For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செங்கோட்டையில் திமுக நிர்வாகிகள் ரகசியக் கூட்டம்: தேர்தல் குறித்து ஆலோசனை

Google Oneindia Tamil News

செங்கோட்டை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு தென்காசி மற்றும் கடையநல்லூர் சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட திமுக நிர்வாகிகளின் ரகசிய ஆய்வு கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.

திமுக தலைமை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் பொறுப்பாளர்கள் வரும் சட்டசபை தேர்தலில் திமுக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்தும் கருத்து கேட்டு வருகின்றனர்.

தென்காசி மற்றும் கடையநல்லூர் ஆகிய இரண்டு சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட திமுக நிர்வாகிகளின் ரகசிய ஆய்வு கூட்டம் செங்கோட்டை குண்டாறு நீர்தேக்கம் பிடபிள்யூ பங்களா வளாகத்தில் நடந்தது.

நெல்லை மாவட்ட திமுக தேர்தல் பொறுப்பாளரும், திண்டுக்கல் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளருமான செந்தில்குமார் முன்னிலையில் ரகசிய ஆய்வு கூட்டம் நடந்தது.

முதலில் தென்காசி தொகுதிக்கான ஆய்வு கூட்டத்தில் தலைமை கழகத்தால் கொண்டுவரப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற திமுக நிர்வாகிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி தொகுதிக்குட்பட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், பேரூர் திமுக செயலாளரும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் திமுக அரசின் சாதனைகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்வது குறித்தும், வரும் சட்டசபை தேர்தலில் திமுகவினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நிர்வாகிகள் பலர் தங்கள் பகுதிகளில் தமிழக அரசின் இலவச கலர் டிவி, காஸ் அடுப்பு போன்றவை சீராக வழங்கப்படவில்லை எனவும், அதனை உடனடியாக வழங்கிட மாவட்ட நிர்வாகத்திற்கு கட்சித் தலைமை மூலம் அறிவுறுத்த வேண்டுமென்றும் தெரிவித்துள்ளனர்.

கடையநல்லூர் கூட்டத்திலும் திமுகவினர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் சட்டசபை தொகுதியில் 10 பேர் கொண்ட பூத் கமிட்டியும், 5 பஞ்சாயத்துகள் உள்ளடங்கிய 10 பேர் கொண்ட கமிட்டியும் அமைத்திட தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக நகர நிர்வாகிகள் கடையநல்லூர் நகரப் பகுதிகளில் தமிழக அரசு கலர் டிவி இதுவரை வழங்கப்படவில்லை எனவும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை உடனடியாக வழங்கிடுவதுடன் தொகுதி முழுவதும் விடுபட்ட அனைவருக்கும் இலவச டிவி வழங்கிடவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடையநல்லூர் மற்றும் தென்காசி சட்டசபை தொகுதிகளுக்காக நடந்த ரகசிய ஆய்வு கூட்டத்தில் பல்வேறு புகாரினையும் திமுக நிர்வாகிகள் காரசாரமாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

காவல் நிலையங்களில் திமுகவினர் அவமதிக்கப்படுகின்றனர். மேலும் கடையநல்லூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திமுக தலைவருடன் நெருக்கமாக உள்ளதால் அவரை நாங்கள் பகைக்காமல் உள்ளோம். தொகுதியில் உள்ள திமுகவினரை அவர் கண்டு கொள்வதே இல்லை. வரும் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். அப்போது தனிப்பிரிவு போலீஸ் ஒருவர் அங்கு சென்றுள்ளார். உடனே செங்கோட்டை நகர்மன்ற பிரமுகர் தனிப்பிரிவு போலீஸ் குறித்து கண்டனம் தெரிவித்து புகார் பட்டியலையும் வாசித்துள்ளார்.

திமுக தலைமையின் இக்குழுவில் 2 தொகுதிகளுக்கு 10 பேர் கொண்ட கமிட்டியும், அவர்களுக்கு கீழ் தனித்தனி கமிட்டியும், 100 ஓட்டை கவனிக்க 3 பேர் என்றும், இப்போதே பூத் கமிட்டி அமைக்க தயாராக வேண்டும் என்றும், 'பசை'யை பற்றி கவலை இல்லை என்றும் தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.

இதனை அப்படியே இக்குழு தெரிவித்ததால் ஒன்றிய, நகர, கிளை கழக செயலாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X