For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்- முஸ்லீம் இடஒதுக்கீட்டுக்கு பாஜக கடும் எதிர்ப்பு

By Chakra
Google Oneindia Tamil News

Lalu Prasad Yadav
டெல்லி: லோக்பால் மசோதாவில் சில திருத்தங்கள் செய்து புதிய லோக்பால் மசோதாவை உருவாக்கியுள்ள மத்திய அரசு அதை இன்று மக்களவையில் தாக்கல் செய்தது.

அதில், லோக்பால் சட்ட பெஞ்ச்களில் 50 சதவீத இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் என்றும், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்களுக்கு இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

முன்னதாக லோக்பால் சட்ட பெஞ்ச்களில் 50 சதவீத இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும் என்றும். அதே நேரத்தில் இதில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு இருக்காது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ், லோக் ஜன்சக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை ஒத்தி வைக்கப்பட்டது.

லோக்பாலில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்த பிறகே லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து லாலுவும் சரத் யாதவும் வலியுறுத்தினார்.

அதே போல லோக்பாலில் எல்லா சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜாவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந் நிலையில் இந்த புதிய மசோதாவும் ஏற்கத்தக்கத்ததாக இல்லை என்று அன்னா ஹசாரே அறிவித்தார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்தியக் குழு கூடி இது குறித்து விவாதித்தது.

இதையடுத்து இன்று பிற்பகலில் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் நாராயணசாமி இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். அதில், லோக்பால் பெஞ்ச்களில் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

70 பக்கங்கள் கொண்ட புதிய மசோதாவில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

லோக்பால் அமைப்புக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கப்படும். 9 பேர் கொண்ட ஒரு தனி தலைமை அமைப்பு, அரசு அதிகாரிகளின் ஊழல்-லஞ்சம் குறித்து பொது மக்களிடமிருந்து மனுக்களைப் பெறும். இந்த அமைப்பு பரிந்துரை செய்தால் தான் இந்தப் புகார் குறித்து லோக்பால் அமைப்பால் விசாரிக்க முடியும். தானாக எந்த அதிகாரி மீதும் லோக்பால் அமைப்பால் விசாரணை நடத்த முடியாது. (இதை ஹசாரே எதிர்க்கிறார், லோக்பால் அமைப்பு நினைத்தால் யாரையும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்கிறார், மேலும் அரசியல் சாசன அந்தஸ்தும் கூடாது என்கிறார்).

மாநிலங்களில் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் உருவாக்கப்படும்.

லோக்பால் அமைப்பு நாடாளுமன்றத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும்.

லோக்பால் அமைப்பு சிபிஐ அமைப்பை கட்டுப்படுத்த முடியாது, அதன் கட்டுப்பாடு தொடர்ந்து மத்திய அரசிடமே இருக்கும். (இதை ஹசாரே எதிர்க்கிறார், லோக்பால் அமைப்பின் கீழ் சிபிஐ வர வேண்டும் என்கிறார்)

சி.பி.ஐயின் புதிய இயக்குனரை பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்லது உச்ச நீதிமன்ற நீதிபதி ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்யும். (இதை ஹசாரே ஏற்கவில்லை. தலைமை நீதிபதிக்குப் பதிலாக லோக்பால் நீதிபதி தான் சிபிஐ இயக்குனர் தேர்வுக் குழுவில் இடம் பெற வேண்டும் என்கிறார்).

அதிகாரிகளை விசாரிக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை.

லோக்பால் பரிந்துரைக்கும் வழக்குகளின் விவரத்தை மட்டுமே சிபிஐ, லோக்பாலிடம் வழங்கும்.

லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டு வரப்படுவார். ஆனால், முழுமையாக அல்ல. சர்வதேச உறவு, பொது ஒழுங்கு, அணு சக்தி, விண்வெளி, உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய விவகாரங்களில் பிரதமர் எடுத்த முடிவுகள் பற்றி லோக்பால் விசாரிக்க முடியாது. மற்ற விவகாரங்களில் மட்டுமே பிரதமரை லோக்பால் கேள்வி கேட்க முடியும்.

