புதிய நில மோசடி புகாருடன் கர்நாடக முதல்வராக ஷெட்டர் பதவியேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Jagadish Shettar
பெங்களூர்: கர்நாடகத்தின் புதிய பாஜக முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டர் இன்று பதவியேற்றார்.

ஏகப்பட்ட நாடகங்களுக்குப் பிறகு நடந்த கர்நாடக பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை பா.ஜ.க. தலைவராக ஜெகதீஷ் ஷெட்டர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, முன்னாள் முதல்வர்கள் எதியூரப்பா, சதானந்த கெளடா, பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் எச்.என். அனந்த் குமார், பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா ஆகியோருடன் ஆளுநர் மாளிகைக்கு வந்த ஜெகதீஷ் ஷெட்டர், ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் எச்.ஆர். பரத்வாஜிடம் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்றுக் கொண்ட பரத்வாஜ், ஆட்சி அமைக்குமாறு ஜெகதீஷ் ஷெட்டருக்கு அழைப்பு விடுத்தார். அதே நேரத்தில் ஊழல் குற்றச்சாட்டில் அடிபட்டவர்களை அமைச்சரவையில் சேர்க்க வேண்டாம் என்றும் ஆளுநர் அறிவுரை கூறியதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து இன்று முதல்வராக ஜெகதீஷ் ஷெட்டரும், அவரைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக கே.எஸ்.ஈஸ்வரப்பா, அசோகா ஆகியோரும், மேலும் 31 அமைச்சர்களும் பதவியேற்றனர்.

லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்தவரே மீண்டும் முதல்வராவதையடுத்து ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் அசோக் மற்றும் குருபா இனத்தைச் சேர்ந்த ஈஸ்வரப்பா ஆகியோருக்கு துணை முதல்வர் பதவி தரப்பட்டுள்ளது.

சதானந்த கெளடாவுக்கு மாநிலத் தலைவர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது. ஆனால், இந்தப் பதவிக்கு அனந்த் குமாரும் போட்டியிடுவதால், கெளடாவுக்கு மாநிலத் தலைவர் பதவியோ அல்லது ராஜ்யசபா எம்பி பதவியோடு தேசிய அளவில் ஒரு முக்கிய பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.

முன்னதாக முதல்வர் பதவியை சதானந்த கெளடா ராஜினாமா செய்ததையடுத்து மண்டியா மாவட்டத்தில் ஒக்கலிகா சமுதாயத்தினர் முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர்.

அதே போல சதானந்த கெளடா கவர்னர் மாளிகைக்கு வந்தபோது, அவர் ராஜினாமா செய்யக்கூடாது என்று கூறி அவரது ஆதரவாளர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே அமைச்சர் பதவியை கைப்பற்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. நேற்று இரவு முழுவதும் இது தொடர்பான ஆலோசனைகள் தொடர்ந்து பல்வேறு தலைவர்களின் இல்லங்களில் நடந்தன.

ஜெகதீஷ் ஷெட்டர் மீதும் நிலமுறைகேடு புகார்:

இந் நிலையில் புதிய முதல்வராக பதவி ஏற்க உள்ள ஜெகதீஷ் ஷெட்டர் மீது நேற்று பெங்களூர் லோக் அயுக்தா கோர்ட்டில் நிலமுறைகேடு புகார் தாக்கல் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர் எஸ்.எம்.சேத்தன் என்பவர் இந்த புகாரை தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்துள்ள தனிப்புகாரில் மதசார்பற்ற ஜனதா தளம்-பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சியில் எச்.டி.குமாரசாமி முதல்வராக இருந்தபோது ஜெகதீஷ் ஷெட்டர் வருவாய்த்துறை அமைச்சராக இருந்தார்.

அப்போது ஏ.பி.எம்.சி. சட்டத்தின் கீழ் விவசாயிகளுக்காக மெகா மார்ட் அமைக்க பெங்களூர் வடக்கு தாலுகாவில் அரசு கையகப்படுத்திய 356 ஏக்கர் நிலத்தில் 188 ஏக்கர் தனியாருக்கு சொந்தமான நிலம் ஆகும். பின்னர் இந்த 188 ஏக்கர் தனியார் நிலத்தை அரசின் அறிவிக்கையில் இருந்து விடுவித்து அவர் உத்தரவிட்டார். இது சட்டவிரோதம் ஆகும். இதுகுறித்து விசாரணை நடத்தி சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலமுறைகேடு புகாரால் ஷெட்டாருக்கு ஆரம்பத்திலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது.

லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த 56 வயதான ஜெகதீஷ் ஷெட்டர் கர்நாடகத்தின் 27வது முதல்வராக பதவி ஏற்றுள்ளார். இவருடைய பதவி காலம் அடுத்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாதத்தில் சட்டசபைத் தேர்தலை கர்நாடகம் சந்திக்கவுள்ளது. ஆனால், அதுவரை இவர் முதல்வர் பதவியில் நீடிப்பாரா என்பது கூட சந்தேகமே.

ஷெட்டர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வட கர்நாடகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பாஜக தொண்டர்கள் பெங்களூரில் குவிந்தனர். இதற்காக நூற்றுக்காண பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Jagadish Shivappa Shettar, a loyalist of former chief minister BS Yeddyurappa, will be sworn in as Karnataka's chief minister on Thursday. The BJP legislature party in the state on Tuesday unanimously chose Shettar as their new leader in the presence of party's central observers Arun Jaitley and Rajnath Singh

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற