உடல்நிலையில் நல்ல முன்னேற்றம்.. சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட பாரதிராஜா.. ‘2 நாளில் டிஸ்சார்ஜ்’!
சென்னை : இயக்குநர் பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து அவர் பொதுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பாரதிராஜா திடீர் உடல் நலக்குறைவின் காரணமாக கடந்த வாரம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
பின்பு மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா உடல்நலக்குறைவு
இயக்குநர் பாரதிராஜா சில நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் நான்கு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் எனக் கூறப்பட்டது. பின்பு உடல்நலம் விரைந்து சீரடையாததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

பாசத்திற்குரிய பாரதிராஜா
இந்த தகவல் அறிந்து ரசிகர்கள் கவலையடைந்த நிலையில் பாரதிராஜா தனது உடல்நலம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், "என் இனிய தமிழ் மக்களே, வணக்கம். நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நான் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சை மற்றும் கனிவான கவனிப்பின் காரணமாக நலம் பெற்று வருகிறேன். மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் என்னை நேரில் காண வர வேண்டாம் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்" எனத் தெரிவித்திருந்தார்.

உடல்நிலையில் முன்னேற்றம்
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அவருக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. பாரதிராஜாவின் உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து வருகின்றனர் என மருத்துவமனை சார்பில் அறிக்கையும் வெளியானது. அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பற்றி முதல்வர் ஸ்டாலினும், பாரதிராஜாவின் மனைவியிடம் போன் வாயிலாக விசாரித்திருந்தார்.

சாதாரண வார்டுக்கு
இந்நிலையில் பாரதிராஜா உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்ப உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதிராஜாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பொது சிகிச்சை பிரிவிற்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications