Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

99 வயதில் வாழ்த்த வந்த மாமா! "ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்க" என்றார்: நெகிழும் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்டா சுற்றுப்பயணத்தின் போது திருவாரூரில் தன்னை வரவேற்க தனது 99 வயது மாமா நேரில் வந்தது தன்னை திடுக்கிட வைத்ததாக கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இவ்வளவு கடுமையா அலையுறீங்களே.. உடம்பைப் பார்த்துக்கோங்க என தன்னிடம் பொதுமக்கள் நெகிழ்வோடு கூறியதை ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

படிக்க படிக்க சுவாரஸ்யமாக செல்லும் அந்த கடிதத்தின் விவரம் வருமாறு;

 திருச்சி பயணம்

திருச்சி பயணம்

மே 30-ஆம் தேதி திருச்சிக்குப் பயணித்தேன். திருச்சியில் கழகத்தினரின் வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தாலும், மக்கள்நலன் அதைவிட மனதில் மிகுதியாக மேலோங்கி இருந்தது. பாதாளச் சாக்கடைத் திட்டம், சாலை விரிவாக்கத் திட்டம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திருச்சி மாநகரப் பகுதிக்குள் வாகனப் போக்குவரத்து சீராக இல்லை என்பதை நேரில் அறிந்து, உடனடியாக மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆய்வு நடத்தி, பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் நலன்பெற ஆவன செய்ய அறிவுறுத்திவிட்டுப் புறப்பட்டேன்.

மதிய உணவு

மதிய உணவு

மதிய உணவு நேரம் என்றாலும் கழக உணர்வே உள்ளத்தில் மிகுந்திருந்தது. அதுவும் திருச்சி என்றாலே கழகத்திற்குத் திருப்புமுனைகளை உருவாக்கிய மலைக்கோட்டை மாநகராயிற்றே! எத்தனை எத்தனை தீரர்கள்! அந்த வரிசையில் கழகத்தின் மூத்த முன்னோடியும் சிந்தனையாளருமான திருச்சி செல்வேந்திரன் அவர்களின் நினைவு வந்தது. முதன்மை செயலாளரான அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் சொல்லி, செல்வேந்திரன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடல்நலனை விசாரித்தேன். அப்போது அவருக்குத்தான் எத்தனை மகிழ்ச்சி!

வேளாங்கண்ணி பயணம்

வேளாங்கண்ணி பயணம்

அந்த மனநிறைவுடன் அரசு விடுதிக்கு வந்து மதிய உணவை முடித்துவிட்டு, 4 மணியளவில் திருச்சியிலிருந்து வேளாங்கண்ணிக்குப் புறப்பட்டேன். 3 மணிநேரத்தில் பயணம் செய்யக்கூடிய தொலைவுதான் என்றாலும், வழியெங்கும் கழகத்தினரிடமும் பொதுமக்களிடமும் காவிரி போல பொங்கிய பேரன்பினால் இரவு 9.30 மணிக்கு மேல்தான் வேளாங்கண்ணியை அடைய முடிந்தது.

தஞ்சையில் வரவேற்பு

தஞ்சையில் வரவேற்பு

பயண வழியில் முதலில் தஞ்சாவூரில் வரவேற்பு அளித்தனர். அப்போது, வா.வீரசேகரன் என்ற கழகத் தோழர் என்னிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்தார். அது என்னவென்று பார்த்தபோதுதான், அது வெறும் காகிதமல்ல, அரிய ஆவணம் என்பது தெரிந்தது. அது என்னவென்றால், திருவாரூர் கமலாம்பிகா நகரக் கூட்டுறவுச் சங்கத்தில் நமது தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தந்தையும் எனது தாத்தாவுமான முத்துவேலர் அவர்கள் தனக்கிருந்த பங்குகளை, தன் வயதுமூப்பின் காரணமாக, நம் தலைவருக்கு மாற்றித் தரக்கோரிய ஆவணம் அது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஓராண்டுக்கு முன்பாக 1946-இல், கூட்டுறவு வங்கியின் ஆவணத்தில் தாத்தா முத்துவேலரின் கையெழுத்தையும் தலைவர் அவர்களின் ஆங்கில எழுத்துகளில் அமைந்த கையெழுத்தையும் பார்த்தபோது பரவசமாக இருந்தது.

