For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.ஆர்.பாலுவின் கேம்ப் அலுவலகத்தை காலி செய்யுமாறு தொந்தரவு செய்யமாட்டோம்: அரசு

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை தி. நகரில் உள்ள எம்.பி. டி. ஆர். பாலுவின் கேம்ப் அலுவலகத்தை காலி செய்யுமாறு அவரை தொந்தரவு செய்யப்போவதில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீபெரும்புதூர் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

கடந்த 1996-ம் ஆண்டு நான் தென்சென்னை எம்.பி. ஆனேன். இதையடுத்து தியாகராய நகரில் எம்.பி.யின் கேம்ப் அலுவலகத்தை அமைக்க விரும்பி சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு கேட்டேன். அதன்படி தியாகராயர் சாலையில் உள்ள மாநகராட்சிக்குரிய கட்டிடம் எனக்கு 1997-ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த கட்டிடம் இன்று வரை எனது பயன்பாட்டில் தான் இருக்கிறது.

கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் நான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எம்.பி. ஆகத் தேர்வானேன். இந்த தொகுதியின் கீழ் பல்லாவரம், ஆலந்தூர், தாம்பரம் உள்ளிட்ட நகரங்கள் வருகின்றன. அதனால் தியாகராயர்நகர் அலுவலகத்தை தொடர்ந்து பயன்படுத்த சென்னை மாநகராட்சியிடம் அனுமதி கேட்டேன்.

மாநகராட்சியும் அனுமதி அளித்தது. ஆனால் வாடகைப் பற்றி கவுன்சில் கூட்டத்தில் தான் முடிவு செய்யப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து அந்த அலுவலகத்தை இன்னும் 15 நாட்களுக்குள் காலி செய்யுமாறு மாநகராட்சியின் 8-வது மண்டல அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த மே மாதமே தயார் செய்த நோட்டீசை ஜூன் மாதம் 7-ம் தேதி தான் தபால் மூலம் அனுப்பியுள்ளனர். அது எனக்கு ஜூன் 8-ம் தேதி கிடைத்தது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதால் இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும்.

எனவே, அந்த அலுவகத்தை நான் தொடர்ந்து பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும். அந்த கட்டிடத்திற்கான வாடகையை நிர்ணயிக்க சென்னை மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கும்படி சென்னை மாநகராட்சி கமிஷனர், கவுன்சில் செயலாளர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டடுள்ளது.

இந்த மனு நீதிபதி ஆர்.சுதாகர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான டி.ஆர்.பாலுவின் வக்கீல் ஏ.சுப்பிரமணி கூறுகையில், கடந்த மே மாதம் 31-ம் தேதி மாநகராட்சி அலுவலர்கள் 3 பேர் கேம்ப் அலுவலகத்திற்குள் திடீர் என்று நுழைந்து, உடனே காலி செய்யுமாறு மிரட்டியுள்ளனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அரசியல் உள்நோக்குடன் மனுதாரரை துன்புறுத்துகின்றனர் என்றார்.

அதற்கு அரசுத் தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன், அலுவலகத்தை காலி செய்யுமாறு மனுதாரரை இனி தொந்தரவு செய்யமாட்டோம் என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த விவகாரத்தில் தற்போதைய நிலை தான் நீடிக்க வேண்டும். அந்த கேம்ப் அலுவலகத்தின் முகவரி உள்ளிட்ட விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

English summary
TN government has assured that it won't pester TR Balu MP to vacate his camp office in T. Nagar, Chennai. The government's assurance has come after TR Balu filed a petition in the Chennai high court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X