பிளாஷ் பேக் 2022: நிர்வி கல்ப சமாதி முதல் கைலாசாவில் வேலை வாய்ப்பு வரை நித்யானந்தாவின் அதிரடி
சென்னை: உலகத்தில் நிகழும் சில சம்பவங்கள் மறக்கமுடியாதவையாக இருக்கும். ஆண்டின் முடிவில் அவற்றை நினைத்து பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். 2022ஆம் ஆண்டு முடியப்போகிறது. 2023ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. கடந்த ஜனவரி முதல் டிசம்பர் வரை எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே ஊடகங்களின் வெளிச்சத்தில் அதிகம் சிக்கியிருப்பார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நித்யானந்தா. அவரது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட சில கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியது. நிர்வி கல்ப சமாதி என்று அறிவித்தது முதல் கைலாசாவில் வேலைக்கு ஆட்கள் தேவை என்பது வரை அவரது சுவாரஸ்யமான பதிவுகளை சற்றே திரும்பி பார்ப்போம்.
உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரமங்களை தொடங்கி பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தவர் நித்யானந்தா, திருவண்ணாமலையில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கியவர் உலகம் முழுவதும் தனது கிளையை பரப்பினார். நித்யானந்தாவின் பேச்சால் மயங்கி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆசிரமத்திலேயே தங்க தொடங்கினர். இதனால் பல இடங்களிலும் பாலியல் சர்ச்சைகளும் ஆரம்பித்தன.
மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு தமிழகத்தின் சைவ மடங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. நித்யானந்தாவின் இளைய மடாதிபதி பதவி பறிக்கப்பட்டது. ஆனாலும் "நான் வகித்து வரும் மதுரை ஆதீன இளைய மடாதிபதி பதவி சட்டபூர்வமாக பாதிக்கப்படவில்லை. எனவே நானே மதுரை ஆதீனம் இளைய மடாதிபதி என்று பகிரங்கமாக அறிவித்தார். உச்சத்தில் இருந்த நித்யானந்தா படு பாதாளத்தில் விழுந்தார். சிறை வரை சென்று பின்னர் ஜாமீனில் வெளி வந்தார். வழக்கம் போல ஆசிரம வாழ்க்கை சிஷ்யர்கள் என இருந்தாலும் தொடர் புகார் காரணமாக சில ஆண்டுகள் தலைமைறைவாக இருந்த நித்யானந்தா, திடீரென கைலாசா என்கிற நாட்டை உருவாக்கியுள்ளதாக கூறினார். இந்த நாட்டிற்கு செல்ல இளைஞர்கள் ஆர்வம் காட்டினர். அப்படி பட்ட இடம் எந்த இடத்தில் உள்ளது என்பது கூட தெரியாமல் ரகசியம் காத்தார். அந்த இடத்தில் இருந்து தினமும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
அடேங்கப்பா.. சப்தம் இல்லாமல் 8 சாதனைகளை புரிந்து ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்ற நித்யானந்தா!

மதுரை டூ கைலாசா
2022ஆம் ஆண்டு நித்யானந்தாவிற்கு ஆரம்பம் எல்லாம் அமர்களமாகத்தான் இருந்தது. அவரது அடுத்தடுத்த முகநூல் பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகக்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்தில் நடைபெற்றது. சித்திரை திருவிழாவை நேரலையில் கண்டு ரசித்தார் நித்யானந்தா. சுவாமி அம்மன் சியாமளா பீடம் ஆசிரமம் சார்பில் அம்மனுக்கும், சுவாமிக்கும் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பட்டாடைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து நித்யானந்தா நேரலை வாயிலாக மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரரை தரிசித்தார். அதன் பிறகு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்கினார் நித்யானந்தா.