ஒரு டப்பா சாக்லேட்கள்

ஒரு டப்பா சாக்லேட்கள்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் பீமனோடை வடிகாலைத் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டேன். "இவ்வளவு கடுமையா அலையுறீங்களே.. உடம்பைப் பார்த்துக்கோங்க" என்று நெகிழ்வோடும் நெஞ்சம் நிறைந்த அக்கறையோடும் சொன்னவர்கள் உண்டு. குழந்தைகளும் அதிகளவில் வந்திருந்தனர். அவர்களுக்குக் கொடுப்பதற்காகவே என் காரில் ஒரு டப்பா சாக்லேட்டுகளை வைத்திருந்தேன். அவற்றைக் குழந்தைகளிடம் கொடுத்து அவர்களைப் போலவே நானும் மகிழ்ந்தேன்.

மன்னார்குடியில் வரவேற்பு

மன்னார்குடியில் வரவேற்பு

இரவு 7 மணி மன்னார்குடி வந்தபோது, தலைவர் கலைஞரின் நினைவுகளுடன் தஞ்சை மாவட்டக் கழகத் தளகர்த்தராக விளங்கிய மன்னை அவர்களும் நினைவில் நிழலாடினார். மன்னை அவர்களின் வீட்டுக்குச் சென்று, கொள்கைப் பற்றுடன் திகழும் அவர்களின் குடும்பத்தாருடன் தேநீர் குடித்துவிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தேன். வேளாங்கண்ணி சென்றடையும் வரையில், குறைந்தபட்சம் 50ஆயிரம் பேரையாவது பார்த்திருப்பேன். வரவேற்பு அளித்த நிர்வாகிகள், வாழ்த்து முழக்கம் எழுப்பிய தொண்டர்கள், வீட்டிலிருந்து வேகமாக வெளியே வந்து அன்பைப் பொழிந்த பொதுமக்கள் என எத்தனை ஆர்வம்! எவ்வளவு ஆர்ப்பரிப்பு! இந்த ஆட்சி மீதுதான் எத்தகைய நம்பிக்கை! அவர்களின் முகத்தில் வெளிப்பட்ட புன்னகையே அத்தனைக்கும் விடையாக இருந்தது.

காலை 8 மணி

காலை 8 மணி

அடுத்த நாள் (மே 31) காலையில் 8 மணிக்கெல்லாம் நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகளையும், வேளாண் பணிகளையும் பார்வையிடப் புறப்பட்டோம். அருகிலுள்ள மயிலாடுதுறை மாவட்டத்திற்குச் சென்றபோது, எல்லையிலேயே நல்ல வரவேற்பு. மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ரஷ்யா சென்று மருத்துவம் படித்துச் சாதித்துள்ள விஜயலட்சுமியையும்; கணவரை இழந்த நிலையில் மனந்தளராமல் மீன்களைச் சுத்தம் செய்து தன் மகளை மருத்துவராக்கிய அவரது தாயார் ரமணி அவர்களையும் நேரில் சந்தித்து எனது பாராட்டுகளைத் தெரிவித்து மகிழ்ந்தேன்.

சிறுவயது நினைவு

சிறுவயது நினைவு


அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்குப் பயணம். நல்லாடை, பேரளம் ஆகிய இடங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்டேன். பேரளம் ரயில்வே கிராஸிங்கைக் கடக்கும்போது என் சிறு வயது நினைவுகள் வட்டமிட்டன. பள்ளிக்கூட நாட்களில் அம்மாவின் ஊருக்கு வரும்போது, பூந்தோட்டம் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கித்தான் மாட்டு வண்டியில் செல்வோம். தாய் பிறந்த மண்ணுக்கு வரும்போது என் தாயார் தயாளு அம்மாள் மனதில் எழும் மகிழ்ச்சியும் உறவினர்கள் காட்டும் அன்பும் நெஞ்சை விட்டு அகலாதவை.

99 வயது மாமா

99 வயது மாமா

பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவுகள் எப்படி நெஞ்சை விட்டு நீங்காதோ அதுபோலவே சிறுவயது நினைவுகளும் அகலாது அலைமோதின. அவற்றை மீட்டெடுப்பதுபோல என்னுடைய மாமா தெட்சிணாமூர்த்தி அவர்கள் 99 வயதிலும் ஆர்வத்துடன் வந்து வரவேற்றார். நான் திடுக்கிட்டு, "நீங்க ஏன் இந்த வயதில் சிரமப்படுறீங்க? நானே வீட்டுக்கு வந்திருப்பேனே!" என்றேன். கழகப்பற்று மிகக் கொண்டவரான மாமா, "உன்னைப் பார்த்து வாழ்த்து சொல்லணும்னுதான் வந்தேன். ரொம்ப நல்லா நிர்வாகம் பண்ணிக்கிட்டிருக்க நீ" என்றபோது நெகிழ்ந்து விட்டேன்.

அப்பா போல்

அப்பா போல்

திருவாரூரை நெருங்க நெருங்க வரவேற்பும் அதிகமானது. "அப்பா போலவே நீங்களும் மக்களைப் பார்த்ததும் காரை நிறுத்தி, நலம் விசாரிக்கிறீங்க" என்று மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள வீட்டிற்குச் சென்று சாப்பிட்ட பிறகு, உடனடியாக அருகிலுள்ள காட்டூரில் நம் தலைவரின் தாயாரும் என் பாட்டியுமான அஞ்சுகம் அம்மையார் நினைவிடம் சென்று மரியாதை செலுத்தினேன். அந்த நினைவிடத்தின் அருகிலேயே நம் உயிர்நிகர் தலைவருக்கான அருங்காட்சியகம் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. அந்த அருங்காட்சியகத்தையும், அதன் பின்பகுதியில் அமைக்கப்படும் பெரிய அரங்கத்தையும் நேரில் விளக்கினார் எ.வ.வேலு.

 மனுக்களுடன் மக்கள்

மனுக்களுடன் மக்கள்

திருவாரூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்தபோது அங்கும் மக்கள் மனுக்களுடன் காத்திருந்தனர். நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் நம்பிக்கையுடன் வந்திருந்தனர். முதலமைச்சரிடம் மனு கொடுத்தால் கவனிக்கப்படும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற மக்களின் எண்ணத்தின் வெளிப்பாடுதான் இது. அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றுகிற வகையில்தான், காவிரிப் படுகை மாவட்டங்களில் ஆய்வுப் பணியை முடித்துத் திரும்பிய வேகத்தில், அடுத்த நாளே தலைமைச் செயலகத்தில் துறை வாரியான இருநாள் ஆய்வுப் பணிகள் வேகம் பெற்றன.

நான் டெல்டா காரன்

நான் டெல்டா காரன்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக 'யாதும் ஊரே' என்ற பொறுப்புணர்வுடன் அனைத்து ஊர்களின் முன்னேற்றத்திற்கும் பாடுபட்டாலும், காவிரி டெல்டாவுக்கு வரும்போது தாய்மடியைத் தேடி வந்து தவழ்கின்ற குழந்தை உணர்வு ஏற்படுகிறது. அதிலும் திருவாரூர் என்கிறபோது தலைவர் கலைஞரின் காலடிச் சுவடுகளைக் காண்பது போன்ற உணர்வில் மெய்சிலிர்ப்பது வழக்கமாக இருக்கிறது. காவிரியும் அதன் கிளை ஆறுகளும் பாயும் இடங்களுக்குச் செல்லும்போது அதுபோன்ற உணர்வுதான் எனக்கும். என்ன இருந்தாலும் அடிப்படையில் நான் டெல்டாகாரனாயிற்றே!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+