சீருடை நிறத்தில் ஹிஜாப் அணிய அனுமதி கிடைக்குமா: கர்நாடகா ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை
மாணவிகள் சீருடை அணிய மறுக்கவில்லை என்றும் சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோருகின்றனர் எனவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர்: ஹிஜாப் விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அனைத்து மாணவர்களும் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்துள்ள மாநில உயர்நீதிமன்றம், இந்த மனுக்கள் மீதான விசாரணையை இன்று மீண்டும் நடத்த உள்ளது. மாணவிகள் சீருடை அணிய மறுக்கவில்லை என்றும் சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோருவதாக வழக்கறிஞர்கள் வாதத்தை முன்வைத்துள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தது. இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே போராட்டங்கள் வெடித்தன. ஒரு கல்வி நிறுவனத்தில் தேசிய கொடிக்கம்பத்தில் காவிக்கொடி ஏற்றப்பட்டது.
இதனையடுத்து நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார் அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை. கடந்த வாரம் விடுமுறைக்கு பிறகு கர்நாடகாவில் 10ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்த நிலையில் பல மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்கு வந்தனர்.

கர்நாடகா ஹைகோர்ட்
இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் 18 பேர் சார்பில் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வர தங்களை அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடக் கோரியுள்ளனர். வழக்கை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம், தலைமை நீதிபதி அடங்கிய கூடுதல் அமர்வுக்கு வழக்கு விசாரணையை மாற்றியது.

நீதிபதிகள் கேள்வி
அதன்படி, தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஜூம் மீட்டிங் வழியாக காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கர்நாடக உயர் நீதிமன்ற யூடியூப் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் மாணவிகள் எப்போதில் இருந்து ஹிஜாப் அணிகின்றனர் என கேள்வி எழுப்பினார்.

சீருடை நிறத்தில் அணிய அனுமதி
அதற்கு, மனுதாரர் தரப்பில் ஆஜர் ஆன வழக்கறிஞர், கடந்த 2 ஆண்டுகளாக மாணவிகள் ஹிஜாப் அணிகின்றனர் என தெரிவித்தார். மேலும் மாணவிகள் சீருடை அணிய மறுக்கவில்லை என்றும் சீருடை நிறத்திலேயே ஹிஜாப் அணிய அனுமதிக்க வேண்டும் என்று மட்டுமே கோருகின்றனர் எனவும் தெரிவித்தார். கேந்திர வித்யாலயா பள்ளிகளில் கூட இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். ஹிஜாப் அணிவது மத உரிமை என்றும் கல்வி நிலையங்களின் ஹிஜாப் அணிவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை என்றும் அவர் வாதங்களை முன் வைத்தார்.

அடிப்படை மத கடமைகள்
அப்போது குரானில் கூறப்பட்டுள்ள அனைத்தும் அடிப்படை மத கடமைகளா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில், குரானில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளுக்குள் நான் செல்ல விரும்பவில்லை. ஹிஜாப் அடிப்படை என தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து வழக்கு விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று மீண்டும் விசாரணை
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில் மாணவிகளின் கோரிக்கை ஏற்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மனு தாக்கல் செய்து, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரினர். எனினும் உச்ச நீதிமன்றம் இதனை அவசர வழக்காக விசாரிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications