லட்சுமி மரணம்னு குபீர்னு வந்த ஆடியோ.. கோடம்பாக்கமே கலங்கிடுச்சு.. திருந்த மாட்டீங்களா வதந்தியர்களே?
சென்னை: பிரபல நடிகை லட்சுமி இறந்துவிட்டதாக செய்திகள் கசிந்த நிலையில், கோடம்பாக்கமே பதறிப்போய்விட்டது.. கடைசியில் அந்த வதந்திக்கு ஒரு முற்றுப்புள்ளியும் வைக்கப்பட்டுவிட்டது.
மணக்குள விநாயகர் கோவில், புதுச்சேரியிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு 6 வயதில் வந்த லட்சுமி என்ற பெண் யானை 32 வயதில் நேற்றைய தினம் திடீரென உயிரிழந்துவிட்டதால், பக்தர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
லட்சுமி என்ற பெண் யானைக்கு தந்தமும் இருந்ததால் விசேஷமான யானையாக பக்தர்களால் கருதப்பட்டது. சிறப்பு நாட்களில் காலில் கொலுசுடன் காணப்படும் இந்த லட்சுமி யானையை பார்ப்பதற்காகவே, சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் கோவிலுக்கு வருவார்கள்.
லட்சுமி.. லட்சுமி.. யானையை பிடித்துக்கொண்டு கதறி அழுத பாகன்.. கலங்கிய மக்கள்! இதுதான் உண்மையான அன்பு

பிரபல நடிகை
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த லட்சுமி யானை நேற்று காலை நடைபயிற்சியின் போது காமாட்சி கோவில் அருகே திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. தகவல் வேகமாக பரவியதும் பொதுமக்கள் அப்பகுதிகளில் கூடிவிட்டனர். பக்தர்கள் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்தினர். யானையைக் கண்டதும் சிலர் கதறி அழுதது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. புதுச்சேரி அரசு யானை உயிரிழந்தது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்றாலும், அந்த சோகத்தில் இருந்து மக்கள் வெளிவரவில்லை.

நடிகை லட்சுமி
இந்நிலையில், லட்சுமி யானை உயிரிழந்த அதேசமயம், வேறு ஒரு தகவல் புரளியாய் பரவிவிட்டது.. லட்சுமி யானைக்கு பதிலாக, நடிகை லட்சுமி உயிரிழந்துவிட்டதாக தீயாய் தகவல் கோடம்பாக்கத்தை சூழ்ந்து கொண்டது.. நடிகை லட்சுமி, இறந்துவிட்டதாக செய்திகள் பரவியதுமே, அனைவருக்குமே அதிர்ச்சியானார்கள். சீனியர் நடிகையான லட்சுமி, மிகவும் திறமைசாலியானவர்.. எம்ஜிஆர் சிவாஜி துவங்கி இப்போது வெப்சீரீஸ் வரை நடித்து கொண்டிருக்கிறார்.. நேற்றைய தினம் லட்சுமி இறந்துவிட்டதாக தகவல் பரவியதால், நடிகை லட்சுமி என்று பலரும் தவறாக நினைத்து கொண்டுவிட்டனர்.

நடிகை லட்சுமி
எனினும், சினிமா உலகை சேர்ந்தவர்களும், மீடியாவும், உடனடியாக லட்சுமியை தொடர்புகொண்டு விசாரித்துள்ளனர்.. எல்லாருக்கும் விளக்கம் தந்து கொண்டிருந்த லட்சுமி, பிறகு அனைவருக்கும் விளக்கம் அளித்து, அவரே ஒரு ஆடியோவையும் வெளியிட்டுவிட்டார்.. அந்த ஆடியோவில், "காலையில இருந்து எனக்கு எல்லாரும் போன் பண்ணிட்டு இருக்காங்க. இன்னிக்கு எனக்கு பிறந்த நாள் கூட இல்லியே.. அப்புறம் ஏன் இத்தனை பேர் கூப்பிடுறாங்னு விசாரிச்சா, 'நடிகை லட்சுமி இறந்துட்டதாக' ஒரு செய்தி போயிட்டிருக்காம். பொறந்தால் இறந்துதானே ஆகணும். இதுக்கெல்லாம் பயப்படப்போறதில்ல. கவலைப்படவும் போறதில்ல.

சந்தோஷம்
ஆனா, இவ்ளோ வேலை வெட்டி இல்லாதவங்க, இதை பரப்பிட்டு இருக்காங்களேனு நினைக்கறப்ப நாம திருந்தவே மாட்டோமான்னு நினைக்கத் தோணுது. இந்த செய்தி கேள்விப்பட்டதும் பல பேர் கவலைப்பட்டு அக்கறையா விசாரிக்கறது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் ரொம்ப ஆரோக்கியமா இருக்கேன். எனக்கு ஒரு கவலையும் இல்லை. கிறிஸ்துமஸ், புது வருஷத்துக்காக இப்ப ஷாப்பிங் வந்திருக்கேன். சந்தோஷமாகத்தான் இருக்கேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள், வணக்கங்கள்'' என்று அதில் பேசியதுடன், நிலவி வந்த வதந்திக்கும் முற்றுப்புள்ளி வைத்தார் லட்சுமி.