நித்யானந்தாவிற்கு என்ன ஆச்சு
நித்யானந்தா உடல் நிலை பற்றி ஏப்ரல் மாத இறுதியில் பலவித தகவல்கள் பரவின. அதற்கு அவரது சிஷ்யர்கள் விளக்கம் கொடுத்து பதிவிட்டனர். கடந்த மார்ச் மாதம் பரமசிவோஹம் 3 என்கிற 21 நாள் ஆன்மிக வகுப்பு நடைபெற்றபோதும்கூட சில வதந்திகளை ஊடகங்கள் பரப்பி விட்டார்கள். பரமசிவோஹம் 3 வகுப்பானது மார்ச் மாதம் நடந்ததைத் தொடர்ந்து அதே போன்ற 21 நாள் வகுப்பு அடுத்த மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு இடையில்தான் சாமி சமாதி நிலைக்குச் சென்றுவிட்டார். ஆக சாமி சமாதி நிலைக்குச் சென்றால் இப்பொழுது பேச மாட்டார் என்று தெரிந்துகொண்டு தேவையில்லாத வதந்தியை அவர்கள் இஷ்டத்திற்குப் பரப்பி வருகின்றனர் என்று முகநூலில் பதிவிட்டனர்.

கடிதம் வெளியிட்ட நித்யானந்தா
ஏப்ரல் மே மாதத்தில் நித்யானந்தா பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு நித்யானந்தா இறந்து விட்டதாக தகவல் பரவியது. இதனை மறுத்த நித்யானந்தா தான் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தன்னை 27 பேர் கொண்ட மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

உறக்கமில்லா நிலை
தனது அடுத்த பதிவில் எனக்கு புற்று நோய் அல்லது கட்டி எதுவும் இல்லை, இதய பிரச்சினை எதுவும் இல்லை. கொழுப்பு, கல்லீரல் பிரச்சினை, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் என எந்த பிரச்சினையும் இல்லை என கூறியுள்ளார். சிறுநீரகங்கள், நுரையீரல், குடல் சரியாக செயல்படுகிறது. கொரோனா உள்பட வைரஸ் தொடர்பான எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்வதாக அந்த கடிதத்தில் தெரிவித்தார். இருந்த போதும் என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளதாகவும், இதே போல எனக்கு உறக்கமும் இல்லாமல் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

நிர்வி கல்ப சமாதி
உடலில் எந்த அசைவுகளும் இல்லை..நித்ய சிவ பூஜைக்கு மாறாக நிர்விகல்ப சாமாதியில் இருப்பதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் நித்யானந்தா. மனது உலகை மறந்து விட்டதாகவும், 6 மாதமாக உணவும், உறக்கம் இல்லாமல் இருப்பது நிர்வி கல்ப சமாதியில் இருப்பது தனக்கு பழக்கமான ஒன்று எனவும் கூறினார் நித்யானந்தா. எனவே தனக்கு அனைத்து கிரகங்களும் சாதகமான நிலையில் இருப்பதால் உடல்நிலை பற்றி தனது கவலைப்பட தேவையில்லையென பதிவிட்டிருந்தார். 24 மணி நேரமும் எனது மூளை விழித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஆறுமாதங்களுக்கும் மேலாக என் உடல் சமாதி நிலையில் இருப்பது வழக்கம். எனது கிரகங்களும் எனக்குச் சாதகமான நிலையில் இருப்பதால், எனக்கு இப்போது மரணமோ, சமாதியோ இல்லை. எனது வாழ்வில் நான் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்து முடித்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. உங்களைப் போலவே நானும் பரமசிவன் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று எழுதியிருந்தார்.

மகிழ்ச்சியான சமாதி நிலை
ஜூன் மாதம் வெளியிட்ட பதிவில் பரமசிவனின் ஆசிகள். அன்புள்ள பக்தர்கள் மற்றும் அன்பான சீடர்கள், கைலாசாவாசிகள் நான் தற்போது வரை ஆழ்ந்த சமாதி நிலையை மகிழ்ச்சியாக அனுபவித்து கொண்டிருக்கிறேன். மேலும் உங்கள் அனைவரையும் உள் இடத்தில் இணைக்கிறேன். மிக விரைவில் உடலில் குடியேறி வழக்கமான சத்சங்கங்கங்களை மேற்கொள்வேன். மேலும், உயர்ந்த கொள்கைகள் மற்றும் மகா கைலாசாவின் அசாதரணமான ஆற்றலைப் பகிர்ந்து கொள்வேன் என்று கூறியிருந்தார்.

