• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஷ்மீரைப் போல இலங்கைக்கும் உண்மை கண்டறியும் குழுவை அனுப்பும் பாஜக

|

Eelam Tamils
டெல்லி: காஷ்மீருக்கு மத்திய அரசு உண்மை கண்டறியும் அனைத்துக் கட்சிக் குழுவை அனுப்பியிருப்பதைப் போல இலங்கைக்கும் ஒரு உண்மை கண்டறியும் குழுவை பாஜக அனுப்பவுள்ளது.

இந்தக் குழுவில் பாஜக கூட்டணிக் கட்சிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த சில கட்சிகள் இடம் பெறும் என்று தெரிகிறது. அதிமுகவும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையில் போர் முடிவடைந்ததாக அந்த நாட்டு அரசு அறிவித்து ஒரு வருடத்தைத் தாண்டி விட்டது. ஆனாலும் இன்னும் போரினால் பாதித்து, இடம் பெயர்ந்த தமிழர்களுக்கு எந்தவிதமான விமோச்சனமும் ஏற்படவில்லை. போர் நடந்த தமிழர் பகுதிகளில் இன்னும் யாரும் குடியமர்த்தப்படவில்லை. கண்ணிவெடிளை தேடுகிறோம் என்று கூறிக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

முள்வேலி முகாம்களில் இன்னும் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் அடைபட்டுள்ளனர். சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல், அடிப்படை வசதி இல்லாமல், வாழ்வாதாரம் இல்லாமல் முடங்கிப் போய் பிச்சைக்காரர்களாக திரியும் அவல நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அரசிடம் கேட்கும்போதெல்லாம் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றுமட்டும் கூறிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் நிரூபமா ராவும், எல்லாம் திருப்திகரமாக இருக்கிறது என்று ஒற்றை வரியுடன் முடித்துக் கொண்டார்.

இலங்கையில் உள்ள நிலவரத்தை அறிய திமுக தலைமையில், ஒரு திமுக கூட்டணி குழு சென்று திரும்பியது. இருப்பினும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

இந்த நிலையில் தற்போது காஷ்மீர் நிலைமை குறித்து பெரும் கவலை அடைந்துள்ள மத்திய அரசு அந்த விவகாரத்தை பட்டும் படாமலும், மிக மிக கவனமாகவும் கையாளுகிறது. யாருடைய மனதும் புண்பட்டு விடாமல் பிரிவினைவாத தலைவர்களைக் கூட வீடு தேடிச் சென்று பார்த்து பவ்யமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த அடிப்படையில், தற்போது பாஜக ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக தெரிகிறது. ஈழத்தில் தற்போது உள்ள உண்மை நிலை என்ன என்பதை அறிந்து கொள்வதற்காக காஷ்மீர் பாணியில் ஒரு உண்மை கண்டறியும் குழுவை, பல்வேறு கட்சிகள் அடங்கிய குழுவை இலங்கைக்கு அது அனுப்பத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தேசிய அளவில் ஆரம்பத்திலிருந்தே இலங்கைப் போரில் இலங்கை அரசை கடுமையாக சாடி வந்தது பாஜக மட்டுமே. அப்பாவித் தமிழர்களை இலங்கைப் படையினர் கொடூரமாக கொன்று குவித்து வருவதை நாடாளுமன்றத்தில் சுஷ்மா சுவராஜ் மிகக் கடுமையாக சாடிப் பேசினார். தேசிய அளவில் ஈழத் தமிழர்களுக்காக ஒரே குரலில் தனது கருத்தை ஒலித்து வரும் கட்சியும் பாஜக மட்டுமே.

இந்த நிலையில் தற்போது தேசிய அளவில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்பி வைத்து உண்மையைக் கண்டறிய அது திட்டமிட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகாலிதளம், ஐக்கிய ஜனதாதளம், சிவசேனா ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பெறவுள்ளனர்.மேலும், தமிழகத்தைச் சேர்ந்த கட்சிகள் சிலவும் கூட இடம் பெறும் எனத் தெரிகிறது. அதிமுகவும் கூட இடம் பெறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தக் குழுவுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின்னர் இக்குழு இலங்கை செல்லலாம்.

காஷ்மீருக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவினருடன் பத்திரிக்கையாளர்களையும் அனுப்பி வைத்துள்ளது மத்திய அரசு. அதேபோல பாஜக குழுவினருடன் பத்திரிக்கையாளர்களும் செல்லலாம் என தெரிகிறது. ஆனால் பத்திரிக்கையாளர்களை இலங்கை அரசு அனுமதிக்குமா என்பது சந்தேகம்தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X