நீட் தேர்வு எதிர்ப்பில் அதிமுக ஒரே முடிவு... ஆளுநர் தன் பணியை செய்துள்ளார் - ஓபிஎஸ் கருத்து
நீட் தேர்வு விவகாரத்தில் ஆளுநர் தன்னுடைய பணியை செய்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
சென்னை: நீட் தேர்வை அதிமுக நேற்று எதிர்த்தது... இன்று எதிர்க்கிறது... நாளையும் எதிர்க்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு ஆளுநர் தனது பணியை செய்துள்ளதாகவும் ஓபிஎஸ் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்டமுன்வடிவு 13-9-2021 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலைப் பெற்றிட, மத்திய அரசிற்கு அனுப்பி வைப்பதற்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத் தலைவருக்கு அதனை அனுப்பி வைக்காமல் கிடப்பில் போட்டார் ஆளுநர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரு தினங்களுக்கு முன்பு நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார். நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு விளக்கம் அளித்துள்ளது.

அதிமுக புறக்கணிப்பு
இதனை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் கட்சி பங்கேற்கவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காதது குறித்து சமூக வலைதளங்களில் விமர்சனம் எழுந்தது. இச்சூழலில் அதிமுக சார்பில் ஓபிஎஸ் விளக்கமளித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

ஓபிஎஸ் விளக்கம்
நீட் தேர்வு ரத்து குறித்த அதிமுகவின் கருத்துகள் ஏற்கனவே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையிலும், ஜனவரி 8ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. அதிமுகவை பொறுத்தவரை 'நீட்' தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. எனவே, 'நீட் தேர்வு ரத்து தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கையையும் அதிமுக ஆதரிக்கும் என்றும் ஓபிஎஸ் தெரிவித்திருந்தார்.

நீட் தேர்வுக்கு அதிமுக எதிர்ப்பு
இதனிடையே மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வை நேற்றும் நாங்கள் எதிர்த்தோம்...இன்றும் எதிர்க்கிறோம் நாளையும் நாங்கள் எதிர்ப்போம் என்று கூறினார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் வரை அதிமுக உறுதியாக எதிர்க்கும் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

மாணவர்கள் பாதிப்பு
நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போதுதான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. இன்றைக்கு இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்படக் காரணம் திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போதுதான் என்று தெரிவித்தார்.

இந்திய அரசியலமைப்பின் படி ஆளுநர்
தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறதே என்று செய்தியாளர்கள், ஓ.பன்னீர் செல்வத்திடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர் செல்வம், இந்திய அரசியலமைப்பின் படி ஒரு ஆளுநர் செய்ய வேண்டிய பணியை செய்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
Recommended Video

துரைமுருகன் குற்றச்சாட்டுக்கு பதிலடி
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவும் அதிமுகவும் நாடகமாடுவதாகவும் மாணவர்கள் அவர்களை புறக்கணிப்பார்கள் என்றும் திமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் திமுக - காங்கிரஸ் கூட்டணிதான் பிரச்சினைக்கு காரணம் என்று சொல்லியிருக்கிறார் ஓபிஎஸ். அரசியலமைப்பு விதிப்படி ஆளுநர் தன் கடமையை செய்யவில்லை என்று முதல்வர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில், நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை என்று சொல்லியிருக்கிறார் ஓ.பன்னீர் செல்வம்.












Click it and Unblock the Notifications