For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மற்ற கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டன: ராமதாஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Ramdoss
புதுச்சேரி: புதுச்சேரியில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.

பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற வன்னியர் சமூக மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா புதுவை சமூக முன்னேற்ற சங்கம் சார்பில் கம்பன் கலையரங்கில் நடைபெற்றது.

அதில் ராமதாஸ் பேசுகையில், புதுவையில் 100க்கு 70 பேர் வன்னியர்கள் உள்ளனர். ஆனால், மற்ற அரசியல் கட்சிகள் நம்மை கூறுபோட்டு பிரித்து விட்டனர்.

புதுவையில் இளைஞர்களை பாமகவில் அதிகம் சேர்க்க வேண்டும். அவர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டும். முதியவர்கள் பல்வேறு கட்சியிடம் அடமானம் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை இனிமேல் மீட்க முடியாது.

புதுவையில் வன்னியர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் இணைந்தால், ஆட்சியை நாம் தான் நடத்துவோம். புதுவையில் ஒரே ஒரு தடவை வன்னியர் ஒருவர் முதல்வராக இருந்தார். அதற்கும் நாம் தான் காரணம். ஆனால், அந்த முதல்வர் வன்னியர் சங்க கூட்டத்தில் வந்து, நான் வன்னியர் என்று கூறுவாரா?. கூறமாட்டார்.

அவர் மட்டுமல்ல, மற்ற கட்சிகளிலும் பொறுப்பு வகிப்பவர்கள் கூட வெளிப்படையாக கூறமாட்டார்கள். காரணம், அவர்கள் கட்சியிலுள்ள ஆதிக்க ஜாதி தலைவர்களை மீறி அவர்களால் பேச முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.

என்ஜினீயரிங்-அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ்வழி:

இதற்கிடையே ராமதாஸ் அறிக்கையில், இந்த ஆண்டு முதல் தமிழ் வழியில் பொறியியல் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பிரிவுகளில் தமிழ்வழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளபடி இது தன்னிகரில்லா திட்டம்தான். ஆனால், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் மட்டும் அதுவும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் மட்டும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளை தொடங்கி இருப்பது போதாது. தமிழுக்கு மறுமலர்ச்சி ஏற்பட வேண்டுமானால் பொறியியல் படிப்புகளில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் தமிழ் வழி வகுப்புகளை தொடங்க வேண்டும்.

மேலும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளோடு நின்று விடாமல் மாநிலத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் தமிழ்வழி கல்வி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதிதாக பொறியியல் கல்லூரிகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட கல்லூரிகளை தொடர்ந்து நடத்துவதற்கும் தமிழ்வழி கல்வி வகுப்புகளை தொடங்கி நடத்த வேண்டும் என்பதை கட்டாய நிபந்தனையாக விதிக்க வேண்டும்.

அத்துடன் மாணவர்கள் பெருமளவில் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் சேர்வதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டம் பொறியியல் பட்டதாரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

குறிப்பாக மாநில மின்சார வாரியம், பொதுப்பணித்துறை, மாநில அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் பணி நியமனத்தில் தமிழ்வழியில் படித்த பொறியியல் பட்டதாரிகளுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இன்னும் ஓரிரு நாட்களில் பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை கொண்டாட இருக்கிறோம். அவரின் ஆட்சிக் காலத்தில் தமிழை பயிற்சி மொழியாக கொண்டு படிப்பவர்களுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டமும், அரசு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன.

எனினும் இன்றைக்கும் அதே திட்டத்தை அறிவிக்கும் நிலைமை இருக்கிறது என்றால், அதிகார வர்க்கமும், ஆங்கில மோகமும் அதை நடைமுறைப்படுத்துவதற்கு பெரும் தடையாக இருந்து வந்திருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த தடைகளை தகர்த்தாலொழிய நாம் எதிர்பார்க்கிற பலனை அடைய முடியாது.

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை அளிப்பதற்கு தனிச் சட்டம் கொண்டு வருவது இந்த தடையை தகர்க்க ஓரளவு துணை புரியும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே இந்தச் சட்டத்தை தாமதமின்றி கொண்டு வர வேண்டும்.

அடுத்த சட்டப் பேரவை கூட்டத்தொடர் வரும் வரை காத்திருக்காமல் இதை ஓர் அவசரச் சட்டமாக அறிவிக்க வேண்டும். இதன்மூலம் நடப்பு கல்வி ஆண்டிலேயே பொறியியல் பட்டப்படிப்பில் மட்டுமின்றி இதர கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வி வகுப்புகளில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்து படிப்பதற்கு வழிவகுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X