For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வருகிறது தேர்தல்-ரூ.1,000 கோடியில் சீரமைக்கப்படும் சாலைகள்!

By Chakra
Google Oneindia Tamil News

Road
சென்னை: தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் மழை மற்றும் பாதாள சாக்கடை திட்டங்களால் சேதமடைந்த சாலைகளை மேம்படுத்த ரூ. 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் இந்தப் பணிகளை நிறைவேற்றி முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள 560 பேரூராட்சிகள், 149 நகராட்சிகள் மற்றும் 9 மாநகராட்சிகளில் உள்ள பழுதடைந்த சாலைகள் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்டப்படவுள்ளன.

இயற்கை சீற்றங்களாலும், சாக்கடை வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும் தோண்டப்பட்டு சேதமடைந்த சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

அகலம் குறைந்த சாலைகளில் 25 முதல் 50 சதவீத சாலைகள் நவீன கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படவுள்ளன. மேலும் ஓரிரு முக்கிய சாலைகளும் சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக மாற்றப்படவுள்ளன.

மற்ற இடங்களில் புதிய தார் சாலைகள் போடப்படவுள்ளன.

பேருந்துகள் செல்லும் சாலைகள், பாரம்பரியம்மிக்க, புனிதத் தலங்கள் அல்லது சுற்றுலா தலங்கள் அல்லது கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் சாலைகள், மார்க்கெட் பகுதிகள், தொழிற் பூங்காக்கள் போன்றவற்றுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இது குறித்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் அஷோக் வர்தன் ஷெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் பேரூராட்சிகள் இயக்குனர், அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக, பல்வேறு நகரப் பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பணிகள் காரணமாக தோண்டப்பட்டதில், சாலைகள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன. இதுதவிர மழையின் காரணமாகவும் சாலைகள் பாதிப்படைந்துள்ளன.

இதில், சில சாலைகள் உள்ளாட்சி அமைப்புகளிடம் உள்ள பொது நிதியைக் கொண்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டுள்ளன. ஆனால் போதிய நிதியின்மை காரணமாக, சாலைகளை சீரமைப்புப் பணிகளை பெரிய அளவில் உள்ளாட்சி அமைப்புகளால் மேற்கொள்ள முடியவில்லை. இது பற்றி உள்ளாட்சி பிரதிநிதிகளும் தொடர்ந்து முறையிட்டு வருகிறார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் உள்ள 19,581 கி.மீ. நீளமுள்ள சாலைகளில், 5,000 கி.மீ. நீள சாலைகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும். அதற்கு ரூ.1,000 கோடி நிதி தேவை. எனவே 'சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011' என்ற திட்டத்தின் கீழ் உடனடியாக நிதி ஒதுக்கித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இதை பரிசீலித்த அரசு கேட்கப்பட்ட நிதியை ஒதுக்க முடிவெடுத்து, சில வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளது.

இதன்படி, தமிழக நகர்ப்புற கட்டமைப்பு நிதிசேவை நிறுவனத்திடமிருந்து ரூ.147 கோடி, பத்திரப் பதிவில் 50 சதவீத கூடுதல் வரி விதிப்பு மூலம் கிடைக்கும் ரூ.350 கோடி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3வது நிதி கமிஷன் பரிந்துரைப்படி வழங்கப்பட வேண்டிய ரூ.194 கோடி மற்றும் நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குனரின் கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் இருந்து ரூ.309 கோடி நிதி ஆகியவற்றின் மூலம் இந்த ரூ. 1,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, சாலை சீரமைப்புப் பணிகளை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்தப் பணிகளுக்கான நிர்வாக ஒப்புதல் மற்றும் பணி ஆணைகளை மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 6 மாநகராட்சிகளின் மேயர்கள், 29 நகராட்சிகளின் தலைவர்கள், 2 பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு நகராட்சி அமைப்பு அதிகாரிகளும் ஸ்டாலினிடம் பெறவுள்ளனர்.
அதன்பிறகு, உடனடியாக டெண்டர்கள் கோரப்பட்டு பணிகள் தொடங்கும்.

நகராட்சி நிர்வாக செயலாளர் தலைமையில், நகராட்சி நிர்வாக இயக்குனர், பேரூராட்சிகள் இயக்குனர், நகராட்சி நிர்வாக முதன்மை பொறியாளர் ஆகியோர் கொண்ட கமிட்டி, சாலை பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கும்.

இந்த திட்டத்தை மாவட்ட கலெக்டர்கள் கண்காணித்து, ஆய்வு செய்ய அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்த சாலைப் பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X