For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.தான் அப்படி என்றால் கம்யூனிஸ்டுகளும் அதேபோல பேசலாமா?கருணாநிதி

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதாதான் அரசுக்கு எதிராகவே எப்போதும் அறிக்கை விடுகிறார் என்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்கள் அதே பாணியில் மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்ற அளவிற்குப் பேசலாமா? எழுதலாமா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.

இதுதொடர்பாக திமுகவினருக்கு முரசொலியில் முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கடிதம்...

வாரம் ஐந்து நாள் முட்டை வழங்கும் முதல்வருக்கு சில கேள்விகள் என்ற தலைப்பில் 17-9-2010 தேதிய தீக்கதிர் நாளிதழில் கொட்டை எழுத்துச் செய்தி ஒன்று என் கண்ணில்பட்டது!

அந்த இதழ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வமான ஏடு. தமிழகத்திலே உள்ள ஏழையெளிய வீட்டு சிறார்களுக்கு தற்போது வாரம் ஒன்றுக்கு மூன்று முட்டைகள் என்று வழங்கப்படுவதை, ஐந்து முட்டைகள் என்று அரசின் சார்பில் அண்ணா பிறந்த நாளினையொட்டி நான் செய்த அறிவிப்பினைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் - பொறாமையின் உச்சக் கட்டத்திற்குச் சென்று அந்த நாளேட்டில் எனக்கு சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.

அடித்தட்டு மக்களுக்காகப் பாடுபட உறுதியெடுத்துக் கொண்ட அந்த ஏடு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எந்த அளவிற்கு மாறிவிட்டது என்பதை நினைக்கும் போது வருத்தமாகவே உள்ளது.

கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை வைத்ததாகவும், 24 மணி நேரத்திற்குள் முதல்வரால் அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது என்றும் உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. பண்ணையாளர்களின் கோரிக்கைகளை ஏற்பவர்கள் யார் என்று இன்றைய மார்க்சிஸ்ட்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். தஞ்சைத் தரணியில் பண்ணையார்களை எதிர்த்துத்தான் என்னுடைய அரசியல் வாழ்க்கையே தொடங்கியது.

பண்ணையாளர்களின் கோரிக்கைகளை யேற்று பாவ காரியங்களைச் செய்தவர்களோடு தோழமை கொண்டுள்ள சகவாச தோஷத்தினால், அதே கெட்ட எண்ணத்தோடு அதனை எழுதியிருக்கிறார்கள். எந்தக் கோழிப்பண்ணை முதலாளிகளுக்கும் நன்மை ஏற்பட வேண்டுமென்பதற்காக அல்ல - சிறார்களுக்கு உண்மையிலேயே சத்துள்ள உணவு அன்றாடம் கிடைத்திட வேண்டுமென்ற அடிப்படையிலேதான் அந்த அறிவிப்பு செய்யப் பட்டது.

மார்க்சிஸ்ட் நாளேடு எழுதியுள்ள அந்த நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தினர் யாராவது நான் அந்த அறிவிப்பைச் செய்வதற்கு முன்பு என்னைச் சந்தித்தது உண்டா? ஏதாவது கோரிக்கையினை என்னிடம் அளித்தது உண்டா? அதனை ஏற்பதாக நான் அவர்களிடம் தெரிவித்தது உண்டா என்பதை மார்க்சிஸ்ட் நாளேடு ஆதாரத்தோடு வெளியிடுவதற்குத் தயாரா? நான் அந்த அறிவிப்பினை செய்த பிறகுதான், அந்தச் சங்கத்தினர் நேற்றையதினம் எனக்கு நன்றி தெரிவிப்பதற்காக மத்திய இணை அமைச்சர் நாமக்கல் காந்திசெல்வன் மூலமாக என்னிடம் நேரம் கேட்டு, நான் நேற்று அவர்களைச் சந்தித்தேன்.

அந்த நேரத்தில் கூட, நான்தான் அவர்களிடம் ஒரு செய்தியைத் தெரிவித்தேன். என்ன செய்தி என்றால், முட்டை உற்பத்தி பெருக அரசு வழி வகுத்துள்ளது. அரசின் பெருந்தன்மையை உணர்ந்து நீங்கள் முட்டை விலையைக் குறைத்துக்கொள்ள முன்வர வேண்டும். அப்போதுதான் இத்திட்டம் தொடரும் என்று கண்டிப்பாகத் தெரிவித்திருக்கிறேன்.

