For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும்

Google Oneindia Tamil News

Satellitte Image
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வுப் பகுதியாக வலுப் பெற்று புயலாக மாறக் கூடிய அபாயம் எழுந்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பலத்த தரைக்காற்றுடன் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடலூர், தஞ்சை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டாப் பகுதிகளிலும், மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்துள்ளது. அதேசமயம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்னும் மழை சூடு பிடிக்கவே இல்லை. அவ்வப்போது இங்கு கன மழை பெய்து வருகிறது.

இந்த ஆண்டு வட கிழக்குப் பருவ மழையால் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்கள்தான் அதிக பலனையும், பெருமளவிலான சேதத்தையும் சந்தித்துள்ளன. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. லட்சக்கணக்கான பயிர் நிலங்கள் நீரில் மூழ்கி விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும், பலத்த காற்றும் வீசும் என வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, இலங்கைக்கு தெற்கே, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறியுள்ளது. இது வலுவடையவும் வாய்ப்பு உள்ளது. புயலாக மாற வாய்ப்பு இல்லை. தொடர்ந்து இந்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது.

தொடர்ந்து அது வலுவடைந்து வருவதால், கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் கன மழையும், உள் மாவட்டங்களில் ஆங்காங்கே பலத்த மழையும் எதிர்பார்க்கப்படுகிறது. தரைக்காற்று பலமாக வீசவும் வாய்ப்பு இருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது தரைக்காற்று சற்று பலமாக இருக்கும். கன மழைக்கும் வாய்ப்பு உண்டு.

அடுத்த 48 மணி நேரத்தில் வட தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும், உட்புறப் பகுதிகளின் சில பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்றார்.

சென்னையில்:

சென்னையில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் காற்றுடன் மழை பெய்து வருகிறது சில இடங்களில் லேசான மழையும், சில இடங்களில் மிதமான மழையுமாக உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் மக்களின் சகஜ வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது.

3 லட்சம் ஏக்கர் நிலங்கள் தண்ணீரில்:

3 மாவட்டங்களிலும் சம்பா, தாளடி நெற்பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. தொடர் மழையால் அந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. நெல் பயிர்களை வெள்ளம் மூழ்கடித்து விட்டது. 3 மாவட்டங்களிலும் 3 லட்சம் ஏக்கரில் நெல் பயிர் மூழ்கி விட்டதாக கணக்கிடப்பட்டு உள்ளது. வயல்களில் தண்ணீர் வடிந்தாலும், தற்போதைய நெல் பயிர்கள் பிழைக்குமா? என்பதை உறுதி படுத்த முடியாது என்று விவசாயிகள் பெரிதும் கவலையோடு இருக்கிறார்கள்.

நாகை மாவட்டத்தில் இது வரை மழைக்கு 7 பேர் பலியாகி இருக்கிறார்கள். 345 கால்நடைகள் இறந்து உள்ளன. தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 14 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் இது வரை 130 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. இன்னும் மழை நீடிப்பதால், இந்த அளவு உயர வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு இந்த மாவட்டத்தில் 100.2 செ.மீ. மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காட்டு மன்னார் கோவில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கிராம மக்கள், பாதுகாப்பு முகாம்களில் தங்கி இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், கடலூர், காட்டு மன்னார் கோவில் தாலுகாக்களில் 200 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு இருக்கிறது. இதனால் ஒரு லட்சம் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதத்தை, அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி ஆகியோர் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினர்.

குமரி மாவட்டத்தில் நல்ல மழை பெய்து இருக்கிறது. இடைவிடா மழை காரணமாக ரப்பர், மீன்பிடி தொழில், செங்கல் சூளை தொழில், உப்பளங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.

வத்தலக்குண்டு செல்லும் பஸ்கள், 70 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றன. மண்சரிவை சரி செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

புதுச்சேரியில் நேற்று 5.7 செ.மீ. மழை பெய்தது. இதனால் உருளையன் பேட்டை, திருவள்ளுவர் நகர், ஜெ.ஜெ.நகர், வானரப்பேட்டை, ரெயின்போ நகர், ரெட்டியார் பாளையம் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதுவரை 163 பேர் பலி:

மழை காரணமாக இதுவரை தமிழகத்தில் 163 பேர் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் குடிசைகள், வீடுகள் இடிந்து உயிரிழப்பும் அதிகரித்துள்ளது. நேற்று மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 163 ஆக உயர்ந்தது. ஆண்கள் 76 பேரும், பெண்கள் 47 பேரும், குழந்தைகள் 40 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 26 பேர் இறந்திருக்கிறார்கள். கடலூர் மாவட்டத்தில் 20 பேரும், திருவாரூர் மாவட்டத்தில் 20 பேரும் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 468 கால்நடைகள் இறந்தன. இது வரை மொத்தம் 1233 கால்நடைகள் மழைக்கு பலியாகிவிட்டன.

தமிழகம் முழுவதும் 23 ஆயிரத்து 812 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில், 20 ஆயிரத்து 16 வீடுகள் பகுதியாகவும், 3 ஆயிரத்து 796 வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்து இருக்கின்றன. கடலூர் மாவட்டத்தில் 9819 வீடுகள், தஞ்சை மாவட்டத்தில் 3244 வீடுகள், திருவாரூர் மாவட்டத்தில் 2146 வீடுகள், அரியலூர் மாவட்டத்தில் 1521 வீடுகள், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1512 வீடுகள் சேதமடைந்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை:

கன மழை தொடர்வதால் தஞ்சாவூர், திருவாரூர், நாமக்கல், விழுப்புரம், நாகை, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கும், புதுவையில் காரைக்கால் மாவட்டத்திற்கும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X