For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2011ல் உலகம்

Google Oneindia Tamil News

Egypt
ஜனவரி

1 - நைஜீரியாவின் அபுஜா நகரில் நடந்த குண்டுவெடிப்பில் 30 பேர் கொல்லப்பட்டனர்.

3- ஆஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த உஸ்மான் காஜா என்ற இளம் வீர்ர் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்தார். இவர் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்தவர்.

- ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் ஒரு தியேட்டரின் மேற்கூரை புயலில் சிக்கி சேதமடைந்து இடிந்து விழுந்தது. அதில் சிக்கிக் கொண்ட 36 பேர் மீட்கப்பட்டனர்.

- அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து முன்னாள் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸனீகர் விலகினார்.

- சிலி கடல் பகுதியில் 7.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும் இதனால் சுனாமி அபாய எச்சரிக்கை விடப்படவில்லை.

10 - ஈரான் நாட்டில் 105 பயணிகளுடன் கிளம்பிய விமானம் மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதில் 77 பேர் கொல்லப்பட்டனர்.

25 - இஸ்ரோ மாற்றும் டிஆர்டிஓ ஆகியவற்றுக்கு விதித்திருந்த பொருளாதார தடையை அமெரிக்க அரசு விலக்கிக் கொண்டது.

பிப்ரவரி

1 - c தலைநகர் கெய்ரோவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் 10 லட்சம் பேர் திரண்டு முபாரக்குக்கு எதிராக மாபெரும் போராட்டத்தை நடத்தினர்.

5 - பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சல்மான் பட்டுக்கு,கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதற்காக ஐசிசி 10 ஆண்டு தடை விதித்தது. முகம்மது ஆசிபுக்கு 7 ஆண்டு மற்றும் முகம்மது ஆமிருக்கு 5 ஆண்டு தடையும் விதிக்கப்பட்டது.

7 - முன்னாள் பாகிஸ்தான் சர்வாதிகாரி முஷாரப், பெனாசிர் புட்டோ கொலை வழக்கில் சேர்க்கப்பட்டு அவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

11 - 18நாள் தொடர் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக் தனது குடும்பத்துடன் தப்பி ஓடினார். ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது.

14 - சென்னை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள கொலை வழக்கில் முன்ஜாமீன் வழங்கக் கோரி இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

17 - வங்கதேச தலைநகர் டாக்காவில் 10வது உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது.

18 -இலங்கை கடற்படையினரால் கடத்தப்பட்ட 136 தமிழக மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

20 - விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் மரணமடைந்தார்.

27 - பெங்களூரில் நடந்த, இந்தியா-இங்கிலாந்துக்கு இடையிலான உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி டையில் முடிந்தது. உலகக் கோப்பைப் போட்டிகளில் 5வது சதத்தை அடித்து சச்சின் புதிய சாதனை படைத்தார்.

மார்ச்

1 - லிபியாவில் மக்கள் போராட்டம் வலுத்தது. போராட்டக்காரர்கள் மீது லிபிய ராணுவம் குண்டுவீசித் தாக்கியது. இதைத் தடுக்க அமெரிக்க போர்க் கப்பல்கள், விமானங்கள் லிபியாவை நோக்கி விரைந்தன.

2 - பாகிஸ்தான் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ஒரே கிறிஸ்தவ அமைச்சரான ஷபாஸ் பட்டி சுட்டுக் கொல்லப்பட்டார்.

11 - ஜப்பானில் 8.9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கமும், தொடர்ந்து பயங்கர சுனாமியும் தாக்கின. இதில் லட்சக்கணக்கான வீடுகள், கார்கள், கட்டடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். புகுஷிமா அணு மின் நிலையம் பெரும் சேதத்தை சந்தித்தது.

12 - புகுஷிமாவில் மேலும் ஒரு அணு உலை வெடித்தது.

13 - ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ப்பலி 10 ஆயிரத்தைத் தாண்டியது.

16 - நேட்டோ படையினர் லிபியா மீது தாக்குதல் நடத்தினால் தான் அல் கொய்தா அமைப்பில் சேர்ந்து விடுவதாக மும்மர் கடாபி மிரட்டல் விடுத்தார்.

17 - ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக சோயப் அக்தர் அறிவித்தார்.

20 - லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நடத்திய தாக்குதலில் 64 பேர் கொல்லப்பட்டனர்.

21 - நேட்டோ படையினர் நடத்திய அதிரடித் தாக்குதலில் கடாபியின் மாளிகை தகர்க்கப்பட்டது.

ஏப்ரல்

3 - பாகிஸ்தானின் பஞ்சாபில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர்.

13 - 2010ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரராக சச்சின் டெண்டுல்கரை விஸ்டன் தேர்வு செய்தது.

14 - லிபியா மீது தரை வழிப் போர் நடத்த அமெரிக்கா மற்றும் கூட்டுப் படையினர் முடிவு செய்ததற்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

16 - கஜகஸ்தான் சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். இரு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது.

- இலங்கைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க்குற்றம் குறித்த புகார்களை சர்வதேச அமைப்புகள் மூலம் விசாரிக்க ஐ.நா. சபை அமைத்த நிபுணர் குழு பரிந்துரைத்தது.

21 - இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை எந்தவித திருத்தமும் இன்றி அப்படியே வெளியிடப்படும் என்று ஐ.நா. தெளிவுபடுத்தியது.

22 - இலங்கை வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்கா சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

26 - இலங்கையில் நட்நத உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் மட்டும் 5 மாதங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

27 - இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவி பிள்ளை கோரிக்கை விடுத்தார்.

- விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் கொடிய சித்திரவதைக்குப் பிறகு சீருடை அணிவித்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்று ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

29 - இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ் - கேட் மிடில்டன் ஆகியோர் திருமணம் லண்டனில் படு கோலாகலமாக நடந்தது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

31 - பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் ஷாஹித் அப்ரிதி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

மே

2 - உலகையே உலுக்கிய அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில், அபோதாபாத் என்ற இடத்தில் அமெரிக்க சீல் கடற்படையினரால் அதிரடியாக கொல்லப்பட்டார்.

11 - நிதி மோசடி வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழர் ராஜரத்தினம் குற்றவாளி என்று அமெரிக்க கோர்ட் அறிவித்தது.

15 - ஹோட்டலில் பணிப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சர்வதேச நிதியத்தின் தலைவர் ஸ்டிராஸ் கான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

ஜூன்

2 - பெல்ஜியத்தில் நடந்த ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினை குறித்த மாநாட்டில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

- இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா முதல்முறையாக பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.

4 - பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கப் படையினரின் தாக்குதலில் தீவிரவாத தலைவரான இலியாஸ் காஷ்மீரி கொல்லப்பட்டார்.

9 - பிரபல ஓவியர் எம்.எப். ஹூசேன் லண்டனில் மரணமடைந்தார். அவருக்கு வயது 95.

10 - மும்பை தீவிரவாததாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹவூர் ராணாவை விடுவித்து அமெரிக்க கோர்ட் தீர்ப்பளித்தது.

16 - இந்த நூற்றாண்டின் மிக நீளமான சந்திரகிரகணம் அதிகாலையில் ஏற்பட்டு ஐந்தரை மணி நேரம் நீடித்தது.

- இலங்கையின் போர்க்குற்றச் செயல்கள் குறித்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கோரிக்கை விடுத்தார்.

20 - ஈழத் தமிழர் படுகொலை தொடர்பாக அமெரிக்க கோர்ட் அனுப்பிய சம்மனைப் பெற முடியாது என நிராகரித்தார் ராஜபக்சே.

21 - மாஸ்கோவிலிருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 44 பேர் இறந்தார்கள்.

22 - ஐ.நா பொதுச் செயலாளராக பான் கி மூன் மீண்டும் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூலை

3 - தாய்லாந்து நாட்டின் முதல் பெண் பிரதமராக இன்லாக் ஷினவாத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

7 - ஈழத் தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி மரணமடைந்தார்.

8 - டொமினிக்காவில் நடந்த மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது தனது 400வது விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்பஜன் சிங். இந்தியாவிலேயே அதிக டெஸ்ட் விக்கெட்களை வீழ்த்திய 3வது வீரர் ஹர்பஜன் சிங்.

9 - சூடானை விட்டுப் பிரிந்து தெற்கு சூடான் இன்று தனி சுதந்திர நாடாக உதயமானது. உலகின் 193வது நாடாகும் இது.

11 - ரஷ்யாவில் ஓல்கா நதியில் படகு மூழ்கியதில் 30சிறார்கள் உள்பட 110 பேர் பலியானார்கள்.

12 - ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாயின் தம்பி வாலி கர்சாய் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆகஸ்ட்

1- இங்கிலாந்தில், தொடர்ந்து 12 மணிநேரம் வீடியோ கேம் விளையாடிய கிரிஷ் ஸ்டோனிபோர்த் என்ற வாலிபர் ரத்தம் உறைந்து மரணமடைந்தார்.

- சீனாவின் ஷின்ஜியாங் மாகாணத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாயினர்.

