• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னாள் அதிமுக அமைச்சர் வெங்கடாசலம் வெட்டிப் படுகொலை

|

Venkatchalam
புதுக்கோட்டை: கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து விட்டனர். வெங்கடாசலம் படுகொலையைத் தொடர்ந்து தொடர்ந்து புதுக்கோட்டை முழுவதும் பதட்டமாக உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வட காடு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடாசலம். விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணை செயலாளராக இருந்தார். ஆலங்குடி தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். மாநில அ.தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், 2001-ம் ஆண்டு பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இவருக்கு லட்சுமி என்ற மனைவியும், ராஜதுரை, ராஜபாண்டி, ராஜராஜன் என்ற 3 மகன்களும், பவளக்கொடி, சுமதி ஆகிய 2 மகள்களும் உள்ளனர். ராஜதுரை நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளராக உள்ளார்.

58 வயதான வெங்கடாசலம் தனது கிராமத்தில் பிள்ளையார்கோவில் கட்டி வருகிறார். நேற்று மாலை கோவில் கட்டும் பணிகளைப் பார்வையிட்டு விட்டு வீடு திரும்பினார். வீட்டிற்கு வெளியே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தார். வீட்டுக்குள் மனைவி, மகன் இருந்தனர்.

சிறிது நேரத்தில் வெங்கடாசலத்தின் அலறல் சத்தம் கேட்டு அவரது மனைவியும், மகனும் ஓடி வந்து பார்த்தனர். அப்போது ரத்த வெள்ளத்தில் வெங்கடாசலம் துடிதுடித்துக் கொண்டிருந்தார்.

அவரது ஒரு கையின் மணிக்கட்டு வரை வெட்டி துண்டாகிக் கிடந்தது. மார்பு, முதுகு, வயிறு என சரமாரியாக அவரை வெட்டியிருந்தனர்.

அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து வெங்கடாசலத்தை மீட்டு புதுக்கோட்டைக்குக் கொண்டு சென்று தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் இரவில் மரணமடைந்தார்.

ஆனால் அவரது உடலைப் பெற்றுக் கொள்ள உறவினர்கள் மறுத்து விட்டனர். இதனால் இன்னும் வெங்கடாசலத்தின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாமல் உள்ளது.

புதுக்கோட்டை முழுவதும் கடையடைப்பு:

வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்ட தகவல் பரவியதும் புதுக்கோட்டை முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.

வட காடு பகுதியில் பொதுமக்கள் திரண்டு வந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸ் ஜீப்பை பொதுமக்கள் திரண்டு சென்று முற்றுகையிட்டு தீயிட்டுக் கொளுத்தினர். பஸ்களும் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. கடைகள் அடைக்கப்பட்டன.

வடகாடு மற்றும் சுற்றுப் பகுதிகளில் பெரும் பதட்டம் நிலவுகிறது. இதனால் அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தஞ்சை, திருச்சியிலிருந்தும் போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட எஸ்.பி. முத்துச்சாமி முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனித்து வருகிறார்.

புதுக்கோட்டை முழவதும் இன்று காலை முதல் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பந்த் நடப்பது போல பதட்டம் காணப்படுகிறது. பஸ்கள் எதுவும் புதுக்கோட்டையி்ல் இயக்கப்படவில்லை.

பல இடங்களில் சாலை மறியல் நடந்துள்ளது. அவர்களை போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.

அரசியல் தகராறால் கொலையா?

வெங்கடாசலம் தாக்கப்பட்டவுடன் ஒரு கார் படு வேகமாக அவரது வீட்டுப் பகுதியிலிருந்து கிளம்பிச் சென்றதை பலரும் பார்த்துள்ளனர். எனவே அதில் வந்த நபர்கள்தான் கொலைசெய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அரசியல் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

வெங்கடாச்சலம் 1996 சட்டசபைத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு ஆலங்குடியில் வெற்றி பெற்றார். பின்னர் அவர் அதிமுகவில் சேர்ந்தார். அதன் பின்னர் அதிமுக சார்பில் ஆலங்குடியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வென்று ஆட்சியைப் பிடித்த பின்னர் அமைச்சரானார். ஆனால் வெறும் 40 நாட்கள் மட்டுமே அப்பொறுப்பில் அவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா கண்டனம்-இரங்கல்:

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கண்டனமும், அவரது குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர்.மன்ற துணைச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்புச் சகோதரர் அ.வெங்கடாசலம், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு கிராமத்தில் உள்ள அவரது வீட்டிலேயே முகமூடி அணிந்த மர்ம மனிதர்களால் கொடூரமாக கொல்லப்பட்டு உள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

அவர், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் இருந்து 3 முறை தமிழ்நாடு சட்டமன்ற பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர். கட்சியிலும் பல்வேறு பொறுப்புகள் வகித்தவர்.

அவரை கொடூரமான முறையில் கொன்ற மர்ம மனிதர்களை உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்து, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதோடு, இந்த காட்டுமிராண்டித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு எனது கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெங்கடாசலத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X