For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேர்மை, நாணயமே இல்லாத ராசா அமைச்சராக இருக்க தகுதியற்றவர்-ஜெ.

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நாணயம், நேர்மை ஆகியவற்றை சற்றும் கடைப்பிடிக்காத மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அ.ராசா, அந்தப் பதவியில் இருக்க தகுதியற்றவர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அமைச்சர் ஆ. ராசாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ராசா இன்னமும் மத்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியில் எப்படி தொடர்கிறார் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது. உச்ச நீதிமன்றம் இவ்வாறு ஒரு கருத்தினை தெரிவித்த பிறகும், ராசா தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். இதன் மூலம், ஒழுக்க முறைகளை, நன்னடத்தைகளை முற்றிலும் கடைபிடிக்காதவர் ராசா என்பது தெளிவாகிறது. பொது வாழ்வில் நேர்மையையும், நாணயத்தையும் கடைபிடிக்கத் தவறிய ராசா, பொறுப்பு வாய்ந்த, அதிகாரம் செலுத்தக்கூடிய பதவியை வகிக்க தகுதியற்றவர்.

2008-ஆம் ஆண்டு அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்றம், 2ஜி அலைவரிசை ஒதுக்கீடு 'சினிமா டிக்கெட் போல் விற்பனை செய்யப்பட்டது' என்று கருத்து தெரிவித்த போதே தன்னுடைய பதவியை ராசா ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஆனால், அந்த வழக்கின் தீர்ப்பை நீதிமன்றம் வெளியிடுவதற்கு முன்பே வழக்கு தொடுத்தவரை நிர்பந்தப்படுத்தி வழக்கை திரும்பப் பெறச் செய்துவிட்டார் ராசா.

2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதியான 1.10.2007 என்பதை 25.9.2007 என்று முன்தேதியிட்டு மாற்றி அமைத்ததை எதிர்த்து எஸ் டெல் நிறுவனம் தொடுத்த வழக்கில், விளையாட்டு தொடங்கிய பிறகு விதிகளை மாற்றுவதைப் போல் உள்ளது என்று தெரிவித்து, இந்த மாற்றம் சட்டப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்த போதே ராசா தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து தொலைதொடர்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி. ஷா தலைமையிலான நீதிமன்ற அமர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று தெரிவித்ததோடு, பிரதமரை தவறுதலாக மேற்கோள் காட்டியதற்கு கடும் கண்டனம் தெரிவித்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து, தில்லி உயர் நீதிமன்ற தனி நீதிபதியின் ஆணையை 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உறுதி செய்த போதே ராசா தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

ஆனால், அதைச் செய்யாமல், டெல்லி உயர் நீதிமன்ற அமர்வின் தீர்ப்பை எதிர்த்து தொலைதொடர்புத் துறை மூலம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வைத்தார் ராசா. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தை மிரட்டி, வழக்கை திரும்பப் பெறவும் செய்து இருக்கிறார் ராசா.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து விசாரணை செய்த பின்னர், அதில் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று தன்னுடைய முதனிலை விசாரணை அறிக்கையில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் மத்திய கண்காணிப்பு ஆணையர் பதிவு செய்த போதே ராசா தனது பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முக்கிய முடிவுகளில் ராசாவின் ஒப்புதல் மற்றும் கையொப்பம் இருப்பதையும், இதன் விளைவாக சட்ட விரோதமான செயல்களின் மூலம் ஒன்பது நிறுவனங்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்று இருப்பதையும் இந்திய கணக்கு மற்றும் தணிக்கைத் தலைவர் சுட்டிக்காட்டிய போதாவது தனது பதவியை ராசா ராஜினாமா செய்து இருக்க வேண்டும். ஆனால், ராசா ராஜினாமா செய்யவில்லை.

தற்போது இந்தப் பிரச்சினை கடைசியாக தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது.

இந்திய நாட்டிற்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா உடந்தையாக இருந்ததற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், மத்திய கண்காணிப்பு ஆணையர் முதல் உச்ச நீதிமன்றம் வரை அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரம் கொண்ட ஒவ்வொரு அமைப்பும் குற்றஞ்சாட்டியும், ராசாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து திரும்பப் பெற கருணாநிதிக்கு மனம் வரவில்லை.

இந்திய நாடு, தமிழ் நாடு, தமிழக மக்கள், இந்திய அரசியலமைப்புச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட அமைப்புகள் ஆகியவை பற்றி எல்லாம் கருணாநிதிக்கு துளியும் கவலையில்லை! இவற்றையெல்லாம் கருணாநிதி ஒரு பொருட்டாகவே கருதவில்லை!

இது இந்திய தேசத்திற்கு மிகப் பெரிய அவமானமே தவிர வேறு ஒன்றுமில்லை என்று அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X