சூப்பர்ல..! அசம்பாவித சம்பவங்களே இல்லாத புத்தாண்டு.. பொதுமக்களுக்கு நன்றி சொன்ன சென்னை போலீஸ்!
சென்னை : புத்தாண்டு கொண்டாட்டம் எந்தவித அசம்பாவித சம்பவங்கள் இல்லாமல், அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழக அரசின் உத்தரவின் பேரில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததின் காரணமாக, சென்னையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் புத்தாண்டை, பொதுமக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை பாதுகாப்பாகவும் அமைதியாகவும் கொண்டாட தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. பல்வேறு கட்டுபாடுகளும் விதிக்கப்பட்டன. மேலும் அனைத்து முக்கிய சாலைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்கவும் இருசக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்களில் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். விதிகளை மீறியோர் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

சென்னை காவல்துறை
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி மகிழ்ச்சியாக நிறைவடைந்த நிலையில் இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நடக்காமல், விபத்தில்லா புத்தாண்டாக மகிழ்ச்சியுடன் அமைவதற்கும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்
முக்கியமாக புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடற்கரைகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மொத்தம் 16,000 காவல் அதிகாரிகள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

33 மேம்பாலங்கள் மூடல்
மது அருந்திவிட்டு வாகன ஓட்டுவதை தடுக்கவும், இருசக்கர வாகனங்களில் பந்தயங்களில் ஈடுபடுபவர்களை தடுக்கவும், அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனம் ஓட்டுபவர்களை தடுக்கவும் 368 இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்பை கருதி 33 மேம்பாலங்கள் தற்காலிக தடுப்புகள் மூலம் மூடப்பட்டது. மேலும் முக்கிய இடங்களில் தற்காலிகமாக 78 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டு, தேவைப்படும் இடங்களில் விரைந்து மருத்துவ உதவி அளிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

932 வாகனங்கள் பறிமுதல்
13,036 வாகனங்களை சோதனை செய்து, விதிமீறல்களில் ஈடுபட்ட 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 25ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடத்திய வாகன சோதனையில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து மொத்தம் 694 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விபத்தில்லா புத்தாண்டு
காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரில் பொது மக்கள் புத்தாண்டை சிறப்பாகவும், மற்றவர்களுக்கு சிரமமின்றியும், எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல், விபத்தில்லா புத்தாண்டாக மகிழ்ச்சியுடன் கொண்டாட காவல் துறையினர், தமிழக அரசின் உத்தரவின் பேரில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விரிவாக அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ததின் காரணமாக, சென்னையில் எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் புத்தாண்டை, பொதுமக்கள் அமைதியாகவும் சிறப்பாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர். காவல் துறையினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications