For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல்!

By Chakra
Google Oneindia Tamil News

Pranab Mukherjee‎
டெல்லி: நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புக் கொண்டுள்ளது.

ஜாதிவாரி சென்ஸஸ் நடத்தப்பட வேண்டும் என திமுக, பாமக, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, ராஷ்ட்ரீய லோக் தள், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகள் கோரி வருகின்றன.

இதை காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் ஆதரித்தாலும் அதிலுள்ள முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த தலைவர்கள் பலர் எதிர்த்தனர். அதே போல இந்த கணக்கெடுப்புக்கு பாஜகவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. அதே நேரத்தில் அந்தக் கட்சியில் உள்ள சில பிற்படுத்தப்பட்ட தலைவர்கள் இதை ஆதரித்தனர். இதனால் ஒருமித்த கருத்து எட்டப்படுவதில் சிக்கல் எழுந்தது.

இதையடுத்து இது குறித்து விவாதித்து முடிவெடுக்க நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்ற சில மத்திய அமைச்சர்கள் ஜாதிவாரி சென்ஸஸை எதிர்த்து வந்ததால் முடிவெடுப்பது தாமதமானது.

இந்தக் குழு பலமுறை கூடியும் முடிவு எட்டப்படவில்லை. இந் நிலையில் இந்தக் குழு, பிரணாப் முகர்ஜி தலைமையில் நேற்று மீண்டும் கூடியது.

அதில், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இப்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி (பயோ மெட்ரிக் ஆதாரம் பதிவு செய்வது) வரும டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

அப்போது தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக 15 வயதுக்கு மேற்பட்ட அனைவருடைய புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அவர்களின் கைரேகைகளும் பதிவு செய்யப்படும். இந்த பணி நடக்கும்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரணாப் தலைமையிலான குழுவில் அமைச்சர்கள் ப.சிதம்பரம், வீரப்ப மொய்லி, கபில்சிபல், பரூக்அப்துல்லா, சரத்பவார், மம்தாபானர்ஜி, தயாநிதி மாறன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் கடந்த 1931ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சியில் தான் கடைசியாக ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க மண்டல் கமிஷன் செய்த பரிந்துரைகளை முழுவதுமாக அமலாக்க, முதலில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கையை கணக்கிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. இதனால் இந்த ஜாதிவாரி சென்ஸஸ் மிக மிக முக்கியத்துவம் பெறுகிறது.

வீடு வீடாக கணக்கெடுப்பு-எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்:

இந் நிலையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை வீடு வீடாக சென்று நடத்த வேண்டும் என்று மக்களவையில் இன்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

தற்போது நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவடைந்த பின், தேசிய அடையாள அட்டை வழங்குவதற்காக வரும் நவம்பர் மாதம் கைரேகை பதிவு முகாம்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அப்போது ஜாதிவாரி முகாம்களை நடத்தலாம் என மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

ஆனால், அதை அப்படி நடத்தக் கூடாது. வீடு வீடாகச் சென்று மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் நிலையிலேயே, ஜாதிவாரிக் கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதையடுத்து எதிர்க் கட்சித் தலைவர்களுடன் பிரணாப் முகர்ஜி பேச்சு நடத்தினார். எந்த வகையில், எப்போது கணக்கெடுப்பு நடத்துவது என்பது குறித்து, மத்திய அமைச்சரவை பரிசீலித்து விரைவில் முடிவு எடுக்கும் என்று உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X