“தமிழ்நாடு, திராவிட மாடல்” வார்த்தைகளை படிக்காத ஆளுநர்.. ஆர்எஸ்எஸ் வழி என காங்கிரஸ் பரபர புகார்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கி இருக்கும் நிலையில், ஆளுநர் ரவி தமிழ்நாடு, திராவிட மாடல் போன்ற வார்த்தைகளை புறக்கணித்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் செல்வபெருந்தகை பரபரப்பு குற்றம்சாட்டி இருக்கிறார்.
சென்னை ஜார்ஜ் கோட்டையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி இருக்கிறது. இதில் ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள், திட்டங்கள், வளர்ச்சி குறித்து உரையாற்றினார்.
தமிழ்நாட்டை "தமிழகம்" என்று உச்சரிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பாக என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதற்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று திமுக கூட்டணி கட்சிகள் சட்டப்பேரவையில் அவருக்கு எதிராக முழக்கமிட்டு ஆளுநர் உரையை புறக்கணித்தனர்.

உரையை மாற்றிய ஆளுநர்
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் திமுக கூட்டணி கட்சியினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில் ஆளுநரை ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்த உரையை மாற்றி பேசியதாக கண்டித்து இருக்கிறார்.

வார்த்தைகளை நீக்கிய ரவி
அதில் "ஆளுநர் உரையில் தமிழகத்தின் மாண்பு, தமிழகத்தின் மரபுகள் எல்லாம் தமிழக அரசு எழுதிக் கொடுக்கின்ற உரையை படிக்க வேண்டும். ஆனால், ஆளுநர் உள்ளே என்ன செய்கிறார்? எல்லாவற்றையும் விட்டுவிட்டு படிக்கிறார். எதற்காக விட்டுவிட்டு படிக்கிறார்? தமிழ்நாடு என்று வரும்போது தமிழ்நாடு என்று சொல்ல மறுக்கிறார்.

திராவிட மாடல், தமிழ்நாடு வார்த்தைகள் இல்லை.
திராவிட மாடல் என்று வரும் இடத்தில் திராவிட மாடல் என்று சொல்லாமல் இருக்கிறார். விட்டுவிட்டு படிக்கிறார். இதுதான் ஆளுநரின் போக்கு. ஆளுநரின் சர்வாதிகாரம். ஆளுநரின் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம். தொடர்ந்து ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக செயல்படுகிறார். அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். இது தவறு.

மோசமாக ஆளுநர்
தொடர்ந்து அவருடைய போக்கு பாதை எல்லாம் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராக உள்ளது. இந்திய ஆளுநர் வரலாற்றில், தமிழ்நாடு ஆளுநர் வரலாற்றில் இதுவரை இவ்வளவு மோசமான அரசியலமைப்புக்கு எதிராக செயல்படும் ஆளுநரை இதுவரை பார்த்தது இல்லை. இதுவே முதல்முறையாக பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரை என்பது இந்த வருடம் தமிழ்நாட்டுக்கு தேவையான நலத்திட்டங்களை தேர்வு செய்து அரசு ஆளுநரை படிக்க சொல்கிறது.

இஷ்டத்துக்கு படிக்கிறார்
அதை விடுத்து இவர் முதலமைச்சர், அரசு போன்றும் அரசு எழுதிக்கொடுக்கும் கருத்தை படிக்காமல் தன்னுடைய இஷ்டத்துக்கு படிக்கிறார். இவர் அரசியலமைப்பு சட்டத்தை மதிக்காமல் செயல்படுகிறார் என்பதை பல முறை சொல்லி இருக்கிறோம். சட்டப்பேரவையில் இந்த மாண்பை காட்டாமல் இதை நடைமுறைப்படுத்தி இருக்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதை மக்களிடம் எடுத்துச் சென்று போராட்டமாக நடத்த இருக்கிறோம்." என்றார்.

முதலமைச்சர் கண்டனம்
அதேபோல் தமிழ்நாடு என்று சொல்லாமல் திஸ் கவர்மெண்ட் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி படித்ததாகவும், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற வார்த்தைகளையும் ஆளுநர் வாசிக்கவில்லை என்று தெரிவித்து உள்ளார். அரசு தயாரித்த உரையை ஆளுநர் ரவி படிக்காதது தவறு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையிலேயே தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications