அதிமுக தொண்டர்களை ஏமாற்றுகிறார் எடப்பாடி பழனிசாமி.. நேரடியாக அட்டாக் செய்த உதயநிதி ஸ்டாலின்!
சென்னை: அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியின் தொண்டர்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக தொண்டர்களை பார்த்தால் பாவமாக இருப்பதாக கூறிய உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியை பார்க்கும் போதெல்லாம் படிக்காமல் இறுதித்தேர்வு எழுதப் போகும் மாணவன் போல் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக இளைஞரணி சார்பாக அறிவுத் திருவிழா நிகழ்ச்சி 2 நாட்களாக நடைபெற்றது. ஏற்கனவே சட்டசபைத் தேர்தலில் இளைஞரணி நிர்வாகிகளுக்காக சுமார் 20 தொகுதிகளுக்கும் மேலாக ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப திமுக நிர்வாகிகளும் ஸ்டாலினுக்கு பின் உதயநிதி ஸ்டாலின் என்று முன்னிலைப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அறிவுத் திருவிழாவின் நிறைவாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், திமுக ஒன்றும் அதிமுக போல் பத்தோடு பதினொன்று இல்ல. இன்று திமுகவை அழிக்க வேண்டும் என்று புதிதாக சிலர் கிளம்பி வருகின்றனர். திமுக ஒரு சாதாரண கட்சியாக, அதிமுக போல் பத்தோடு பதினொன்றாக இருந்திருந்தால், அதனை யாரும் அழிக்க வேண்டும் என்று முயற்சி செய்ய மாட்டார்கள்.
நாம் கொள்கை கூட்டம் என்று தெரிந்ததால்தான், அவர்கள் நம்மை அழிக்க முயன்று வருகின்றனர். நாம் நடத்தி இருக்கும் விழாவுக்கு பெயர் அறிவுத் திருவிழா.. ஆனால் அதிமுக நடத்தி இருந்தால், அடிமை திருவிழா என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி இருக்கும். எடப்பாடி பழனிசாமியை சட்டசபையில் பார்க்கும் போதெல்லாம் 2 விஷயங்கள் நினைவுக்கு வரும்.. ஒன்று கால்.. மற்றொன்று கார்..
அதிமுக தொண்டர்களை பார்ப்பதற்கும் பாவமாக தான் உள்ளது. அதிமுக தொண்டர்களை அக்கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஏமாற்றி வருகிறார். சில நாட்களுக்கு முன் பிரம்மாண்டமான ஒரு கட்சி கூட்டணிக்கு வருகிறது என்று அடித்துவிட்டார்.. அண்மையில் கூட அவரின் பிரச்சாரக் கூட்டத்தில் மற்றொரு கட்சியின் கொடியை பார்த்து, பிள்ளையார் சுழி போட்டாச்சு என்றார்.
எடப்பாடி பழனிசாமியை பார்க்கும் போதெல்லாம் இறுதித்தேர்வு எழுதப் போகும் மாணவன், எதுவும் படிக்காமல் ஊர் சுற்றிவிட்டு தேர்வு நாளில் பள்ளிக்கு சென்று வினாத்தாளை பார்த்ததும் எதுவும் தெரியாமல் முழிப்பார் பார்த்துருக்கிறீர்களா.. இன்று எடப்பாடி பழனிசாமி அப்படிதான் இருக்கிறார். வினாத்தாளினை பார்த்துவிட்டு, எல்லாம் மேல் இருக்கிறவன் பார்த்துப்பான் என்று நினைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications