For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க முடியாத புதுவை அரசு-ஜெ.சாடல்

Google Oneindia Tamil News

சென்னை: அரசு மருத்துவக் கல்லூரியைக் கட்டி வைத்து விட்டு அதற்கு அனுமதி வாங்கக் கூட முடியாமல் உள்ளது புதுச்சேரி காங்கிரஸ் அரசு. அதேபோல தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து அரசு ஒதுக்கீட்டு இடங்களையும் கூட அந்த ஆட்சியால் வாங்க முடியாதது கடும் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

சுமார் ரூ.150 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் புதுச்சேரி அரசு மருத்துவமனை நடப்பு கல்வி ஆண்டில் தொடங்கப்படும் என்று சட்டமன்ற பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துவிட்டது.

இதன் காரணமாக 150 திறமையுள்ள ஏழை,எளிய மாணவ-மாணவியர் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், தனியார் மருத்துவக் கல்லூரியான மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி இந்திய மருத்துவ கவுன்சில் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்து அனுமதியை பெற்றுவிட்டது.

இதே போன்று, வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவக் கல்லூரியும் நீதிமன்றத்தின் மூலம் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியை பெற்றுவிட்டது. ஆனால் புதுச்சேரி அரசினால், அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை பெற முடியவில்லை.

இத்தனைக்கும் மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சிதான் நடைபெறுகிறது. அப்படி இருந்தும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வாங்க முடியாததும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டும் அனுமதி கிடைப்பதும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் மெத்தனப் போக்கையே காட்டுகிறது.

அரசு மருத்துவக்கல்லூரியின் நிலைமை இப்படி என்றால், தனியார் மருத்துவக்கல்லூரிகளிடமிருந்து 50 விழுக்காடு அரசு ஒதுக்கீட்டை பெறுவதில் இதைவிட மோசமான சூழ்நிலை நிலவுகிறது. புதுச்சேரியில் உள்ள ஏழு தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து ஒவ்வொரு ஆண்டும் 50 விழுக்காடு அரசு ஒதுக்கீடாக 450 இடங்களை பெற வேண்டிய பொறுப்பு புதுச்சேரி மாநில அரசுக்கு இருக்கிறது.

ஆனால், எந்த ஆண்டும் இந்த இடங்கள் முழுமையாக புதுச்சேரி அரசால் பெறப்படுவதில்லை. நடப்பு கல்வி ஆண்டில் வெறும் 265 இடங்களை மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து புதுச்சேரி அரசு பெற்று இருக்கிறது. இதுவும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் அரசின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.

புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான அனுமதியை இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து பெற முடியாத புதுச்சேரி மாநில அரசின் மெத்தனப் போக்கைக் கண்டித்தும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 விழுக்காடு அரசு ஒதுக்கீட்டை பெற முடியாத புதுச்சேரி மாநில அரசின் அலட்சியப் போக்கை கண்டித்தும், அரசு மருத்துவக் கல்லூரிக்கான அனுமதியை உடனடியாக பெற வலியுறுத்தியும், தனியார் மருத்துவக் கல்லூரிகளிடமிருந்து 50 விழுக்காடு அரசு ஒதுக்கீட்டை முழுமையாக பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க. புதுச்சேரி மாநிலக் கழகத்தின் சார்பில், இன்று மாலை 4 மணி அளவில், புதுச்சேரி, கதிர்காமம், வழுதாவூர் ரோடு, அரசு மருத்துவக் கல்லூரி எதிரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், தேர்தல் பிரிவு இணைச் செயலாளர் நா.பாலகங்கா, எம்.பி., தலைமையிலும், புதுச்சேரி மாநில செயலாளர் ஏ.அன்பழகன், எம்.எல்.ஏ., புதுச்சேரி மாநில ஜெயலலிதா பேரவைச் செயலாளர் ஓம் சக்தி சேகர், எம்.எல்.ஏ., காரைக்கால் மாவட்டக் செயலாளர் வி. ஓமலிங்கம், எம்.எல்.ஏ., மற்றும் புதுச்சேரி மாநில இணைச் செயலாளர் ஏ.எம். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X