• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

டேம் 999 படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்! - 'தட்ஸ்தமிழு'க்கு வைகோ சிறப்புப் பேட்டி

By Shankar
Google Oneindia Tamil News
Vaiko
சென்னை: டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தாங்கி வருகிறது டேம் 999 என்ற ஆங்கிலப் படம். இதனை தமிழில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்த விவரங்கள் வெளியானதால் தமிழக தலைவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். கட்சி மற்றும் கொள்கைகளுக்கு அப்பால் தமிழர் நலன் என்ற விஷயம் அவர்களை ஒருங்கிணைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழர் உரிமைக்கு ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் முக்கியத் தலைவர் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

இந்தப் படம் குறித்த முழு விவரங்களையும் திரட்டிய பிறகு, அப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே திரையிடக்கூடாது என்ற உறுதியுடன் போராட்டத்தில் குதித்துள்ளார் வைகோ.

இதுகுறித்து 'தட்ஸ்தமிழ்' நிருபர் எஸ் ஷங்கருக்கு அவர் இன்று அளித்த சிறப்புப் பேட்டி:

டேம் 999 என்பது முழுக்க முழுக்க கேரள அரசின் விஷமத்தனம். இந்த விஷமத்தனத்தை இன்று நேற்றல்ல, பல காலமாக அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது சினிமா என்ற ஊடகத்தின் மூலம் இன்னும் வலுவாகச் செய்கிறார்கள்.

தமிழகத்தின் 5 பெரிய மாவட்டங்களின் வாழ்வாதாரமே இந்த முல்லைப் பெரியாறுதான். முழுக்க முழுக்க தமிழனுக்கு உரிமையான அணை அது.

இந்த அணையை உருவாக்கியதும் காப்பாற்றி வருவதும் தமிழன்தான். இந்த அணை உள்ள மண் கூட தமிழனுக்கு சொந்தமானதே. அன்றைய நிர்வாக தவறுகளால் அதனை கேரளத்தினர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இந்த அணை உடைந்து விடும் என்று கிராபிக்ஸ் மூலம் பொய்யாய் காட்சிகளை உருவாக்கி, மக்களை பயமுறுத்தும் பூச்சாண்டி வேலைதான் இந்தப் படம்.

ஏற்கெனவே அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போதே, முல்லைப் பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸில் படம் தயாரித்து 5 லட்சம் டிவிடிக்களை புழக்கத்தில் விட்டு மக்களை பயமுறுத்தப் பார்த்தனர். இப்போது அதை பெரிய திரையில் செய்யப் பார்க்கிறார்கள்.

இப்போது கேரள அரசும், ஜக்கிய அரபு அமீரகமும் இணைந்து பணம் போட்டு "டேம் 999' படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தை இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் மட்டும் வார்னர் பிரதர்ஸ் திரைப்பட நிறுவனம் வெளியிட உள்ளது. இதிலிருந்தே அரசின் சதிச்செயல் இதில் இடம் பெற்றுள்ளது தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல் காண்பிப்பது அக்கிரமமானது.

100 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கினார்கள். இந்த அணை இன்றல்ல... இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம்.

படத்துக்கு வெளியிடவிடாமல் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

மதிமுக இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் படம் வெளியாகவே கூடாது. அதற்கான போராட்டத்தில் மதிமுக இறங்குகிறது. இப்போது அமைதி வழியில் போராடுகிறோம். மீறி படத்தை வெளியிட முனைந்தால் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசையும் இதுகுறித்து வலியுறுத்தி இந்தியாவில் அந்தப் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் டேம் 999 படத்தைத் தடுக்க வேண்டும். இப்படியொரு படத்தை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாது.

உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழகத்தை சார்ந்துதான் கேரளா உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்தப் படம் வெளியாகி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் முதல் பாதிப்பு கேரளாவுக்குதான். அத்யாவசிய பொருள் சப்ளையே அவர்களுக்கு பாதித்துவிடும் என்று எச்சரிக்கிறேன்.

கேரள அரசே, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான சக்திகளே, நெருப்போடு விளையாடுகிறீர்கள், அதன் பாதிப்பு உங்களுக்குத்தான் என்பதை மறந்து!" என்றார்.

English summary
MDMK supremo Vaiko blasted the makers of Dam 999, a film against Mullai Periyar Dam. In his exclusive interview to Thatstamil.com, the leader who is the front runner in saving Mullai Periyar Dam says that his party will take all the possible efforts to save the dam and prevent the release of the 'poisonous movie'.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X