For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த பொருளாதாரச் சோதனையிலும் இந்தியா வெற்றி பெறும்!- கருணாநிதி

By Shankar
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: இந்த பொருளாதாரச் சோதனையில் இந்தியா நிச்சயம் வெற்றி பெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து 68.80 என வீழ்ச்சியடைந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக டாலரின் மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து வருகிறது.

ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 4.76 ஆகும். இந்திரா காந்தி 15 ஆண்டுகள் பிரதமராக இருந்தபோது, ரூபாய் மதிப்பு 11.36 ஆகும். ராஜீவ் காந்தி காலத்தில் ரூபாய் மதிப்பு 16.22 ஆகும். பி.வி.நரசிம்ம ராவ் காலத்தில் 35.43 ஆகும். வாஜ்பாய் காலத்தில் ரூபாய் மதிப்பு 45.31 ஆகும். மன்மோகன் சிங்கின் 9 ஆண்டு கால ஆட்சியில் 68.80 ஆகும். இது வரலாறு காணாத வகையில் மிகப் பெரிய வீழ்ச்சியாகும்.

நடப்பாண்டில் ரூபாய் மதிப்பு 19.50 சதவீதத்துக்கும் அதிகமாக வீழ்ச்சி கண்டுள்ளது.

இந்தச் சரிவை தூக்கி நிறுத்தாவிட்டால், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75-ஆகச் சரியும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் சங்கிலித் தொடர் போன்ற விளைவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

புது உத்தி மூலம் தீர்வு: இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுனாமிக்கு மன்மோகன் சிங், ப. சிதம்பரம், மான்டெக் சிங் அலுவாலியா ஆகியோர்தான் பொறுப்பு எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

மன்மோகன் சிங் நிறைவான பொருளாதார அறிவு படைத்தவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு காரணகர்த்தாவாக இருந்தவர். பழைய பொருளாதார உத்திகள் பலனளிக்காது என்றால், புதிய முறைகளைக் கையாண்டு வெகு விரைவில் தீர்வு காண வேண்டும்.

மூலப் பொருள் இறக்குமதி: நடப்பு கணக்குப் பற்றாக்குறையை ரூ.7 ஆயிரம் கோடி டாலருக்குள் அடக்க வேண்டும் என்று நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றை அதிகமாக இறக்குமதி செய்வதுதான் பற்றாக்குறை அதிகரிக்கக் காரணமென அரசு கூறுகிறது. இது மட்டுமே உண்மையான காரணம் இல்லை.

இறக்குமதி செய்யப்படும்போது, மூலப் பொருள்களைப் பற்றியும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தயாரிப்பாளர் ஏதாவது ஒரு பொருளை உற்பத்தி செய்வதற்காக, மூலப் பொருள்களை இறக்குமதி செய்வதுதான் மூலதனப் பொருள் இறக்குமதி எனப்படும்.

அப்படி மூலப் பொருள்களை இறக்குமதி செய்து, புதிய பொருள்களைத் தயாரித்து அதிக விலைக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால்தான் இறக்குமதியால் ஏற்படும் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை ஈடுகட்ட முடியும்.

2004-5-ஆம் ஆண்டில் மூலப் பொருள்களின் இறக்குமதி 2,550 கோடி டாலர் அளவுக்கு இருந்தது. தற்போது 58,700 கோடி டாலருக்கு மூலப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இதுபோன்ற காரணங்களால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது.

அளவறிந்து வாழாதவனுக்கு வாழ்க்கையில் எல்லாம் இருப்பதுபோல் தோன்றினாலும், அனைத்தும் இல்லாமல் மறைந்து போய்விடும் என்று திருவள்ளுவர் எச்சரித்துள்ளார். இதை கருத்தில் கொண்டு பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் இயற்கை வளங்கள் எல்லையற்றவை. மனித வளம் ஈடு இணையற்றது.

இந்தியா விடுதலை அடைந்ததற்குப் பிறகு எத்தனையோ சவால்களைச் சந்தித்து, முன்னேறி வருகிறது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் பொருளாதாரச் சோதனையிலும் இந்தியா நிச்சயம் வெற்றிபெறும் என எதிர்பார்ப்போம்," என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Karunanidhi says that Indian will overcome the present economic crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X