அண்ணே ‘அவர்’ பக்கம் போகாதீங்க.. ரத்தத்தின் ரத்தங்களுக்கு பறக்கும் போன்! கொஞ்சும் முக்கிய ‘தலைகள்’!
சென்னை : அதிமுக தொடர்பான விவகாரங்கள் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், ஓபிஎஸ் தரப்புக்கு தாவும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை தடுக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தங்கள் தரப்பு நிர்வாகிகள் பலரும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஓபிஎஸ் தரப்புக்கு செல்ல வேண்டாம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான தீர்ப்பை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் இருக்கும் என கூறப்படுகிறது.
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் இருதரப்புமே கடைசி கட்ட பரபரப்புகளுக்கிடையே நீதிமன்றம் செல்ல தயாராகி வருகின்றன. இதனிடையே சிலர் அணி மாறவும் தயாராகி வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி
அதிமுகவைப் பொறுத்தவரை தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு சற்றே பின்தங்கியுள்ள நிலையில், தீர்ப்பை பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சில நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தாவி வருகின்றனர். இது எடப்பாடி பழனிசாமி தரப்பு நிர்வாகிகளை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது. இதனால் அவர் தரப்பு நிர்வாகிகளிடம் கடுமை காட்டியுள்ளார்.

ஓபிஎஸ்
தற்போதைய சூழலில் தேனி, திண்டுக்கல், சேலம், திருச்சி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களில் கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீடு, மற்றும் பெரியகுளத்தில் உள்ள வீட்டில் நள்ளிரவு ஆனாலும் கதவை தட்டி சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு அவரது மகன்களான ஓபி ரவீந்திரநாத் குமார், ஜெயபிரதீப் உள்ளிட்டோர் பின்னணியில் இயங்கி வருவதோடு, ஓபிஎஸ்ஸின் பழைய ஆதரவாளர்கள், தற்போது வந்துள்ள நிர்வாகிகள் மேலும் நிர்வாகிகளை அழைத்து வருகின்றனர்.

பேச்சுவார்த்தை
இதற்காக ஒ.செ. அளவிலான நிர்வாகிகள் களத்தில் இறங்கி நிர்வாகிகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சிலர் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர் என கூறப்படுகிறது. இந்த தகவல் எடப்பாடி பழனிசாமி தரப்பை கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் தாவி வரும் நிலையில், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அது தங்கள் தரப்புக்கு எதிராக அமையும் என்பதை உணர்ந்தே இருக்கிறது.

சமாதான புறா
இதனையடுத்து கட்சி தாவும் நிர்வாகிகள் உள்ள மாவட்ட செயலாளர்களிடம் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் தங்கள் மாவட்டத்தில் அணி மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நேரடியாகப் பேசி வருகின்றனர். நீதிமன்ற வழக்கு முடிந்ததும் அதிமுக நேரடியாக தங்கள் கட்டுப்பாட்டில் வந்து விடும், எனவே அவசரப்பட்டு ஓபிஎஸ் தரப்புக்கு செல்ல வேண்டாம் என பேசி வருகின்றனர். எதுவாக இருந்தாலும் பேசி கொள்ளலாமென சமாதான புறாக்களையும் பறக்கவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications