விபத்துக்களை குறைக்க ஐடியா வைத்திருக்கிறோம்! அமைச்சர் எ.வ.வேலு சூப்பர் தகவல்!
சென்னை: தமிழகத்தில் விபத்துக்களை குறைக்க மாவட்டம்தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.
அதன் விவரம் வருமாறு;
லிப்ட் அறுந்து விழுந்து பள்ளி மாணவன் பலி.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகள் தலைமறைவு!

எ.வ.வேலு ஆய்வு
கும்பகோணம் புறவழிச் சாலை விரிவாக்கப் பணிகளை ஆய்வு செய்த தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு சாலை ஓரத்தில் மரக்கன்று நட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 2,716 கிலோமீட்டர் சாலை விரிவாக்கப் பணிகள்,தரம் உயர்த்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருவதாகவும் தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் கும்பகோணம் பட்டுக்கோட்டை திருவையாறு பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சாலைப் பணிகள்
மேலும் விக்கிரவாண்டி தஞ்சாவூர் நான்கு வழிச்சாலை பணிகள் தாமதமாக நடப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்த பணி மத்திய அரசு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் தெரிவித்திருப்பதாகவும் ஒப்பந்ததாரர்களை அழைத்து பேசிய போது கடந்த ஆட்சியில் தண்ணீர் கிராவல் ஜல்லி போன்ற பொருட்கள் வழங்கப்படாமல் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை என்றும் தற்போது வேண்டியதை வழங்கி வருவதாகவும் கூறினார்.

அரசு ஒத்துழைப்பு
தமிழகத்தில் சாலை பணிகளுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்திருக்கிறார் என்றும் இந்த சாலை பணி விரைவில் முடிக்கப்படும் என்றும் கூறினார். மேலும், தஞ்சை -கும்பகோணம்- மயிலாடுதுறை சாலை மிக மோசமாக பழுதடைந்து உள்ளதே என்ற கேள்விக்கு 65 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தேசிய நெடுஞ்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அனுமதி கிடைத்ததும் பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

விபத்து குறைப்பு
சென்னை- கன்னியாகுமரி சாலை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் திருவாரூர் மயிலாடுதுறை 145 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தஞ்சை மன்னார்குடி 16 கிலோ மீட்டருக்கு 116 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 44 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். தமிழகத்தில் சாலை விபத்துக்கள் அதிகரிப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு சாலைகள் பழுது பார்த்து நன்றாக இருக்கிறது வண்டியின் வேகம் அதிகமாக இருப்பதால் இயற்கையாகவே சாலை விபத்துக்கள் நடப்பதாகவும் இதனை குறைப்பதற்கு மாவட்டம் தோறும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தி விபத்துகளை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவித்தார்.