For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்து இயக்க நிர்வாகிகள் கொலை.. 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு

Google Oneindia Tamil News

சென்னை: பாஜக மற்றும் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கொலையில் சம்பந்தப்பட்ட 4 பேர் குறித்த தகவல் கொடுத்தால் ரூ. 25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ரமேஷ் சேலத்தில் கடந்த 19-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து சேலம் மாநகர போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். வழக்கின் முக்கியத்துவம் கருதி, விசாரணையை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். தற்போது சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.மஞ்சுநாதா தலைமையில் தனிப்படை போலீஸார் வழக்கை விசாரணை செய்து வருகின்றனர்.

Auditor Ramesh murder case: Police seeks tips from public

கொலையை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், கொலையாளியின் வரைப்படத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.இது தவிர, மதுரையில் அத்வானி செல்லவிருந்த பாதையில் வெடிகுண்டு வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த போலீஸ் பக்ருதீன் (35), பிலால் மாலிக் (25), திருநெல்வேலி மேலப்பாளையத்தைச் சேர்ந்த பன்னா இஸ்மாயில் (38), நாகூரைச் சேர்ந்த அபபுக்கர் சித்திக் (45) ஆகியோர் புகைப்படங்களை போலீஸார் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டனர்.

இவர்கள் பயங்கரவாத அமைப்புகளில் தொடர்புடையவர்கள் என்று கூறப்படுவதால், இந்த கொலைக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகித்து வருகின்றனர். மேலும் இவர்களிடம் விசாரித்தால் கொலைக்கான காரணமும், கொலையாளிகள் குறித்த தகவல்களும் வெளிவரும் என்று போலீஸார் கருதியதால், அவர்களை பற்றி தகவல் தெரிந்தால் போலீஸாருக்கு தெரிவிக்கலாம் என அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் தமிழக காவல்துறையின் இயக்குநர் அலுவலகம் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் தேடப்படும் போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், அபுபக்கர் சித்திக் ஆகிய 4 பேரையும் பற்றி தகவல் தெரிவித்தால், ரூ . 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும். கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

இதில் நான்கு பேரில், ஒவ்வொருவரையும் கைது செய்ய பயனுள்ள தகவல் தருபவர்களுக்கு ரூ. 5 லட்சம் (மொத்தம் ரூ. 20 லட்சம்) அளிக்கப்படும். இது தவிர வேலூரில் இந்து முன்னணி நிர்வாகி வெள்ளையப்பன், ஆடிட்டர் ரமேஷ் ஆகியோர் கொலை வழக்கில் தொடர்புடைய பிற குற்றவாளிகளை தகவல் தெரிவித்தால் ரூ. 2 லட்சம் சன்மானம் வழங்கப்படும்.

பொதுமக்கள் தங்களுக்கு கிடைத்த தகவல்களை 044 -28447739, 97104 55000, 94445 85954 ஆகிய தொலைபேசி, செல்போன் எண்களுக்கு தெரிவிக்கலாம். தகவல் தெரிப்பவர்கள் விவரம் ரகசியமாக வைக்கப்படும்.தலைமறைவாக இருக்கும் நபர்கள் வெடிகுண்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது அல்லது தங்க இடம் கொடுப்பது ஆபத்தானது. மேலும் அடைக்கலம் கொடுப்பவர்கள் சட்டப்படி தண்டனைக்குரியவர்கள் என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

English summary
TN police have announced bounty for vital tips on the killers of BJP leader Auditor Ramesh murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X