15-ஆம் தேதியன்று மாலையில் நான் வெளியிட்ட அறிவிப்பு, அத்துடன் நின்றுவிடாமல் 17-ஆம் தேதியன்றே அரசினால் ஆணை பிறப்பிக்கப்பட்டுவிட்டது. அந்த ஆணையில் முட்டைகள் சாப்பிடாத மாணவர்களுக்கு முட்டைகளுக்குப் பதிலாக வாழைப்பழம் வழங்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏடு வாழை உற்பத்தியாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாக சொல்லும்?

ஆக்கப் பொறுத்தவர்கள் ஆறப் பொறுக்க மாட்டார்கள் என்று ஒரு பழமொழி உண்டு. அதைப்போல அந்த நாளேடு அறிவிப்பு வெளி வந்த மறுநாளே, முட்டையை எப்படி வேக வைப்பது, முட்டை ஓடுகளை எங்கே கொண்டு போய் கொட்டுவது, கொண்டைக் கடலை தொடர்ந்து வழங்கப்படுமா, அதற்கான செலவுகளுக்கெல்லாம் என்ன செய்வது என்று என்னிடம் பல கேள்விகளை எழுப்பியிருக்கின்றது.

இப்படிப்பட்ட அவசரக்காரர்களை எண்ணித்தான் அரசின் சார்பில் இன்று காலையில் விரிவாக அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த அரசாணையில், "ஏற்கனவே செவ்வாய்க்கிழமை 20 கிராம் வேக வைத்த கொண்டைக் கடலை அல்லது பச்சைப் பயறு - வெள்ளிக்கிழமை 20 கிராம் வேக வைத்த உருளைக் கிழக்கு ஆகியவைகளும் தொடர்ந்து வழங்கப்படும். இத்துடன் சத்துணவுக் கூடங்களில் காய்கறி, விறகு ஆகிய செலவுகளுக்காக ஒரு குழந்தைக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த 44 பைசா என்பதும் உயர்த்தி வழங்கப்படும்'' என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தீக்கதிர் அவசரப்பட்டு ஆத்திரத்தைக் கொட்டித் தீர்க்கலாமா? அரசியல் காரணமாக எதிர்ப்பு இருக்கலாம். அதற்காக மக்களுக்குத் தேவையான காரியங்களைச் செய்வதையெல்லாம் சேர்த்து எதிர்த்தால் உங்கள் கட்சியைப் பற்றி அந்த முட்டைகளை சாப்பிடப் போகும் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் என்ன நினைப்பார்கள்?

அண்ணா பிறந்த நாளில் ஐந்து நாட்கள் முட்டைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்போடு தமிழகத்திலே அரசு அலுவலகங்கள், அரசு சார்புடைய நிறுவனங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தினக் கூலி அடிப்படையில் அல்லது தொகுப்பூதியத்தில் பணி புரியும் துப்புரவு தொழிலாளர்களின் ஊதியத்தில், ஒவ்வொருவருக்கும் சுமார் ஆயிரம் ரூபாய் அளவிற்கு கூடுதலாகக் கிடைத்திடக் கூடிய வகையில் அதாவது இனி மாதம் ஒன்றுக்கு தொடக்க நிலையில் 2,320 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தேனே, அது யாருடைய கோரிக்கை? அந்தக் கோரிக்கையினை எந்தப் பண்ணையார் வைத்ததாக அந்த மார்க்சிஸ்ட் ஏடு எண்ணுகின்றது?

அடித்தட்டு மக்களுக்காக பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் அந்த ஏடு அந்த மக்களுக்காக அறிவிக்கப்பட்ட அந்தச் சாதனையைப் பாராட்டி எழுதியிருக்க வேண்டாமா? அப்படிப் பாராட்டி எழுத மனம் வராமல், முட்டைகள் வழங்குவதற்கு மட்டும் உள்நோக்கம் கற்பித்து எழுதுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் சேருவார் தோஷம்தானே?

பன்றிக் காய்ச்சல் வராமல் தடுக்க வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. உடனே அந்த ஊசித் தயாரிப்பாளர்களுக்காக அந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதாகக் கூறுவதா?

பால் உற்பத்தியாளர்களுக்காக 17 கோடி ரூபாய் அளவிற்கு ஊக்கத் தொகை அரசின் சார்பில் நேற்றையதினம் வழங்கினேன். உடனே பால் உற்பத்தியாளர்களுக்கான கோரிக்கை ஏற்கப்பட்டது என்று அதற்கு ஒரு அர்த்தம் கற்பித்து எழுதுவதா?

