடிந்த பிறகு, விழித்துக் கொண்டவர்களில் ஒருவரான ஜெயலலிதா அதைப்பற்றி அறிக்கை விடுத்ததில், தி.மு.க மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், தி.மு.க. அமைச்சர்களை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார் என்றால், கிராமத்தில் பழமொழி சொல்வார்களே - "அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்'' என்று - அதைப்போல ஜெயலலிதா பரிதாபகரமான எதிர்பார்ப்போடு - எப்படியாவது மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும் - மத்தியிலே ஆட்சி கவிழ வேண்டும் - தமிழகத்திலும் ஆட்சி கவிழ வேண்டும் - ஊர் பற்றி எரிகிற நேரத்தில் கிடைத்தவரை ஆதாயம் பெறலாம் என்று அவர் துடிக்கிறார்.

அதன் விளைவுதான் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், மத்திய அரசில் இருந்து தி.மு.க. விலக வேண்டும், மத்திய தி.மு.க. அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தவிக்கிறார். தனது வழக்கமான பாணியில் மக்களை ஏமாற்றலாம் என்று கருதுகிறார்.

இந்தப் பிரச்சினைக்காக மத்திய அரசுக்கு நான் வழக்கம்போல் கடிதம் எழுதியுள்ளேன் என்கிறார் ஜெயலலிதா. ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டபோது, ஜெயலலிதா என்ன செய்தார்? அவரும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதிக்கொண்டு தானே இருந்தார்? மாறாக இலங்கைக்குப் படையெடுத்துச் செல்கிறேன் என்று புறப்பட்டாரா?.

ஜெயலலிதா மட்டுமல்ல; ஜெயலலிதாவைப் போலவே சில பேர் தங்களை வீராதி வீரர்கள் என்று காட்டிக் கொள்ள -இந்தப் பிரச்சினையில் டெல்லிக்குக் கடிதம் எழுதினால் மட்டும் போதுமா என்று கேட்கிறார்கள். இந்தச் சூராதி சூரர்கள், சூரபத்மன் பேரர்கள் - டெல்லிக்குக் கடிதம் எழுதுவதற்குப் பதிலாக "இதோ புறப்பட்டு விட்டது பார்! எங்கள் போர்ப்படை'' என்று இலங்கைக்கு கடற்படையை அனுப்பப் போகிறார்களா? அல்லது தாங்கள் சேமித்து வைத்திருக்கும் தொண்டர் படை வீரர்களை எல்லாம் "தொப்'' "தொப்'' என்று கடலில் குதித்து நீந்தியே சென்று கொழும்பு துறைமுகத்தில் கரையேறி அங்குள்ள கோட்டை, கொத்தளங்களை முற்றுகையிடச் சொல்லப் போகிறார்களா? ஒரு வேளை அப்படி அவர்கள் போட்டிருந்த திட்டத்தை நான் டெல்லிக்கு கடிதம் எழுதியதின் மூலமாக கெடுத்து விட்டேனா என்பதைத் தெரிவித்தால் -அவர்களுடைய விவேகத்தைப் பாராட்டாவிட்டாலும், வீரத்தைப் பாராட்டவாவது முடியும் அல்லவா?.

கேள்வி: தமிழ்நாட்டில் தனது ஆட்சி அமைந்தவுடன் இலங்கைக் கடற்படையினரால் தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் களையப்படும் என்று ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்திருக்கிறாரே?

பதில்: மீனவர்களின் இன்னல்கள் மாத்திரமா? அரசு ஊழியர்களின் ஊதியமும், போனசும்கூட பல மடங்கு உயர்த்தப்பட்டு, வேலை வாய்ப்புத் தடைச் சட்டத்தையும் அவரே முன்னின்று வாபஸ் வாங்கிக் கொண்டு, எஸ்மா - டெஸ்மா சட்டம், ஆசிரியர்களையும், அரசு அலுவலர்களையும் அடக்குவதற்குப் பயன்படுத்தக் கூடாது என்று அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டு "அம்மா தாயே! வாழ்க! வாழ்க!'' என்று அனைத்து இந்தியாவும் கோஷம் எழுப்பும்! இத்தனைக்கும் அந்த ஈவு இரக்கமுள்ள அம்மையாரின் ஆட்சி மீண்டும் வந்தாக வேண்டுமே? என்ன செய்வது? அத்தைக்கு மீசை முளைக்கிறதா என்று அடிக்கடி தடவி தடவிப் பார்த்துக் கொண்டால் மட்டும் மீசை முளைத்து விடுமா என்ன?

கேள்வி: செல்வ வரி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை எழும்பூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாக செய்தி வந்திருக்கிறதே?.

பதில்: இந்த வழக்கு இந்த ஆண்டுக்கோ, கடந்த ஆண்டுக்கோ உரிய கணக்கு அல்ல. 1993-1994-ம் ஆண்டுக்கான செல்வ வரி கணக்கை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முறையாக தாக்கல் செய்யவில்லை என்பதும், அது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட பிறகும், அவர் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் வருமான வரித்துறை குற்றம்சாட்டி புகார் தரப்பட்டுள்ளது. அதாவது 17 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பிரச்சினைக்கான வழக்கு. இத்தனை ஆண்டுகள் கழித்து இன்னமும் இது முடியவில்லை.

இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தன்னை அந்த வழக்கில் இருந்து விடுவிக்குமாறு ஜெயலலிதா தரப்பில் மனு தரப்பட்டுள்ளது. அந்த மனுவினை விசாரித்த நீதிபதி; ஜெயலலிதா தரப்பு வாதத்தை சட்டப்படி ஏற்க இயலாது என்று கூறி ஜெயலலிதாவின் மனுவினை தள்ளுபடி செய்திருக்கிறார். ஜெயலலிதா மீது இது ஒரு வழக்குதானா? 66 கோடி ரூபாய் சொத்து குவித்த வழக்கும் எத்தனையோ ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த வழக்கில் இருந்தும் தன்னை விடுவிக்கக்கோரி ஜெயலலிதா பலமுறை மனு கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்.

அவற்றை எல்லாம் இந்த நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்களுக்கு அதைப் பற்றியெல்லாம் தெரியாது என்று நினைத்துக் கொண்டுதான் அறிக்கையிலும், கழகத் தோழர்களை விட்டு அன்றாடம் ஆர்ப்பாட்டம் நடத்தச் சொல்வதிலும், அடுத்த ஆட்சி என்னுடையதுதான் என்று கூறி கட்சிக்காரர்களையும், மக்களையும் ஏமாற்றுவதிலும் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X