குரு பூர்ணிமாவில் மீண்டு வந்தார்
அழியாத ஒன்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டாலே பரமசிவன் நமக்குள் வந்துவிடுவார். அந்த பக்தியில் கரையும் நிலைதான் சமாதி நிலை. ஜூலை மாதம் குருபூர்ணிமா அன்று பக்தர்களிடம் தோன்றி ஆசி வழங்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். ஜூலை 14ஆம் தேதியன்று நேரலையில் தோன்றிய நித்யானந்தா, இன்று முதல் தனது 42-வது சாதுர்மாசியத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார். வழக்கம் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் உற்சாகமாக உரையாற்றிய அவர், அழியாத ஒன்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டாலே பரமசிவன் நமக்குள் வந்துவிடுவார். அந்த பக்தியில் கரையும் நிலைதான் சமாதி நிலை. கடந்த மூன்று மாதகாலம் எனக்கு ஒரு யுகமாகக் கழிந்தது. தற்போது எனது உடல், மூளை என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். சொன்னபடி நேரில் வந்து பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினார் நித்யானந்தா.

திருச்சி சூர்யா சிவாவிற்கு விருது
பாஜக ஓபிசி பிரிவின் மாநிலச் செயலாளர் திருச்சி சூர்யா கைலாசா தர்மரட்சகர் விருதை நித்தியானந்தா வழங்கி இருந்தார். காணொலி மூலம் நடந்த விழாவில் திருச்சி சூர்யா, அந்த கைலாசா தர்மரட்சகர் விருதைப் பெற்றார். இந்த விருதுக்கான தகுதியைப் பார்த்தால் பார்த்தால், திருச்சி சூர்யா சிவா இளைஞர்களால் சமூக வலைதளங்களில் அதிகம் கொண்டாடப்படக் கூடியவர் என்பதாலும் இந்துமதத்திற்கு ஆதரவாக அவரது செயல்பாடுகள் இருப்பதாலும் அவரை விருதுக்கு தேர்வு செய்ததாக நித்தியானந்தா ஆசிரமம் காரணம் கூறியது.

இயக்குநர் பேரரசுவிற்கு விருது
அக்டோபர் மாதத்தில் பிரபல திரைப்பட இயக்குநரான பேரரசுவை பாராட்டி கைலாச தர்ம ரட்சகா விருதை வழங்கினார் நித்யானந்தா. இந்து மதத்தைக் காக்கத் தொடர்ச்சியாகப் பேரரசு காட்டும் ஆர்வம் மற்றும் நடவடிக்கைகளைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக கூறப்பட்டது. பேரரசின் இந்து மத பற்றை தான் பார்த்து உள்ளதாகத் தெரிவித்துள்ள நித்தியானந்தா, உங்கள் படத்தின் அனைத்து தலைப்புகளும் ஆன்மீக தலங்களாகவே இருக்கும் என்றும் உங்கள் இந்து மத பணிக்காகத் தலை வணங்குகிறேன் என்றும் தெரிவித்தார். பேரரசுக்கு என்றும் தானும் கைலாசமும் உறுதுணையாக இருக்கும் என்றும் நித்தியானந்தா தெரிவித்தார்.

கைலாச நாட்டில் வேலைவாய்ப்பு
நவம்பர் மாதம் முகநூல் பக்கத்தில் வெளியான அதிரடி அறிவிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர். உலகம் முழுவதும் உள்ள தனது ஆசிரமங்களில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை நித்தியானந்தா அறிவிப்பு வெளியிட்டார். எலட்ரானிக் , பிளம்மிங் பணிகளுக்கும், தூதரக பணிகளுக்கும் ஆட்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது. பணியில் சேருவோருக்கு ஊதியத்துடன் பயிற்சி கொடுக்கப்பட்டு பல்வேறு ஆசிரமங்களில் பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

கார்த்திகை தீப லைவ்
திருவண்ணாமலையையும் நித்யானந்தாவையும் எப்போதுமே பிரிக்க முடியாது. திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருநாள் 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. கைலாசாவில் இருந்தே தீப திருவிழாவை லைவ் ஆக பார்த்தார் நித்யானந்தா. அவரது தியான பீடம் சார்பில் பலருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கைலாசாவில் இருந்தே பக்தர்களுக்கு ஆசியும் வழங்கினார் நித்யானந்தா. இந்த ஆண்டும் கைலாசா என்ற மர்ம தேசத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.