• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'திராவிட இயக்க பல்கலை. கழகம்'...'கோவை தென்றல்' மு. ராமநாதன் காலமானார்!

|

சென்னை: திமுகவின் முன்னாள் எம்.பியும் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான கோவை தென்றல் என்றழைக்கப்படும் மு. ராமநாதன் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுகவின் நிகழ்ச்சிகள் 3 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கோவை சென்று ராமநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

திராவிடர் இயக்கத்தின் முதுபெரும் சொற்பொழிவாளர்களில் ஒருவர் கோவை மு. ராமநாதன். பொதுக்கூட்ட மேடைகளையே திராவிடர் இயக்க வகுப்பறைகளாக மாற்றியவர்.

பகுத்தறிவு சிந்தனைகளை மேடைப் பேச்சுகளில் பரப்பினார். பக்தி இலக்கியங்களை பாசுரங்களை அப்படியே மேடைகளில் ஒப்புவித்து அதற்குரிய விளக்கத்தை மு. ராமநாதன் அளிக்கும் போது அது 'திராவிடத்தின் தென்றலாக' உணரப்பட்டது. அதனால்தான் அவருக்கு கோவை தென்றல் என்கிற அடைமொழியும் கிடைத்தது.

DMK Ex MP Kovai Ramanathan Passes away

அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று மு. ராமநாதன் காலமானார். அவரது மறைவுக்கு திராவிடர் இயக்கத்தினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் திமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்; திமுக நிகழ்ச்சிகள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை ராமநாதன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கழக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான "கோவைத் தென்றல்" திரு மு. இராமநாதன் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தி கேட்டு துடி துடித்துப் போனேன்.

துயரம் என்ற மகாசமுத்திரத்தில் திசை காண முடியாமல் மூழ்கியிருக்கிறேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

DMK Ex MP Kovai Ramanathan Passes away

திராவிட இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான திரு மு.ராமநாதன் அவர்கள் 70 ஆண்டு காலம் கழகத்திற்காக உழைத்தவர். கோவை மாநகர செயலாளராகவும், தணிக்கைக்குழு உறுப்பினராகவும், சட்டத்திட்ட திருத்தக்குழு உறுப்பினராகவும், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினராகவும் கழகப் பணியாற்றியவர். கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் மக்களுக்கு அரும் பணியாற்றியவர். கழக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கோவைக்குக் கொண்டு வரக் காரணமாக இருந்தவர்.

வெயிலில் அலைய முடியாது.. போலி நபரை வைத்து பிரச்சாரம் செய்யும் கவுதம் கம்பீர்.. கடும் விமர்சனம்!

கழகப் பணியாற்றுவதில் அவருக்கு நிகர் அவரே என்ற அளவில் பம்பரமாகச் சுழன்று பாசத்துடன் பக்குவமாகத் தொண்டர்களை ஆதரித்து அரவணைத்துச் சென்றவர். கழகம் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் தொட்டு மிசா சிறைவாசம் என அனைத்துப் போராட்டங்களிலும் கலந்து கொண்டு, மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை என்று, சிறை ஏகியவர்.

பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோர் மீது அளவுகடந்த பற்றும் பாசமும் வைத்திருந்தவர் அவர். அவர்களின் மனமுவந்த பாராட்டுகளைப் பெற்றவர் அவர். இந்த இயக்கத்தின் என்றும் தளர்ச்சியடையாத உயிரோட்டம் மிக்க ரத்த நாளமாகத் திகழ்ந்து- எண்ணற்ற கொள்கை வீரர்களையும்- இலட்சிய வேங்கைகளையும் கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அசையாச் சொத்துக்களாக உருவாக்கியவர். 1992ல் கழகத்தின் சார்பில் "அண்ணா விருது" வழங்கி பெருமை சேர்க்கப்பட்டது.

நான் கோவை வரும் போதெல்லாம் இன்முகத்துடன் வரவேற்கும் அவரை அண்மைக் கால கழக நிகழ்ச்சிகளில் நேரில் காண முடியாமல் தவித்திருக்கிறேன். ஆனால் கோவை செல்லும் சமயங்களில் எல்லாம் நேரில் சென்று உடல் நலம் விசாரிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். சமீபத்தில் கோவை சென்ற நேரத்தில் நான் அவரது இல்லத்திற்கே சென்று அவரது இன்முக வரவேற்பைப் பெற்றேன். அவர் உடல் நலம் விசாரித்த போது, தன் உடல்நலம் குன்றியிருந்தது பற்றி சிறிதும் கவலைப்படாமல் என் மீது அவர் கோடை மழை போல் பாசத்தைப் பொழிந்தார். அந்தப் பாசமழையின் ஈரம் காய்வதற்குள் இன்று அவரைப் பறிகொடுத்து, பரிதவித்து நிற்கிறேன்.

திராவிட இயக்கத்தின் பயிற்சிப் பாசறைகளில் அவர் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் திராவிட இயக்கத்தின் இலட்சியங்கள் பற்றி உணர்ச்சி பொங்க உரையாற்றும் ஆற்றல் படைத்தவர். "திராவிட இயக்கத்தின் வாரியார்" என்று போற்றும் அளவுக்கு, கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழியும் சொல்லேருழவர் அவர்.

இயக்கத்தின் அத்தனை அசைவுகளையும் விரல் நுனியில் வைத்துக் கொண்டு தன் மேடைப் பேச்சுக்களில் மடைதிறந்த வெள்ளமென அள்ளித் தெளிக்கும் அவருடைய ஆற்றல் மிகு உரைகளை கழகப் பொதுக்கூட்டங்களிலும், கழக மாநாடுகளிலும் கேட்டு அனைவரையும் போல நானும் வியந்து போயிருக்கிறேன்.

திராவிட இயக்கத்தின் பல்கலைக்கழகமாகத் திகழ்ந்த அவரது மறைவு அவரது உறவினர்களுக்கு மட்டுமல்ல- எனக்கும்- இந்த இயக்கத்தின் கோடானு கோடி தொண்டர்களுக்கும், கொங்கு மண்டல மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் கோவைக்கு விரைந்து சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட திமுக மூத்த தலைவர்கள் ராமநாதன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

 
 
 
English summary
DMK Ex MP and Senior Leader Kovai Ramanathan passed away on Friday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X