மக்களுக்கு நன்மைகள் செய்திட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒரு அரசு ஆட்சிப் பொறுப்பிலே இருந்தால், அதன் சார்பில் பல்வேறு நலத் திட்டங்கள் அறிவிப்பதும், அவைகளை நடைமுறைப்படுத்துவதும் வழக்கமான ஒன்றுதான்!

கலைஞர் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு ஏழை யெளிய மக்கள் எல்லாம் அதனை வரவேற்கிறார்கள். ஆனால் எதிர்க் கட்சித் தலைவர் ஜெயலலிதா மட்டும் அந்தத் திட்டத்திலே 3000 கோடி ரூபாயை யாருக்கோ கொடுத்துவிட்டார்கள், அவர்கள் எனது குடும்பத்தினருக்கு உறவினர்கள் என்றெல்லாம் அறிக்கை விடுகிறார் என்றால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நண்பர்கள் அதே பாணியில் மாங்காய் புளித்ததோ, வாய் புளித்ததோ என்ற அளவிற்குப் பேசலாமா? எழுதலாமா?

இன்னும் அவர்களுக்கு உதாரணத்திற்காக ஒன்றைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன். ஏழையெளிய மக்களுக்காக கழக ஆட்சி அமைந்த பிறகு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை இலவசமாக வழங்கிட முடிவு செய்தபோது, அது முடியாதென்றார்கள், அந்தப் பெட்டிகளை வாங்குவதிலே ஊழல் நடக்குமென்று பக்கம் பக்கமாக எழுதினார்கள்.

ஆனால் கழக அரசின் சார்பில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வாங்கி விநியோகிப்பது குறித்து தொடக்கத்திலேயே சட்டமன்றத்திலே உள்ள அனைத்துக் கட்சியினரையும் கொண்டு ஒரு குழு அமைக்கப்பட்டு - ஒவ்வொரு ஆண்டும் பல முறை அந்தக் குழு கூடி, வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகளை வாங்குவதைப் பற்றி திறந்த வெளி ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரி, அதனை அந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் மத்தியில்தான் பிரித்து, ஒவ்வொருவரும் எந்த அளவிற்கு விலைப் புள்ளிகளைக் குறித்திருக்கிறார்கள் என்பதை யெல்லாம் எல்லா கட்சித் தலைவர்களும் நேரடியாக கண்டு அவர்களது ஒப்புதலைப் பெற்றுதான் அவற்றை வாங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது என்பதை அனைவரும் அறிவார்கள். ஒரு கோடிக்கு மேற்பட்ட வண்ணத்தொலைக்காட்சி பெட்டிகள் வாங்கியதில் ஒரு சிறு ஊழல் நடைபெற்றதாகக் கூட யாராவது கூற முடியுமா?

எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் மக்களுக்கு நன்மைகளைச் செய்திட வேண்டு மென்பதிலே மட்டும்தான் அக்கறை உள்ள அரசு. சமூக நலத் துறையின் மூலமாக சத்துணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு முட்டைகளின் எண்ணிக்கையை மாத்திரமா இந்த அரசு உயர்த்தியிருக்கிறது? அந்தத் துறையின் சார்பில் கடந்த நான்காண்டுகளில் செய்யப்பட்ட ஒருசில சாதனைகளை மட்டும் இங்கே குறிப்பிட்டுக் காட்டுகிறேன்.

ஏழைப் பெண்களின் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் 3,44,206 பேர்களுக்கு 624 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 50 வயதினையொட்டி, திருமணம் ஆகாமல் இருக்கும் ஏழையெளிய பெண்களுக்கு மாதம் 400 ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 31-3-2010 வரை 11,860 பேர் இத்திட்டத்தின்கீழ் பயனடைந்துள்ளனர். விதவை மறுமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி உதவி கடந்த நான்கு ஆண்டுகளில் 89 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

கலப்புத் திருமண நிதி உதவித் திட்டத்தின் கீழ் கடந்த நான்காண்டுகளில் 9,545 தம்பதியர்க்கு 18 கோடியே 36 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் 11,197 பேருக்கு சுமார் 18 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. ஆதரவற்றப் பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் 1,302 பேருக்கு 199 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அரவாணிகள் நல வாரியம் இத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டு, பல்வேறு உதவிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் ஆயிரம் அரவாணிகளுக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 451 அரவாணிகளுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க 2009-2010ஆம் நிதியாண்டில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சத்துணவு மையங்களை நவீனப்படுத்தும் முகமாக 3 கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் 1,850 சத்துணவு மையங்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு இலவசச் சீருடை வழங்கும் திட்டத்தின்கீழ் துணி கொள்முதல் செய்வதற்கு கடந்த நான்காண்டுகளில் 123 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது. சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கழக ஆட்சியிலேதான் மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

கழக ஆட்சியிலேதான் சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களில் பத்தாண்டுப் பணி முடித்தவர்களுக்கு ஒரு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.

