ஆசியகோப்பை கிரிக்கெட்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம்.. வலைதளங்களில் பதிவு.. பரபரப்பில் கர்நாடகா
பெங்களூர்: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஆசிய கோப்பைக்கான டி20 ஓவர் கிரிக்கெட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்றன.
இதில் கிரிக்கெட் உலகில் ஹைவோல்டேஜ் போட்டி என கூறப்படும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இரண்டு முறை மோதின.

இந்தியா வெற்றி
இதில் லீக் போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. துபாயில் நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி 19.4 ஓவரில் 148 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் வெற்றி
இதையடுத்து சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டி கடந்த 4ம் தேதி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் 19.5வது ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆறுதல் வெற்றி
இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திய நிலையில் இலங்கையுடன் இந்தியா தோல்வியடைந்ததால் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. சூப்பர் 4 சுற்றில் இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக மட்டும் 101 ரன்கள் வித்தியாசத்தில் அமோகமாக ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவு கோஷம்
இந்நிலையில் தான் சூப்பர் 4 சுற்றில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிலர் கோஷமிட்டதோடு, பாகிஸ்தான் கொடியுடன் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் டவுனை சேர்ந்த ஷகீல் பாஷா, தோகீத் பாஷா, முன்சூர் உல்லா ஆகியோர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிட்டு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது.

3 பேர் மீது வழக்கு
இதுதொடர்பாக பாஜக பிரமுகரான ராமான்ஜி சீனிவாசப்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ஷகீல் பாஷா, தோகீத் பாஷா, முன்சூர் உல்லா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications