For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கல்மாடி மீது செருப்பு வீச்சு-8 நாள் சிபிஐ காவல்!

By Chakra
Google Oneindia Tamil News

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் நடந்த பெரும் ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள காமன்வெல்த் போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் தலைவர் சுரேஷ் கல்மாடியை இன்று நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தபோது, அவர் மீது ஒருவர் செருப்பை வீசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இன்று காலை, டெல்லி நீதிமன்றத்தில் கல்மாடியை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தியபோது, இச்சம்பவம் நடைபெற்றது. செருப்பு வீசிய நபரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த வழக்கறிஞரான கபில் தாகூர் என்று தெரியவந்தது.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கல்மாடியை 15 நாட்கள் தங்களது காவலில் வைத்து விசாரிக்க சிபிஐ அனுமதி கோரியது.

ஜாமீன் மறுப்பு:

இதையடுத்து கல்மாடி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நடந்தபோது, கல்மாடியின் வக்கீல், அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த எம்.எஸ்.கில் மீது குற்றம் சாட்டிப் பேசினார்.

அவர் கூறுகையில், காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்து டெண்டர்களையும் கில்தான் முடிவு செய்தார். எனவே இதில் கல்மாடிக்கு நேரடியாக எந்தத் தொடர்பும் இல்லை என்று வாதாடினார்.

பின்னர் கல்மாடியை ஜாமீனில் விடுவிக்க சிபிஐ வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதைப் பதிவு செய்து கொண்ட கோர்ட், கல்மாடிக்கு ஜாமீன் வழங்க மறுத்து அவரை 8 நாள் சிபிஐ காவலில் அனுமதித்து உத்தரவிட்டது.

கல்மாடி காங்கிரசிலிருந்து நீக்கம்:

இந் நிலையில் கல்மாடி காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் அவர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லியில் நடைபெற்றது. லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் ஜோதி தொடக்க விழாவில் ஆரம்பித்து விளையாட்டுப் போட்டிக்கான கருவிகள் வாங்கியது, ஒளிபரப்பு உரிமம், விளையாட்டுப் போட்டி மைதானங்களைத் தயார் செய்தது ஆகியவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

காமன்வெல்த் போட்டிக்கு சுவிட்சர்லாந்தில் இருந்து “டைமர்" கருவிகளை வாங்கியதிலும் சுரேஷ் கல்மாடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் கருவிகளை வாங்க முதலில் டெண்டர் கோரப்பட்டது. அப்போது பல்வேறு நிறுவனங்கள் கருவிகளை தர முன்வந்தன. அதில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.எல் நிறுவனம் ரூ. 48 கோடிக்கு கருவிகளை தர சம்மதித்து இருந்தது.

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சுவிஸ் டைமிங் லிமிடெட் என்ற நிறுவனம் ரூ. 107 கோடிக்கு தருவதாக கூறியது. ரூ. 48 கோடிக்கு தர முன் வந்த எம்.எஸ்.எல். நிறுவனத்தை புறக்கணித்துவிட்டு சுவிஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 107 கோடிக்கு கருவிகளை வாங்கி உள்ளார்.

இதற்காக எம்.எஸ்.எல். நிறுவனத்தை வேண்டும் என்றே தகுதி நீக்கம் செய்துள்ளனர். சுவிஸ் நிறுவனத்திடம் இருந்து கருவிகளை வாங்க வேண்டும் என்பதற்காகவே கடைசி நேரத்தில் சில புதிய விதிமுறைகளையும் கொண்டு வந்துள்ளனர்.

இது போன்ற பல ஊழல்கள் நடந்தன. அவை குறித்து குறித்து சி.பி.ஐ. பல மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கல்மாடியிடம் சிபிஐ அதிகாரிகள் 3 முறை விசாரணை நடத்தியுள்ளனர். அவரது வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. கடந்த 20ம் தேதி மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டமிட்டிருந்தது. ஆனால், மருத்துவக் காரணங்களைக் காட்டி சுரேஷ் கல்மாடி விசாரணைக்கு வராமல் தவிர்த்தார்.

இந் நிலையில் நேற்று காலை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு காலை 10 மணிக்கு வந்த சுரேஷ் கல்மாடியிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

லண்டனில் சிக்கிய ஆதாரம்:

முன்னதாக கடந்த வாரம் லண்டன் சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கு விசாரணை நடத்தியபோது கல்மாடிக்கு எதிராக முக்கிய ஆவணங்கள் சிக்கின. அதன் அடிப்படையிலேயே இப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸிலிருந்து நீக்கம்:

கல்மாடி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு, மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனி தலைமையில் கூடி ஆலோசனை நடத்தியது.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த காங்கிரஸ் பொதுச் செயலர் ஜனார்த்தன் துவிவேதி, கட்சிப் பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் சுரேஷ் கல்மாடி இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

ஏற்கனவே அவர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி செயலாளர் பொறுப்பிலிருந்து முன்பே நீக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

இந் நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்தும் அவரை நீக்க மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அஜய் மக்கான் பரிந்துரைத்துள்ளார்.

காமன்வெல்த் முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ 6 வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

English summary
Faced with the extreme embarrassment of the arrest of, MP from Pune, Kalmadi in the CWG scam, the Congress cracked the whip and suspend him from primary membership of the party. According to party sources, the Congress chose to take the stern measure of suspending him from the membership, in a desperate bid to wriggle out of a tight spot it has been pushed into by the actions of Kalmadi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X