சத்துணவு சமையலர்கள், உதவியாளர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே கழக ஆட்சியிலேதான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்று வருகிறார்கள். சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணி யாளர்களுக்கு மார்க்சிஸ்ட்கள் தற்போது துணையாக உள்ள அ.தி.மு.க. ஆட்சியில் அகவிலைப்படி தவிர ஏனைய படிகள் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் அவர்களுக்கு முதல் முறையாக வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, பண்டிகைக் கால முன்பணம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.

சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மாதாந்திர ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் சத்துணவுத் திட்டம் தொடங்கிய காலம் முதல் இதுவரை பணியாற்றி ஓய்வு பெற்ற அனைத்துப் பணியாளர்களுக்கும் முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.

கழக ஆட்சியிலேதான் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பொங்கல் பரிசுத் தொகை 28-12-2006 முதல் 825 ரூபாய் என உயர்த்தப்பட்டு - மீண்டும் அது 5-2-2008 முதல் 1000 ரூபாய் என உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களுக்கு பதவி உயர்வு எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் சத்துணவு அமைப்பாளர்களுக்கு பதிவுரு எழுத்தர்களாகவும், அலுவலக உதவியாளர்களாகவும், இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்களாகவும், சத்துணவு உதவியாளர்களுக்கு சமையலர்களாகவும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு சத்துணவு அமைப்பாளர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருகிறது.

சத்துணவு சமையலர் மற்றும் உதவியாளர் இயற்கை எய்தினால், அவர்களுடைய வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கும் முறை கழக ஆட்சியிலே தான் வழங்கப்பட்டது.

கழக ஆட்சியிலேதான் - 1-4-2010 முதல் பொது வருங்கால வைப்பு நிதித் திட்டமும், சிறப்பு சேமநல நிதித் திட்டம் பத்தாயிரம் ரூபாயாகவும், குடும்ப நலத் திட்டம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாகவும், தமிழ்நாடு அரசின் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உயர்ந்த பட்சமாக இரண்டு லட்ச ரூபாய் வரையும், மகளிருக்கு மகப்பேறு காலத்தில் 3 மாத விடுப்பும், சத்துணவு பணியாளர்களுக்கு கோடை விடுமுறை காலத்திற்கும் ஊதியம் என்றெல்லாம் வழங்கப்படுகிறது.

2001 முதல் 2006 வரை ஐந்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் 7655 பணி இடங்களில் மட்டுமே புதியவர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு மாறாக, கழக ஆட்சியில் இந்த நான்காண்டுகளில் 57 ஆயிரம் பணி இடங்கள் புதிதாக நிரப்பப்பட்டுள்ளன.

சத்துணவு அமைப்பாளர்களும், அங்கன்வாடிப் பணியாளர்களும் அ.தி.மு.க. ஆட்சியில் மாதந்தோறும் குறைந்தபட்சமாக 1488 ரூபாயும், உயர்ந்தபட்சமாக 2158 ரூபாயும் பெற்று வந்தனர். ஆனால் கழக ஆட்சியில் தற்போது அவர்கள் குறைந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 3780 ரூபாயும், உயர்ந்தபட்ச ஊதியமாக மாதந்தோறும் 4694 ரூபாயும் பெற்று வருகின்றனர். மக்களுக்கான திட்டங்களைத் தீட்டும்போது, அதில் குற்றம் குறை இருந்தால் அதனைச் சுட்டிக்காட்டுகின்ற எதிர்க்கட்சியாக இருக்க வேண்டுமேயல்லாமல், எங்கோ, ஏதோ என்று எதையோ கூறி எரிச்சலை உமிழ்கின்ற எதிரிக்கட்சிகளாக இருக்கக் கூடாது!

இந்தத் துறை மூலமாக மட்டும் செய்யப்பட்டு வரும் சாதனைப் பட்டியல்களைத் தொகுத்துள்ளேன். ஆனால் இவைகளைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமை வயப்பட்டு எழுதுவோரையும் உன் நினைவிற்குக் கொண்டு வந்துள்ளேன். உண்மையைப் புரிந்துகொள் என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X