- லிபியாவில் இருந்து அகதிகளை ஏற்றி வந்த படகின் என்ஜின் அறையில் 25 பேர் இறந்து கிடந்ததை இத்தாலிய கடற்படையினர் கண்டுபிடித்தனர்.

2 - பாகிஸ்தானின் அபோடாபாத் நகரில் தாக்குதல் நடத்தும் முன், ஒசாமா பின் லேடனின் வீடு போன்ற ஒரு காம்பவுண்ட்டையே அமெரிக்காவில் காட்டுப் பகுதியில் உருவாக்கி அதில் அமெரிக்கப் படையினர் பல நாட்கள் தாக்குதல் பயிற்சி எடுத்த விவரம் வெளியானது.

3 - அமெரிக்காவில் மாபெரும் மருத்துவ காப்பீட்டு மோசடியில் ஈடுபட்டதாக பாபுபாய் படேல் உள்ளிட்ட 19 இந்தியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

6 - அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை சுட்டுக் கொன்ற அமெரிக்க கடற்படையின் டீம் 6 என்ற சீல் பிரிவினர் பயணித்த ஹெலிகாப்டரை தலிபான்கள் சுட்டு வீழ்த்தினர். இதில் 31 சீல் படையினர் கொல்லப்பட்டதால் அமெரிக்கா பெரும் அதிர்ச்சி அடைந்தது.

7 - இலங்கை வான் பகுதிக்குள் அதிரடியாக புகுந்த அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த 10 போர் விமானங்கள் சிறிது நேரம் பறந்த பின்னர் அங்கிருந்து சென்றதால் இலங்கை பீதிக்குள்ளானது.

- போலீசாரால் வாலிபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து லண்டனில் மாபெரும் கலவரம் வெடித்தது. கலவரக்காரர்களின் கையில் சிக்கி லண்டன் மாநகரமே உருக்குலைந்து போனது.

8 - சோனியா காந்திக்கு நியூயார்க்கில் உள்ள கேட்டரிங் புற்றுநோய் மையம் என்ற தனியார் மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை நடந்தது. அவருக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின.

9 - கடன் தர வரிசையில் அமெரிக்கா ஒன்றும் சறுக்கவில்லை. நாங்கள் இன்னும் AAA நிலையில்தான் இருக்கிறோம். இப்போதைய நெருக்கடியை தீர்க்கும் அரசியல் உறுதி எங்களுக்கு உள்ளது, என்று கூறினார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

- இங்கிலாதில் கலவரக்காரர்களால் தாக்கப்பட்டு ஆசிய சகேதரர்களான ஷாசாத், ஹாரி ஹுசைன். அவர்களது நண்பர் முசாவர் அலி ஆகியோர் பிர்மிங்ஹாமில் கொல்லப்பட்டனர்.

10 - நேட்டோ படைத் தாக்குதலில் லிபிய அதிபர் கடாபியின் 7வது மகன் காமிஸ் கொல்லப்பட்டதாக செய்திகள் வந்தன. ஆனால் அவர் இன்று டிவியில் தோன்றி தான் உயிருடன் இருப்பதை நிரூபித்தார்.

13 -விண்வெளியில் மேலும் ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ட்ரெஸ் 2 பி என்று இந்தக் கிரகத்துக்கு பெயர் சூட்டினர்.

14 - ஆப்கானிஸ்தானின் பர்வான் மாகாண ஆளுநர் மாளிக்கைக்குள் 6 தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர்.

19 - ஜப்பானின் வட கிழக்கில் 6.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

20 - ஜெர்மனியின் வெஸ்ட்பாலன்ஸ்டேடியான் என்ற நாட்டிலேயே மிகப் பெரிய கால்பந்து ஸ்டேடியத்தில் நடந்த கால்பந்துப் போட்டிக்கு முன்னதான அணிவகுப்பின்போது இலங்கையின் தேசியக் கொடிக்கு இணையாக தமிழ் ஈழத் தேசியக் கொடியும் கொண்டு செல்லப்பட்டு கெளரவம் தரப்பட்டது.

21 - கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் பின்லேடனின் குடும்பத்தை சீரழித்ததற்காக பாகிஸ்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று லேடனின் மனைவி அமால் அல் சதாவின் சகோதரர் சகாரியா அல் சதா கூறினார்.

- லிபியா நாட்டுத் தலைநகர் திரிபோலி புரட்சிப் படையினரிடம் வீழ்ந்தது. கடாபியின் அரண்மனையை முற்றுகையிட்டு அவரது இரண்டு மகன்களை கைது செய்தனர். இன்னொரு மகனும் உளவுப் பிரிவித் தலைவரும் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டனர்.

24 - அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனை கடும்நிலநடுக்கம் தாக்கியது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். நியூயார்க் வரை இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் காணப்பட்டதால் மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

25 - இங்கிலாந்து துணை பிரதமர் நிக் கிளெக்கை கிளாஸ்கோ பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நீல நிற பெயிண்ட் நிரப்பிய முட்டையைக் கொண்டு தாக்கினார். இதையடுத்து அந்த மாணவர் கைது செய்யப்பட்டார்.

- லிபிய அதிபர் மும்மர் கடாபியின் வீட்டுக்குள் புகுந்து நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது சிக்கிய ஆல்பம் அனைவரையும் அதிர வைத்தது. அந்த ஆல்பத்தில் அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் கான்டலீசா ரைஸ் புகைப்படங்களை தொகுத்து வைத்திருந்தார் கடாபி. மேலும் கான்டலீசா ரைஸ் மீது தான் காதல் கொண்டிருந்ததையும் அதன் மூலம் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

27 - பிரேசில் நாட்டின் அமேசான் ஆற்றின் கீழே 4 கி.மீ., ஆழத்தில் மற்றொரு ஆறு ஒடுவதை, விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

28 - சிங்கப்பூர் அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் தற்போதைய அதிபர் நாதன் மற்றும் ஆளுங்கட்சியின் ஆதரவு பெற்ற டோனி டேன் வெற்றி பெற்றார். இருப்பினும் வெறும் 7269 வாக்கு வித்தியாசத்தில்தான் இவர் வென்றார்.

30 - குடிபோதையில் கார் ஓட்டயதற்காக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தந்தையின் ஒன்றுவிட்ட சகோரர் அதாவது சித்தப்பா ஆன்யாங்கோ ஒபாமா கைது செய்யப்பட்டார்.

31 -நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இடையேயான மோதலில், துப்பாக்கி சூடு நடத்தியதில், 20 பேர் இறந்தனர்.

செப்டம்பர்

13 - பிரேசிலில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், அங்கோலா அழகி லைலா
லோபஸ் முடி சூட்டப்பட்டார்.

25 - நேபாளத்தில் நடந்த விமான விபத்தில் திருச்சியைச் சேர்ந்த என்ஜீனியர்கள் 8 பேர் உள்பட 19 பேர் கொல்லப்பட்டனர். எவரெஸ்ட் சுற்றுப்பயணமாக சென்றபோது மலைச் சிகரத்தில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

அக்டோபர்

4 - குவைத்தில் நடந்த எண்ணெய் நிறுவன தீவிபத்தில் 4 தமிழர்கள் உயிரிழந்தனர்.

6 - ஆப்பிள் நிறுவன அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் புற்றுநோய்க்குப் பலியானார்.

7 - டெல்லி உயர்நீதிமன்ற வளாக வெடிகுண்டுச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியான வங்கதேச யுனானி மருத்துவ மாணவர் வாசிம் அக்ரம் வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

8 - இலங்கையில் ஆளுங்கட்சியினருக்குள் ஏற்பட்ட மோதலில் ராஜபக்சேவின் ஆலோசகர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர்.

20 - லிபியாவை கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டிப்படைத்து வந்த அதிபர் மும்முர் கடாபியின் கதை முடிவுக்கு வந்தது. லிபியப் புரட்சிப் படையினரிடம் சிக்கிய அவர் கொடூரமாக கொல்லப்பட்டார். சொந்த ஊரான ஷிர்டேவில், சாக்கடைக் குழாய்க்குள் பதுங்கியிருந்த அவரை தெருவில் இழுத்து வந்து அடித்தும், துப்பாக்கியால் இடித்தும், பின்னர் கொடூரமாக சுட்டும் கொன்றனர் புரட்சிப் படையினர்.

22 - காத்மாண்டு அருகே நடந்த மரப்பாலம் அறுந்து விழுந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த மாணவி பிளாரன்ஸ் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

31 - உலக மக்கள் தொகை 700 கோடியாக உயர்ந்தது.

நவம்பர்

10 - சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்ட தாவூத் இப்ராகிம் மரணத்துடன் போராடி வருவதாக தகவல்கள் வெளியாகின.

- மும்பையில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி கசாப்பை தூக்கிலிட வேண்டும் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் தெரிவித்தார்.

17 - முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்திய நியூயார்க் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

18 - இந்தோனேசியாவில் நடந்த ஆசியான் மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன பிரதர் வென் ஜியாபோ ஆகியோரை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசினார்.

டிசம்பர்

1 - பெண்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால் சவூதி அரேபியாவில் கன்னித்தன்மையுள்ள பெண்களைப் பார்க்க முடியாது என்று அந்நாட்டு மத சபை எச்சரிக்கை விடுத்தது.

- அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் பாகிஸ்தான் ராணுவ நிலைகளைத் தாக்கினால், பதிலடி கொடுக்க மேலிடத்து உத்தரவுக்காக காத்திருக்கத் தேவையில்லை என்று பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அஸ்பாக் பர்வேஸ் கயானி அதிரடி உத்தரவிட்டார்.

- விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தை சமாதான நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டவே விடுதலைப்புலிகள் முயற்சி செய்கின்றனர் என்று இலங்கை அமைச்சர் மிலிந்தா மொரகொடா தெரிவித்ததாக கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் அப்போதைய அமெரிக்க தூதர் அஸ்லிவில்ஸ் அனுப்பிய கேபிள் தகவலை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.

4 - அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தைக் கைப்பற்றியதாக ஈரான் ராணுவம் அறிவித்தது.

- பாகிஸ்தானின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஷம்சி விமான தளத்தை அமெரிக்கப் படையினர் காலி செய்யத் தொடங்கினர்.

- 84 வயதான ஒரு பாட்டியை அவர் அணிந்திருந்த பாண்டீஸ் உள்ளிட்ட உடைகளை கழற்றி அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் சோதனையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

- ரஷ்ய நாடாளுமன்றத்தில் பிரதமர் விலாடிமிர் புதினின் கட்சிக்குப் பெரும் சரிவு ஏற்பட்டது.

5 - எல்லை தாண்டிய இந்திய குரங்கு ஒன்றை பாகிஸ்தான் சிறைபிடித்து அங்குள்ள மிருகக்காட்சி சாலையில் அடைத்தது.

6 - ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் மற்றும் மஸார் இ ஷெரீப் ஆகிய இரு நகரங்களில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.

- ரஷ்யாவில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் விளாடிமீர் புடினின் ஐக்கிய ரஷ்ய கட்சிக்கு பெரும் சரிவுடன் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

16 - ரஷ்யா சென்றார் பிரதமர் மன்மோகன் சிங். அங்கு ரஷ்ய அதிபர் மெத்வதேவை சந்தித்துப் பேசினர். அப்போது கூடங்குளம் அணு மின் நிலையம் மூடப்பட மாட்டாது. திட்டமிட்டபடி சில வாரங்களில் கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்கத் தொடங்கும் என்றும் அவர் அறிவித்தார்.

18 - பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட பயங்கர புயல் வெள்ளத்தில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

- ரஷ்ய நாட்டின் வடமேற்குப் பகுதியில் எண்ணெய் கிணறு ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 53 பேர் உயிரிழந்தனர்.

19 - வட கொரிய தலைவர் கிம் ஜாங் இல் மரணமடைந்தார்.

23 - மியான்மர் ஜனநாயக தேசிய லீக் கட்சித் தலைவர் ஆங்சான் சூகி நோபிடாவில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தனது கட்சியை பதிவு செய்தார். இதன் பின்னர் முதன்முறையாக நாடாளுமன்றத்திற்குள் சென்று அனைவரையும் சந்தித்து உரையாடினார்.

- நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரமான கிரைஸ்ட்சர்ட் நகரில் அடுத்தடுத்து இரண்டு முறை கடும் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

25 -பாகிஸ்தான் தகவல் அமைச்சர் பிர்தௌஸ் ஆஷிக் அவான் எந்தவித காரணமும் கூறாமல் திடீர் என்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அமைச்சரவைக் கூட்டத்தின்போது அழுதபடியே தனது ராஜினாமா முடிவை பிரதமரிடம் அவர் தெரிவித்தார்.

- கிறிஸ்துமஸ் தினத்தன்று ஹவாய் தீவில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் ஒரு இளம் தம்பதி தங்களின் 8 மாதக் குழந்தையுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தபோது அக்குழந்தை ஒபாமா வாயில் விரலை விட்டு ஆட்டியது கலகலப்பை ஏற்படுத்தியது.

28 - இந்துக்களின் புனித நூலான பகவத் கீதைக்கு தடைவிதிக்கக் கோரும் மனுவை தள்ளுபடி செய்வதாக ரஷ்யாவின் சைபீரிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

English summary
Osama Binladen's killing and brutal murder of Libyan leader Gadaffi jolted the world in the year 2011. Fall of the govts in arab nations also created shock waves among the countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X