சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீபாவளி நாளில் சரவெடி வெடிக்க வேண்டாம் - தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும் இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும்

Google Oneindia Tamil News

சென்னை: அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

தீபாவளி பண்டிகை வருகிற 14ஆம் தேதி நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிப் பண்டிகை என்றாலே பட்டாசு வெடித்துக் கொண்டாடும் சூழலில் அண்மைக்காலமாக சுற்றுச்சூழல் நலன் கருதி பட்டாசு வெடிப்பதற்கு சில மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், அந்த தொழிலை நம்பி இருப்பவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

Do not explode saravedi on Deepavali day - Tamil Nadu Pollution Control Board announcement

இதனிடையே, நாடு முழுவதும் வருகிற 7ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கலாமா என்று கேட்டு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சுற்றுச்சூழல் நலன் கருதி தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளியன்று காலை 6 முதல் 7 வரையிலும், இரவு 7 முதல் 8 வரையிலும் பட்டாசுகள் வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த நிலையில் பட்டாசு வெடிப்பது தொடர்பாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

'தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். பட்டாசு வெடிப்பதால் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த பொது நல வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும் வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது

மேலும், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளிகளில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த 2018 மற்றும் 2019 ஆண்டு தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல்7 மணிவரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது
மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

அதன்படி மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தேசிய பசுமை படைகள், பசுமை மன்றங்கள் மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் ஆகிய துறைகளின் செயலாளர்கள், காவல்துறை இயக்குநர் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சுற்றுச்சூழல் துறை இயக்குநர், மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஒத்துழைப்போடு அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உச்சநீதிமன்ற ஆணையின்படி நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும் இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் கீழ்கண்டவற்றைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொது மக்கள் கடைபிடிக்க வேண்டியவை:

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசு படுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்த அந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்

அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்

குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் ஆகவே, பொதுமக்கள் சுற்றுச் சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

English summary
Avoid loud noises and continuous explosions. The Tamil Nadu Pollution Control Board has asked people to avoid exploding firecrackers in hospitals, places of worship and places of peace. The Tamil Nadu Pollution Control Board has asked the people to celebrate Deepavali by exploding in the appropriate places at the time allowed by the government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X