அதே போல எடுத்த எடுப்பில் பிரதமருக்கு எதிரான விசாரணையை லோக்பால் நடத்த முடியாது. இது குறித்து லோக்பால் சட்ட பெஞ்ச் முதலில் கூடி விவாதித்து முடிவெடுக்கும். இந்த பெஞ்சின் மொத்த உறுப்பினர்களில் நான்கில் 3 பங்கு பேர் ஒப்புதல் தந்தால் மட்டுமே பிரதமரை விசாரிக்க முடியும். விசாரணை பகிரங்கமாக நடைபெறாது. ஒருவேளை புகார் தள்ளுபடி செய்யப்பட்டால், அதனை பகிரங்கப்படுத்தக் கூடாது.

லோக்பால் சட்ட பெஞ்ச்களில் 50 சதவீத இடங்கள் இடஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பெண்களுக்கு இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.

- லோக்பால் அமைப்பின் பதவிகாலம் 5 ஆண்டுகளாக இருக்கும்.

- லோக்பால் அமைப்பில் உள்ள உறுப்பினர்களை, பிரதமர், எதிர்க்கட்சி தலைவர், மக்களவை சபாநாயகர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அரசு பரிந்துரைந்த சட்ட நிபுணர் ஆகியோரைக் கொண்ட குழு, தேர்வு செய்யும்.

- லோக்பால் தலைவர் மற்றும் உறுப்பினர்களை பதவி நீக்கும் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில்தான் கொண்டு வர முடியும். அதற்கு குறைந்தபட்சம் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு தர வேண்டும்.

- ஊழல் புகார் மீதான முதல்கட்ட விசாரணையை நடத்த இயக்குனர் (விசாரணை) நியமிக்கப்படுவார். வழக்குகளைத் தொடர தனியாக ஒரு இயக்குனரும் இருப்பார்.

இவ்வாறு புதிய லோக்பால் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவில் உள்ள சிறுபான்மையினருக்கான ஒதுக்கீடு என்பதை ஏற்க முடியாது என்று பாஜக கூறியுள்ளது.

ஆனால், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் ஹசாரேவின் நெருக்கடிக்குப் பணிந்து அவசர அவசரமாக இந்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும் லாலு கூறியுள்ளார்.

அதே போல இந்த மசோதாவை ஆதரிக்கப் போவதில்லை என்று சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவும் கூறியுள்ளார்.

இதற்கிடையே, மத்திய அரசு எதைச் செய்தாலும் எதிர்க்கும் அன்னா ஹசாரே, இந்த மசோதாவையும் ஏற்க முடியாது என்று அறிவித்துவிட்டார். இதனால் அவரது போராட்டமும் தொடரப் போகிறது.

இந்த மசோதாவை நிறைவேற்ற 3ல் இரண்டு பங்கு எம்பிக்களின் ஆதரவு தேவை. இதனால் எதிர்க் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் இதை நிறைவேற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் லாலு, முலாயம், ஐக்கிய ஜனதா தளம், இடதுசாரிகளின் ஆதரவைப் பெறும் வகையில், லோக்பால் பெஞ்ச்களில் சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு என்று கடைசி நேரத்தில் மத்திய அரசு முடிவு செய்து, அதை மசோதாவில் சேர்த்துள்ளது.

ஆனால், இதை பாஜக கடுமையாக எதிர்ப்பதால் இந்த மசோதா நிறைவேறுவதற்கு முன் அடுத்த சில நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் கடும் விவாதம் நடக்கவுள்ளது.

English summary
The Congress-led United Progressive Alliance Government introduced the Lokpal Bill, 2011 in the Lok Sabha on Thursday amidst uproar. Minister of State, Parliamentary Affairs, V Narayanasamy introduced the Bill after withdrawing the previous draft.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X