சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செங்கல்பட்டு தடுப்பு மருந்து உற்பத்தி வளாகத்தை விரைவாக திறந்திடுக.. மத்திய அரசுக்கு அன்புமணி கடிதம்

Google Oneindia Tamil News

செங்கல்பட்டு: செங்கல்பட்டு தடுப்பூசி மருந்து உற்பத்தி வளாகத்தை விரைவாகத் திறந்து உற்பத்தியைத் தொடங்க வேண்டும்! என மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து உற்பத்தி வளாகப் பணிகளை விரைந்து முடித்து, அங்கு கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Anbumani Ramadoss writes to Centre to expedite completion works of Integrated Vaccine Complex

மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தடுப்பூசி வளாகம் அமைக்கும் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில், நிர்வாகம் சார்ந்த காரணங்களால் தடுப்பூசி வளாகம் இன்னும் திறக்கப்படாத நிலையில், இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தின் விவரம்:

மதிப்பிற்குரிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அவர்களுக்கு,

பொருள்: சென்னையை அடுத்த செங்கல்பட்டில் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகப் பணிகளை விரைவு படுத்த வேண்டும் - தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்கக் கோருதல் & தொடர்பாக பார்வை - 18.10.2019 தேதியிட்ட எனது கடிதம்

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா இரண்டாவது அலை மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் போதிலும் கொரோனா பரவலை இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி தடுப்பூசி தான் என்று மருத்துவ வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் 18 வயதுக்கும் மேற்பட்ட 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவது என்பது இமாலயப் பணியாகும். தேவையான அளவு தடுப்பூசிகளின் இருப்பு, விலை ஆகியவை தான் நம்முன் இருக்கும் மிகப்பெரிய சவால் ஆகும். தனியார் நிறுவனங்களிடமிருந்து கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வது அரசுக்கு மிகப்பெரிய செலவை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் பரவல் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பாடம் என்னவென்றால், பொது சுகாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஒரே வழி பொது சுகாதார கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டும் என்பது தான். அதன்படி, மத்திய, மாநில அரசுகளின் நிர்வாகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது மட்டுமின்றி, தற்கால சூழலுக்கு தேவையான மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி, போதிய எண்ணிக்கையில் மருத்துவப் பணியாளர்களையும் நியமிக்க வேண்டும்.

அதே நேரத்தில் இந்தியா கடைபிடித்து வரும் அனைவருக்கும் தடுப்பூசி திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். இத்தகைய அசாதாரண சூழல்களை சமாளிக்க அரசால் நடத்தப்படும் தடுப்பூசி உற்பத்தி மையங்களை நாம் உருவாக்க வேண்டியது அவசியம் ஆகும்.
அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அருகில் உள்ள செங்கல்பட்டு நகரில், மத்திய அரசின் துணை நிறுவனமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு வரும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 18.10.2019 அன்று தங்களுக்கு நான் எழுதிய கடிதம் குறித்து நினைவூட்ட விரும்புகிறேன்.

உங்களின் ஆய்வுக்காக அந்தக் கடிதத்தையும் இந்தக் கடிதத்துடன் இணைத்திருக்கிறேன். செங்கல்பட்டு தடுப்பூசி வளாகப் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன. மீதமுள்ள பணிகளையும் விரைவாக முடித்து உலக சுகாதார நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த தடுப்பூசி மருந்துகளை உற்பத்தி செய்வது சாத்தியம் தான். உலகத் தரம் வாய்ந்த செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி மருந்து வளாகத்தில் கீழ்க்கண்ட 7 வகையான தடுப்பூசிகளை தயாரிக்க முடியும். அவற்றின் விவரம் வருமாறு:
1. திரவ பெண்டாவேலண்ட் தடுப்பூசி ( Liquid Pentavalent Vaccine (LPV))
2. ஹெபடைடிஸ் - பி தடுப்பூசி ( Hepatitis-B-Vaccine )
3. ஹீமோபிலஸ் இன்புளுயன்சா - பி தடுப்பூசி ( Haemophilus Influenza Type 😎
4. ரேபிஸ் தடுப்பூசி ( Rabies Vaccine)
5. மூளைக்காய்ச்சல் தடுப்பூசி ( Japanese Encephalitis E Vaccine)
6. பிசிஜி தடுப்பூசி ( BCG Vaccine)
7. தட்டம்மை - தாளம்மை (எம்.எம்.ஆர்) தடுப்பூசி ( Measles & Rubella Vaccine)

ஆகியவற்றை இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும்.
இன்னும் ஒரு நற்செய்தி என்னவென்றால், கொரோனா தடுப்பூசிகளையும் இந்த வளாகத்தில் தயாரிக்க முடியும் என்பது தான்.

இத்தகைய சிறப்பு கொண்ட தடுப்பூசி வளாகத்தை விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தடுப்பூசி வளாகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் தமிழ்நாடு அரசையும் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு, இதை கூட்டாண்மை நிறுவனமாக நடத்தலாம்.

கொரோனா வைரஸ் பரவல் நீண்ட காலத்துக்கு நீடிக்கும் என்றும், இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டு காலத்திற்கு கொரோனா மக்களை பாதிக்கும் என்றும் மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நான் ஏற்கனவே குறிப்பிட்டவாறு தடுப்பூசி தான் கொரோனாவை தடுப்பதற்கான சிறந்த ஆயுதம் ஆகும்.

அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்காக தனியார் நிறுவனங்களிடமிருந்து பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து வாங்குவதை அரசே தயாரிப்பது தான் சிறப்பானதாக இருக்கும். எனவே, செங்கல்பட்டு ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகத்தில் மீதமுள்ள பணிகளை முடிக்கவும், கொரோனா தடுப்பூசி உற்பத்தியை தொடங்கவும் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என தனது கடிதத்தில் அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
Anbumani Ramadoss writes to Union Health Minister, to expedite completion works of Integrated Vaccine Complex -at Chengalpattu near Chennai - and start producing Covid vaccines.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X