• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய ஜெ.வுக்கு வைகோ பாராட்டு!

By Mayura Akilan
|

Vaiko
சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தூத்துக்குடியில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் தாமிர உருட்டு ஆலை எனும் நாசகார நச்சு ஆலை, நிலம், நிலத்தடி நீர், நிலத்தின் மேல் தேங்கும் நீர், காற்று மண்டலம் அனைத்தையும் நஞ்சாக ஆக்கி, மனித உயிர்களுக்கும், கடல்வாழ் உயிரினங்களுக்கும், விவசாய விளைநிலங்களுக்கும் பெரும் கேட்டினை, ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடியில் இருந்து அகற்றக்கோரி, கடந்த 17 ஆண்டுகளாக போராடி வந்தோம்.

விவசாயிகள், மீனவர்கள், வியாபாரப் பெருமக்கள், தொழிலாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டை எதிர்த்து வந்தனர்.

1994 ஆம் ஆண்டு மராட்டிய மாநிலத்தில் உள்ள இரத்தினகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து, விவசாயிகள் போராடி, ஒரு கட்டத்தில் உடைத்து நொறுங்கினார்கள். அன்றைய மராட்டிய மாநில சரத்பவார் அரசு, லைசென்சை இரத்து செய்தது. குஜராத் கோவா மாநிலங்கள், ஆலையை நிறுவ அனுமதிக்காததால், அதன் பின்னர் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவப்பட்டது.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 1996ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டுவரை உறுதிமிக்க எண்ணற்ற போராட்டங்களை தொடர்ந்து நடத்தியது.

உயர்நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கும் அமைப்பின் சார்பில், ஏற்கனவே ஸ்டெர்லைட்டை எதிர்த்து ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தின் மூலம் ஸ்டெர்லைட்டை அகற்றப் போராடுவோம் என முடிவு எடுத்து, நானும் ரிட் மனு தாக்கல் செய்தேன்.

1998 நவம்பர் 23 இல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும்படி, சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஆணை பிறப்பித்தது.

1998 டிசம்பர் 9, 10, 11 தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி லிபரான் அவர்கள் அமர்வில், ஸ்டெர்லைட்டை எதிர்த்து நான் வாதாடினேன். வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதால், டிசம்பர் 14 ஆம் தேதி அன்றும் அங்கும் வாதாடினேன்.

1999 பிப்ரவரி 23 இல், ஆலை மீண்டும் திறக்கப்பட்டது. தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் போராடி வந்தோம்.

2010 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் எலிபி தர்மாராவ் அவர்களின் அமர்வு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடச்சொல்லி தீர்ப்பு அளித்தது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் அந்தத் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை பெற்றது.

2012 அக்டோபர் வரையில் உச்சநீதிமன்றத்தில் ஏறத்தாழ 20 அமர்வுகள் வாய்தா நடைபெற்றது. உச்சநீதிமன்றத்தின் ஒவ்வொரு வாய்தாவிலும், நான் தவறாமல் பங்கு ஏற்றேன். உச்சநீதிமன்ற ஆணைப்படி, ஸ்டெர்லைட் ஆலையில் நாக்பூர் நீரி நிறுவனம் 2011 ஏப்ரல் 6, 7, 8 தேதிகளிலும், 19, 20, 21, 22 தேதிகளிலும் ஏழு நாட்கள்நடத்திய ஆய்விலும் நான் பங்கு ஏற்றேன். 2012 அக்டோபர் 1 ஆம் தேதியும், 9 ஆம் தேதியும் உச்ச நீதிமன்றத்தில் இருதரப்பின் நிறைவு வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன.

ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் என்று நான் மிகவும் முயற்சி எடுத்துத் திரட்டிய பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து, இரண்டரை மணி நேரம் வாதாடினேன். ஸ்டெர்லைட் ஆலை சுற்றுவட்டாரத்தில் சேகரிக்கப்பட்ட மண், தண்ணீர், ஸ்டெர்லைட் கழிவுகளின் மாதிரிகளை, அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுச்சூழல் விஞ்ஞானி டாக்டர் மார்க் செர்னைக் அவர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைத்து, அவர் தந்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தேன்.

விளைநிலங்கள் அடியோடு நாசம் ஆகும்; கால்நடைகள் நச்சுத் தண்ணீர் குடித்து இறந்துபோகும். மனிதர்களுக்கு நுரையீரல் புற்றுநோய், சரும நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டு, ஆயுள் காலம் குறையும் என்பது அறிக்கையின் முக்கிய அம்சம் ஆகும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, ஏப்ரல் 2 ஆம் தேதி வர இருக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் தீர்ப்பு வரும் என்று நம்புகிறேன்.

இந்நிலையில், மார்ச் 23 ஆம் தேதி அதிகாலையில், ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் புகையால், தூத்துக்குடியின் பல பகுதிகளில் மக்கள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, சுவாசிக்கச் சிரமப்பட்டு, இன்னலுக்கு ஆளானார்கள். பல இடங்களில் மரங்களின் இலைகள், செடிகள், பூக்கள் நிறம் மாறி கருகிப்போயின.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டக்குழு சார்பில், மார்ச் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தோம். தூத்துக்குடி வியாபாரிகள் சங்கமும், தமிநாடு வணிகர் சங்கங்களின் பேரவையும் கடைகளை அடைக்கக் கோரிக்கை விடுத்தன. தூத்துக்குடி மாநகரத்தின் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டன. மீனவர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஆயிரக்கணக்கில் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் முற்றுகை போரில் பங்கு ஏற்றனர்.

ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு போராட்டக் களத்தில் கோரிக்கை விடுத்தோம்.

ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் போட்ட முதலீட்டை விட 40 மடங்கு கொள்ளை இலாபம் அடித்து இருப்பதால், இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.

பொதுமக்கள் நலனைக் காக்க, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, ஸ்டெர்லைட் ஆலையை மூடிட மிகச் சரியான நடவடிக்கையை மேற்கொண்ட தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கு, தூத்துக்குடி மாநகர மக்கள், சுற்றுவட்டாரப் பொதுமக்கள் சார்பிலும், 17 ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை எதிர்த்துப் போராடி வரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் மனம் நிறைந்த பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

 
 
 
English summary
MDMK chief vaiko has welcomed the closer of sterlite industries. And he hailed the Chief Minister Jayalalitha for her action against the sterlite.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X