ஜெபத்தால் ஜெயம், கல் வீச்சு, அக்கப்போர் மகன்- அமைச்சர் நாசர் பதவியை காவு வாங்கிய சர்ச்சைகள்!
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. திமுக அரசு தற்போது 3-ம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 3-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஏகப்பட்ட யூகங்கள் வலம் வந்தன. அத்தனை யூகங்களுக்கும் அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று இரவு வெளியிடப்பட்டது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சரான ஆவடி சா.மு.நாசர் விடுவிக்கப்பட்டுள்ளார்; அவருக்கு பதில் மன்னார்குடி எம்.எல்.ஏ. டிஆர்பி ராஜா, அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். நாளை மறுநாள் தமிழ்நாடு அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்க உள்ளார்.
ஜெபத்தால் ஜெயம்: திமுக ஆட்சியின் தொடக்கம் முதலே பல்வேறு சர்ச்சைகளில் இடைவிடாமல் சிக்கியவர் அமைச்சர் நாசர். அமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே, கிறிஸ்தவர்களின் வலிமையான ஜெபத்தினால் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது; திமுக ஆட்சிக்கு வந்ததற்கு முக்கிய காரணமே கிறிஸ்தவர்களின் ஜெபம்தான் என பொதுக்கூட்டத்தில் நாசர் பேசியது திமுக தலைமையை அதிர்ச்சியடையவைத்தது. அப்போது தாம், கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தவே அப்படி பேசினேன் என விளக்கம் கொடுத்தார்.

கல்வீச்சு சம்பவம்: திருவள்ளூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் நாசர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நாற்காலிகளை எடுத்துப் போட தாமதம் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த நாசர், கீழே கிடந்த கற்களை தொண்டர்களை நோக்கி வீசி எறிந்தார். இந்த வீடியோ, படங்கள் பஞ்சாயத்தை இழுத்துவிட்டது. அப்போது திமுகவை கற்கால திமுக என அதிமுக கிண்டலடித்தது.
காலணி விவகாரம்: சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்துக்கு அமைச்சர் நாசர் சென்ற போது அவரது உதவியாளர் காலணிகளை சுமந்தபடி சென்றார். இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் களேபரமானது.
மேலும் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் நாசர், நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் அத்தனை பேரும் தூங்கி வருவதாக குறிப்பிட்டுப் பேச அதுவும் அக்கப்போராக வெடித்தது.
மகனால் வந்த வினை: அமைச்சர் நாசர் மகன் , ஆசிம்ராஜா ஆடிய ஆட்டங்கள்தான் அவரது பதவி பறிப்புக்கே பிரதான காரணம் என்கிற வகையில் இருந்தது. நாசர் மகன் எஸ்.என்.ஆசிம்ராஜா, ஆவடி மாநகராட்சியின் 4-வது வார்டு கவுன்சிலர், பணிக்குழு தலைவர். திமுகவின் ஆவடி மாநகர செயலாளராகவும் இருந்தார். அப்பா அமைச்சர் என்ற கோதாவில் ஆசிம்ராஜா ஆடிய ஆட்டம், சிக்கிய சர்ச்சைகள் திமுக தலைமையை கடுமையாக கோபம் அடைய வைத்தது. இதனால் ஆசிம்ராஜா, ஆவடி திமுக மாநகர செயலாளர் பதவியில் இருந்தே தூக்கி அடிக்கப்பட்டார். இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அக்கப்போரை கொண்டு வந்து சேர்த்ததால் அமைச்சர் நாசர் பதவி பறிக்கப்பட்டு இருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications