விநாயகர் சதுர்த்தி: பிள்ளையார் அருளால் மக்கள் இடர் தீரட்டும்-ஜெ.
சென்னை: பிள்ளையார் அருளால் மக்களின் இடர்கள் தீரட்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா விநாயகர் சதுர்த்தியையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:
ஆனைமுகப் பெருமானை போற்றி பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
நம்மால் தொடங்கப்படும் சுப காரியங்களுக்கு விக்னயம் ஏற்படாமல் காப்பவர் விக்னங்களுக்கு ராஜாவான விநாயகப் பெருமான்! அறிவு, தெளிந்த ஞானம் முதலியவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடையுறா வண்ணம் காத்தருள்பவர் விநாயகப் பெருமான்! ஈசன் மகனான கணபதியை துதித்த பின்பு எந்தச் செயலை தொடங்கினாலும் வெற்றி நிச்சயம் என்பது ஐதீகம்.
இந்த நன்னாளில், கேட்கும் வரத்தைத் தரும் பிள்ளை குணம் கொண்ட பிள்ளையாரின் அருளால் அனைத்துத் தரப்பு மக்களின் இடர்கள் தீர வேண்டும். அனைவருக்கும் எல்லா நலமும், வளமும் கிடைக்க வேண்டும், ஆனந்தமயமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, விநாயக சதுர்த்தியை கொண்டாடும் தமிழக மக்களுக்கு எனது இனிய விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விநாயகர் சிலைகள் விற்பனை தீவிரம்:
இந்துக்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. நாளை இது கொண்டாடப்படுகிறது. வேலனுக்கு மூத்தவனும், காரியங்கள் நிறைவேற வணங்கும் முதல்வருமான விநாயகருக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்படும்.
நாடு முழுவதும் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வணங்கி வழிபடுவர். தமிழகத்தில் விநாயகர் சிலைகள் வைக்கும் பணிகள் தொடங்கி விட்டன. சிலை விற்பனையும் சூடு பிடித்துள்ளது.
வீடுகளில் விநாயகர் சதுர்த்தி பூஜையை, நாளை காலை 8 மணிக்கு மேல் 9 மணிக்கு முன்னர் லக்னத்தில் சந்திரன், லக்னம் சித்திரை நட்சத்திரத்தின் வழியாக பயணிக்கும் காலத்தில் செய்யலாம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.